

சென்னை: திருச்சி கிழக்கு, விராலிமலை, கரூர், அம்பாசமுத்திரம், பெருந்துறை ஆகிய 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தலை அறிவிக்க விதிக்கப்பட்ட தடையை செப்.28-ம் தேதி வரை நீட்டித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்டு விஜய் வெற்றி பெற்றார். பின்னர் திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ பதவியை அவர் ராஜினாமா செய்தார்.
இதேபோல அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மதுராந்தகம் மரகதம் குமரவேல், தாராபுரம் சத்தியபாமா, கரூர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், விராலிமலை சி.விஜயபாஸ்கர், அம்பாசமுத்திரம் இசக்கி சுப்பையா, பெருந்துறை எஸ்.ஜெயக்குமார் ஆகியோரும் தங்களது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தனர்.
இந்நிலையில், திருச்சி கிழக்கு தொகுதியில் முதல்வர் விஜய் வெற்றி பெற்றதை எதிர்த்து திமுக சார்பில் போட்டியிட்ட இனிகோ இருதயராஜும், எம்.ஆர்.விஜயபாஸ்கர் வெற்றியை எதிர்த்து தவெக சார்பில் போட்டியிட்ட வி.பி.மதியழகனும், சி.விஜயபாஸ்கர் வெற்றியை எதிர்த்து திமுக சார்பில் போட்டியிட்ட செல்லபாண்டியனும், ஜெயக்குமார் வெற்றியை எதிர்த்து திமுக சார்பில் போட்டியிட்ட தோப்பு வெங்கடாச்சலமும், இசக்கி சுப்பையாவின் வெற்றியை எதிர்த்து வாக்காளரான காந்திமதி நாதனும், சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்நிலையில், தேர்தல் வழக்குகள் நிலுவையில் உள்ள தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கக் கூடாது. அதற்குத் தடை விதிக்க வேண்டும் என்று கோரி பாளையங்கோட்டையைச் சேர்ந்த வழக்கறிஞர் வெங்கடாஜலபதி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு விசாரணையின் போது தேர்தல் வழக்குகளில் தீர்வு காணும் வரை, 5 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்படாது என தேர்தல் ஆணையம் பதில் மனு தாக்கல் செய்தது. இதையடுத்து உயர் நீதிமன்றமும், தேர்தல் வழக்குகள் முடிவுக்கு வரும் வரை 5 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தலை அறிவிக்கக் கூடாது என தடை விதித்தது.
தடையை நீக்க மனு: இந்நிலையில், 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியிட விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி, முதல்வர் விஜய் மற்றும் ராஜினாமா செய்த முன்னாள் எம்எல்ஏ-க்கள் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது பெருந்துறை அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஜெயக்குமார் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் எஸ்.முரளிதர், ‘‘ஜெயக்குமாரின் வெற்றியை எதிர்த்து தோப்பு வெங்டாச்சலம் தொடர்ந்திருந்த தேர்தல் வழக்கை உயர் நீதிமன்றம் நிராகரித்து உத்தர விட்டுள்ளதால் அந்த தொகுதிக்கானத் தடையை நீக்க வேண்டும்’’ என வாதிட்டார்.
தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நிரஞ்சன் ராஜகோபாலன், ‘‘தேர்தல் வழக்குகள் நிலுவையில் இல்லாத மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. பெருந்துறை தொகுதிக்கான தேர்தல் வழக்கை நிராகரித்து உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு இன்னும் கிடைக்கவில்லை’’ என்றார்.
அப்போது எம்.ஆர்.விஜயபாஸ்கர், சி.விஜயபாஸ்கர் ஆகியோர் தரப்பிலும், இடைத்தேர்தலுக்கான தடையை நீக்க வேண்டுமென கோரப்பட்டது.
அதையேற்க மறுத்த நீதிபதிகள், திருச்சி கிழக்கு உள்ளிட்ட 5 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தலை அறிவிக்க விதிக்கப்பட்ட தடையை செப்.28 வரை நீட்டித்து உத்தரவிட்டனர். மேலும் இந்த வழக்கை இறுதி விசாரணைக்காக செப்.28-க்கு தள்ளிவைத்து, அனைத்து தரப்பினரும் எழுத்துப்பூர்வ பதில்களைத் தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: இன்று வேட்பு மனுத் தாக்கல் தொடக்கம்
மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளின் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று முதல் வேட்பு மனுத் தாக்கல் தொடங்குகிறது.
திருச்சி கிழக்கு, விராலிமலை, கரூர், பெருந்துறை, அம்பாசமுத்திரம் ஆகிய 5 தொகுதிகள் தொடர்பான தேர்தல் வழக்கு நிலுவை உள்ளது. அதனால், மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளுக்கு மட்டும் அக்டோபர் 6-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதைத்தொடர்ந்து, இன்று தேர்தலுக்கான அறிவிக்கை வெளியிடப்படுவதுடன், 2 தொகுதிகளிலும் வேட்பு மனுத் தாக்கல் தொடங்கி செப்.16-ம் தேதி முடிவடைகிறது. மறுநாள் செப்.17-ம் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலிக்கப்படுகின்றன. செப்.19-ம் தேதி மாலை வரை வேட்பு மனுக்களைத் திரும்பப் பெறுவதற்கு அனுமதிக்கப்படுகிறது. அன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. தொடர்ந்து அக்.6-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.