

சென்னை: மாதவரம் அருகே லாரியை முந்திச் செல்ல முயன்றபோது ஏற்பட்ட விபத்தில், லாரி சக்கரத்தில் சிக்கி, ஆறு மாத பெண் குழந்தை மற்றும் தாய் உயிரிழந்தனர்.
சென்னை, பூந்தமல்லி அடுத்த குமணன் சாவடி பகுதியைச் சேர்ந்தவர் நித்தியானந்தம் (30). இவர் அப்பகுதியில் உள்ள செல்போன் கடையில் பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி சர்மிளா (28). இவர்களுக்கு பிரதிக் ஷா என்ற 6 மாத பெண் குழந்தை இருந்தது.
நேற்று காலை, நித்தியானந்தம் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் பைக்கில் மணலியில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தார். மாதவரம் ரவுண்டானா அருகே அவர்கள் சென்று கொண்டிருந்த போது, முன்னால் எண்ணூர் துறைமுகம் நோக்கிச் சென்ற லாரி ஒன்றை நித்தியானந்தம் முந்திச் செல்ல முயன்றதாகக் தெரிகிறது.
அப்போது, எதிர்பாராத விதமாக லாரியின் பக்கவாட்டில் பைக் உரசியதில், நிலைத்தடுமாறி மூவரும் கீழே விழுந்தனர். இதில் லாரியின் பின்சக்கரம் ஏறியதில் சர்மிளா மற்றும் குழந்தை பிரதிக் ஷா ஆகிய இருவரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். நித்தியானந்தம் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.
தகவலறிந்து, சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த மாதவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார், உயிரிழந்தவர்களின் உடல்களைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த விபத்து தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீஸார், நாகர்கோவிலைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் பவுன் ராஜ் (50) என்பவரைக் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேபோல், சென்னை, வானகரம், பூந்தமல்லி நெடுஞ்சாலை சர்வீஸ் சாலையில் உள்ள டாஸ்மாக் கடை அருகே நேற்று முன்தினம் இரவு லாரி மோதியதில் அடையாளம் தெரியாத முதியவர் உயிரிழந்தார். விபத்து ஏற்படுத்திய அரும்பாக்கத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் காண்டீபனை (62) போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.