

சின்னமனூர்: சின்னமனூர் செங்குளம் கண்மாயில் உடைப்பு ஏற்பட்டதால் பாசன நீர் விரயமாகி வயல்களில் தேங்கியது. இதனால் நெல் நாற்றுக்கள் அழுகும் நிலை உள்ளது. நீராதாரங்களை முறையாக கண்காணிக்காததே இதற்கு காரணம் என்று விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
சின்னமனூர் அருகே பூலாநந்தபுரத்தில் சுமார் 70 ஏக்கர் பரப்பளவில் செங்குளம் கண்மாய் அமைந்துள்ளது. இதன் மூலம் 450 ஏக்கர் விளைநிலங்கள் இருபோக சாகுபடியால் பலனடைகின்றன. இக்கண்மாய்க்கு உத்தமபாளையம் முல்லை பெரியாற்றின் மதகில் இருந்து நீர்பிரிக்கப்பட்டு பெரிய வாய்க்கால் வழியே இங்கு நீர் கொண்டு வரப்படுகின்றன.
முதல்போகத்துக்காக அணையில் இருந்து திறக்கப்பட்ட நீர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு இக்கண்மாயை வந்தடைந்தது. தொடர்ந்து நீர் வந்ததுடன் கண்மாய் பகுதியின் பல பகுதிகளிலும் நிரம்பத் தொடங்கியது.
இந்நிலையில், மதகுக்கு அருகில் பள்ளமான இடத்தில் இன்று (செப்.17) உடைப்பு ஏற்பட்டு நீர் வெளியேறத் தொடங்கியது. இந்த நீர் நாற்று நடவு செய்யப்பட்ட வயல்களில் அதிகளில் தேங்கி பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இது குறித்து விவசாயி பிஆர்.பாண்டி கூறுகையில், உடைப்பு ஏற்பட்ட பகுதியில் மண் அள்ளப்பட்டு பலவீனமாக இருந்தது. நீரின் அழுத்தம் காரணமாக உடைத்து வெளியேறியது. இந்த நீர் 50ஏக்கர் நிலங்களில் தேங்கியதால் நாற்றுகள் அழுகும் நிலை உள்ளது. நீர்வளத்துறையினர் நீராதாரங்களை முறையாக கண்காணிக்காததே இந்த பாதிப்புக் காரணம் என்றார்.
இந்நிலையில், உடைப்பு ஏற்பட்ட பகுதியில் நீர்வளத்துறையினர் மணல் மூட்டைகளை அடுக்கினர். மேலும், வாய்க்காலில் வரும் நீரையும் அடைத்ததால் பாதிப்பு தற்காலிகமாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.