

ஈரோட்டில் தவெக சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த், நிர்வாகக்குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் ஆகியோருக்கு தவெகவினர் வாள் வழங்கினர்.
தவெக தலைவர் விஜய் பங்கேற்கும் மக்கள் சந்திப்பு பிரச்சாரக் கூட்டம் பெருந்துறையை அடுத்த விஜயமங்கலம் சுங்கச்சாவடி அருகே சரளை என்ற இடத்தில், வரும் 18-ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், பிரச்சார கூட்டத்துக்கான ஏற்பாடுகள் குறித்து, தவெக சார்பில் கட்சியினர் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் ஈரோடு அடுத்த வேப்பம்பாளையம் தனியார் மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் ஆகியோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் செங்கோட்டையன் பேசியதாவது: எனது 50 ஆண்டு கால அரசியல் வாழ்க்கையில் பொதுச்செயலாளரை உருவாக்கிய நான், சாதாரண உறுப்பினராக இருக்கக்கூட தகுதியற்றவன் என நான் இருந்த கட்சியில் இருந்து நீக்கப்பட்டேன். தவெக தலைவர் விஜய் முதல்வராவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது. அவருக்கு மக்கள் சக்தி உள்ளது. மக்களுக்கு சேவை செய்வதற்காக, ரூ. 500 கோடி வருமானத்தை உதறிவிட்டு வந்தவர் விஜய்.
எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரை அடுத்து விஜய்யை முதல்வராக்க வேண்டும் என நினைக்கிறேன். அதற்காக அவர் தலைமையை ஏற்று வந்துள்ளேன். என்னுடைய ரத்தத்தில் விஜய்யை முதல்வராக ஆக்க வேண்டும் என்ற எண்ணம் ஓடுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து புஸ்ஸி ஆனந்த் பேசியதாவது: விஜய்யின் முதல் ரசிகர் மன்றம் ஈரோட்டில் தான் தொடங்கப்பட்டது. நமது கொள்கை தலைவர் வாழ்ந்த இடம் ஈரோடு. செங்கோட்டையன் என்ன சொல்கிறாரோ அதன்படி நாங்கள் செயல்படத் தயாராக இருக்கிறோம். எங்களை நம்பி வந்தவர்களை கடைசி வரை நாங்கள் கைவிட மாட்டோம்.
2026-ல் விஜய்யை முதலமைச்சராக்க எந்த தியாகத்தையும் செய்யத் தயாராக இருக்கிறேன். நமக்கு எதிராக உள்ள அரசியல் கட்சி பிரமுகர்களின் வீடுகளிலும் நமக்கு ஆதரவு உள்ளது. செங்கோட்டையனிடம் பொறுப்புகளை ஒப்படைத்து விட்டோம். தொகுதிகளில் வெற்றியை பெற்றுத் தர வேண்டியது அவரது பொறுப்பு.
முழுமையாக அவரையும், அவருடன் இருப்பவர்களையும் ஏற்றுக் கொண்டோம். செங்கோட்டையன் போடும் ரூட்டில் விஜய் பயணிப்பார். சிரமப்பட்டு பிரச்சாரக் கூட்டத்துக்கு அனுமதி பெற்றுள்ளார். அவரிடம் நிறைய கற்றுக் கொள்ள வேண்டியது இருக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.