

ஏற்காட்டில் மலைப்பாதையில் சரிந்து விழுந்த பாறையை அகற்றும் பொக்லைன் இயந்திரம்.
சேலம்: சேலம் மாவட்டத்தில் தொடர்ந்து மூன்றாவது நாளாக ஆங்காங்கே மழை பெய்து வரும் நிலையில், ஏற்காட்டில் பெய்த கனமழையால், மலைப்பாதையில் ஆங்கே பாறைகள் சரிந்தன.
தென்மேற்குப் பருவமழைக் காலம் தொடங்கியதில் இருந்தே சேலம் மாவட்டத்தில் போதிய மழை பெய்யாமல் இருப்பதால், மாவட்டத்தில் பல இடங்களில் வறட்சி நிலவுகிறது. இதனால், குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதுடன், விளை நிலங்களுக்கான பாசன நீர் ஆதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக, மாவட்டத்தில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது.
குறிப்பாக, மாவட்டத்தின் மழை மறைவுப் பகுதியான வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கெங்கவல்லி உள்ளிட்ட வட்டாரங்களில் ஆங்காங்கே மழை பெய்வது, மக்களிடையே ஆறுதலை ஏற்படுத்தி உள்ளது.
மாவட்டத்தில் அதிகபட்சமாக ஏற்காட்டில் 68.4 மி.மீ, மழை கொட்டியது. இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ததால், ஏற்காடு மலை கிராமங்களில் சிறிது நேரம் மின் விநியோகம் பாதிக்கப்பட்டது. மேலும், சேலம் அடிவாரம் - ஏற்காடு மலைப்பாதையில் 40 அடி பாலம் மற்றும் 60 அடி பாலத்துக்கு இடையே இன்று காலையில் ராட்சத பாறை ஒன்று உருண்டு சாலையில் விழுந்தது. அவ்வழியாக வாகனங்கள் ஏதும் வராத நிலையில், விபத்து தவிர்க்கப்பட்டது. இதனால், அப்பகுதியில் வாகனங்கள் ஒரு வழிப்பாதையாக இயக்கப்பட்டன.
தொடர்ந்து நெடுஞ்சாலைத்துறையினர் ஜேசிபி இயந்திரத்தைக் கொண்டு சாலையில் கிடந்த பாறையை அப்புறப்படுத்தி, போக்குவரத்தை சீரமைத்தனர். இதனிடையே, மாவட்டத்தின் பல இடங்களில் 3-வது நாளாக இடியுடன் கூடிய கனமழை பெய்தது. குறிப்பாக, தம்மம்பட்டியில் 52 மிமீ., ஓமலூரை அடுத்த டேனிஷ்பேட்டையில் 46 மி.மீ, சேலத்தில் 36 மி.மீ, என கனமழை பெய்தது.
மாவட்டத்தின் இதர இடங்களில் பெய்த மழையளவு விவரம்
ஓமலூரில் 31 மி.மீ, மேட்டூரில் 21.8 மி.மீ, வாழப்பாடியில் 17 மி.மீ, ஆத்தூரில் 13.4 மி.மீ, தலைவாசலில் 12 மி.மீ, ஏத்தாப்பூரில் 11 மி.மீ, எடப்பாடியில் 8.4 மி.மீ, சங்ககிரியில் 8.2 மி.மீ, வீரகனூரில் 6 மி.மீ, கரியகோவில் அணையில் 5 மி.மீ, ஆனைமடுவு அணையில் 3 மி.மீ என மழை பதிவாகியிருந்தது. வறண்ட வானிலை, அதிகமாக இருந்த வெயிலின் தாக்கத்துக்கு இடையில் சில நாட்களாக மழை பெய்வது, சேலம் மாவட்ட மக்களை ஆறுதல் கொள்ள செய்துள்ளது.