ஒரு தாயின் 3 ஆண்டு போராட்டத்துக்கு கிடைத்த நீதி: துணை நடிகர் மரணத்தில் திருப்பம்.. மகன் கொலையை அம்பலப்படுத்தினார்

உடந்தையாக இருந்த பெண் காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு
ஒரு தாயின் 3 ஆண்டு போராட்டத்துக்கு கிடைத்த நீதி: துணை நடிகர் மரணத்தில் திருப்பம்.. மகன் கொலையை அம்பலப்படுத்தினார்
Updated on: 
2 min read

சென்னை: துணை நடிகர் சரண்ராஜை காரை ஏற்றி கொலை செய்த வழக்கை விபத்து என ஜோடித்து குற்றவாளிகளுக்கு உடந்தையாக செயல்பட்ட பெண் காவல் ஆய்வாளர் மீது சட்டரீதியாகவும், துறை ரீதியாகவும் நடவடிக்கை எடுக்க டிஜிபிக்கு உத்தரவிட்டுள்ள சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம், புதிதாக விசாரணை அதிகாரியை நியமித்து 60 நாட்களில் இந்த வழக்கில் மீண்டும் இறுதி அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டது.

மதுரவாயல் தனலட்சுமி நகரைச் சேர்ந்த திரைப்பட துணை நடிகர் சரண்ராஜ் (30). வடசென்னை, அசுரன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். கடந்த 2023-ம் ஆண்டு ஜூன் 7-ம் தேதியன்று கே.கே.நகர் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சரண்ராஜ் சென்றபோது அவ்வழியே அதிவேகமாக வந்த கார் மோதியதில் சரண்ராஜ் உயிரிழந்தார். இதுதொடர்பாக கிண்டி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார் விசாரித்து வந்தனர்.

அதில், சாலிகிராமத்தைச் சேர்ந்த ரஜினிமுருகன் என்ற படத்தில் நடித்துள்ள மற்றொரு துணை நடிகரான பழனியப்பன் என்பவர் அந்தக்காரை அதிவேகமாக ஓட்டி, சரண்ராஜ் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியது தெரியவந்தது. இந்நிலையில் தனது மகன் விபத்தில் உயிரிழக்கவில்லை என்றும், நடந்த சம்பவத்தை போலீஸார் மூடி மறைத்துவிட்டனர் என்றும், ஒரு கும்பல் சதித்திட்டம் தீட்டி, திட்டமிட்டு தனது மகனை காரை ஏற்றி கொலை செய்துள்ளனர் என்றும் சரண்ராஜின் தாயார் சென்னை 16-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அதில், எனது மகனிடம் அவனது நண்பர்களான துணை நடிகரும், இயக்குநருமான பழனியப்பன், தமிழரசன், துரைராஜ் ஆகியோர் கடனாக பணம் வாங்கியிருந்தனர். அந்தக்கடனை திருப்பிக்கேட்டதாால் ஏற்பட்ட பிரச்னையில் கொலை செய்துள்ளனர். இந்த கொலைக்கு சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளரும் உடந்தையாக இருந்துள்ளார். அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை போலீஸார் கைப்பற்றி விசாரிக்கவி்ல்லை எனக் குற்றம்சாட்டி சிசிடிவி ஆதாரத்தையும் தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி சஞ்சய்பாபா பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: கார் அதிவேகமாக வந்து மோதுகிறது. நள்ளிரவு நேரத்தில் நடந்த இந்த சம்பவத்தால் நேரடி சாட்சிகள் யாரும் இல்லை என போலீஸார் கூறுவது ஏற்புடையதல்ல. அப்பகுதியில் போக்குவரத்து போலீஸார் பணியில் இருப்பது அப்பட்டமாக தெரிகிறது. ஆனால் போலீஸார் இந்த வழக்கில் சாட்சியாக சேர்க்கப்படவில்லை. விபத்தை ஏற்படுத்திய கார், வேறு ஒரு வாகனத்தில் மோதி பின்னர் சரண்ராஜ் சென்ற இருசக்கர வாகனம் மீது மோதியதாக போலீஸார் கூறுவது கண்காணிப்பு கேமரா காட்சிகளுடன் ஒத்துப்போகவில்லை.

மேலும் சம்பவம் நடந்தபோது அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளைக் கைப்பற்றி விசாரணை அதிகாரி ஆய்வு செய்யாததும், விபத்து ஏற்படுத்திய காரை 122 நாட்கள் கழித்து மோட்டார் வாகன ஆய்வுக்கு அனுப்பியிருப்பதும் சந்தேகத்தை இன்னும் வலுப்படுத்துகிறது.

காவல் ஆய்வாளர் குற்றவாளிகளை காப்பாற்றும் நோக்கில் இந்த கொலை வழக்கை திசைதிருப்பி விபத்து என சித்தரித்து உண்மை தகவல்களை மறைத்து சட்டத்தையும், நீதிமன்றத்தையும் தவறாக வழிநடத்தியுள்ளார். ஒருவேளை குற்றம்சாட்டப்பட்டவர்கள் சட்டத்தின் பிடியில் சிக்கினாலும் அவர்களுக்கு குறைந்தபட்ச தண்டனை கிடைக்கும் வகையில் வழக்குப்பதிவு செய்துள்ளார்.

எனவே கிண்டி போக்குவரத்து காவல் ஆய்வாளரான அகிலா மீது இதுதொடர்பாக சட்டரீதியாகவும், துறைரீதியாகவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கொலைக்குற்றத்தை மறைத்து, குற்றவாளிகளுக்கு உடந்தையாக இருந்ததால் குறைந்தது 3 ஆண்டுகளுக்கு அவரிடம் புலனாய்வு தொடர்பான விசாரணையை வழங்கக் கூடாது. நேர்மையான அதிகாரி ஒருவரை நியமித்து மீண்டும் இந்த வழக்கை புலனாய்வு செய்ய வேண்டும்.

அடுத்த 60 நாட்களில் மறுவிசாரணையை முடித்து அந்த அதிகாரி துணை இறுதி அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என தமிழக டிஜிபி்க்கும், சென்னை மாநகர காவல் ஆணையருக்கும் உத்தரவி்டுகிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.

ஒரு தாயின் 3 ஆண்டு போராட்டத்துக்கு கிடைத்த நீதி: துணை நடிகர் மரணத்தில் திருப்பம்.. மகன் கொலையை அம்பலப்படுத்தினார்
“என்னுடைய பதிவு ஆதங்கத்தின் வெளிப்பாடு; தவெகவில் இருந்து விலகவில்லை” - நாஞ்சில் சம்பத் விளக்கம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in