

சென்னை: மாநகராட்சியில் லஞ்சம் வாங்கிய 7 அலுவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கரூர் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் விஜய், “அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்டால் கொடுக்காதீர்கள். என் பெயரை சொல்லுங்கள்” என அறிவித்தார். இதைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீஸார் தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்களில் சோதனையை தீவிரப்படுத்தினர். பத்திரப் பதிவு, சாலை போக்குவரத்து அலுவலகங்கள், மாநகராட்சி அலுவலகங்களில் சோதனை நடத்தினர். அப்போது டிஜிட்டல் பரிவர்த்தனை மூலம் லஞ்சம் கைமாறியதை கண்டறிந்ததோடு ரொக்கப் பணத்தையும் பறிமுதல் செய்தனர்.
சென்னை மாநகராட்சியில் ராயபுரம், திரு.வி.க.நகர், அண்ணா நகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், பெருங்குடி ஆகிய 6 மண்டல அலுவலகங்களில் கடந்த 3-ம் தேதி நடைபெற்ற சோதனையில் கணக்கில்வராத பணம் கைப்பற்றப்பட்டது. யுபிஐ பரிவர்த்தனை மூலம் லஞ்சம் கைமாறியதும் கண்டுபிடிக்கப்பட்டது.
மாநகராட்சி மண்டலங்களில் நடைபெற்ற சோதனை அடிப்படையிலான அறிக்கைகளை வழங்கியதன் அதனடிப்படையில், 7 பேரை மாநகராட்சி ஆணையர் ஜி.எஸ். சமீரன் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார். திரு.வி.க.நகர் மண்டலத்தில் செயற் பொறியாளர் ஆர்.சரவணன், உதவி செயற்பொறியாளர் டி.ரவிவரமன், உதவி பொறியாளர் டி.சரஸ்வதி, வருவாய் பிரிவு இளநிலை உதவியாளர். மணிகண்டன் ஆகிய 4 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
தேனாம்பேட்டை மண்டலத்தில் கண்காணிப்பாளர் ஏ.ஸ்ரீராமுலு, சுகாதார ஆய்வாளர் ஏ.மஞ்சித் ஹுசைன், தூய்மைப் பணி மேற்பார்வையாளர் ஆர்.கோதண்டன் ஆகிய 3 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு எஃப்ஐஆரும் பதிவு செய்யப்பட்டுள்ளது.