

கோவையில் நேற்று நடைபெற்ற விழாவில், போட்டித் தேர்வுகளுக்கான ‘புவியியல்’ நூலை கவுமார மடாலயத்தின் ஆதீனம் தவத்திரு குமரகுருபர சுவாமிகள் வெளியிட்டார். உடன் நூலாசிரியர் குமாரசாமி, ஓய்வுபெற்ற காவல்துறை துணைத் தலைவர் இரா.சின்னசாமி, கோவை மண்டல பாஸ்போர்ட் அலுவலர் கே.எச்.சத்தீஷ் உள்ளிட்டோர். படம்: ஜெ.மனோகரன்
கோவை: ‘புத்தகங்கள் வெறும் காகிதங்களல்ல, அறிவாயுதங்கள்’ என கோவையில் நடைபெற்ற புவியியல் எனும் நூல் வெளியீட்டு விழாவில் நூலாசிரியர் கி.குமாரசாமி தெரிவித்தார்.
போட்டித் தேர்வுகளுக்கான ‘புவியியல்’ நூல் வெளியீட்டு விழா கோவை அரசு கலைக் கல்லூரியில் நேற்று நடந்தது. சென்னை வர்த்தமானன் பதிப்பகத்தின் ஸ்ரீவர்த்தமானன் வரவேற்றார். முன்னாள் மாணவர் சங்கத்தின் தலைவர் க.ரத்தினசாமி, இணை நூலாசிரியர் இ.சி.காமராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கோவை கவுமார மடாலயத்தின் ஆதீனம் தவத்திரு குமரகுருபர சுவாமிகள் நூலை வெளியிட, ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி இரா.சின்னசாமி, கோவை மண்டல பாஸ்போர்ட் அலுவலர் கே.எச்.சத்தீஷ், கோவை அரசு கல்லூரியின் அரசியல் அறிவியல் துறைத் தலைவர் பி.கனகராஜ் ஆகி யோர் பெற்றுக் கொண்டனர்.
நூலாசிரியரும், சென்னை முன்னாள் கல்லூரிக் கல்வி இயக்குநரும், தேசிய ஆசிரியர் கல்விக் கழகத்தின் முன்னாள் உறுப்பினருமான கி.குமாரசாமி அறிமுக உரையாற்றும்போது, “போட்டித் தேர்வுகளில் ஒன்றிரண்டு தோல்விகள் வந்தால் தேர்வர்கள் கவலைப்படக் கூடாது. கற்றல் என்பது நீண்ட நெடிய பயணம். தன்னம்பிக்கை, குறிக்கோள் மற்றும் திட்டங்கள் ஆகியவைதான் என்னை இந்த நிலைக்கு உயர்த்தின. புத்தகங்கள் வெறும் காகிதங்களல்ல, அறிவாயுதங்கள்” என்றார்.
தவத்திரு குமரகுருபர சுவாமிகள் பேசும்போது, “ஓய்வுக்கு பின்னரும், சமுதாயத்துக்கு பயனுள்ள வகையில் வாழ வேண்டும் என நினைத்து, இந்த நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன. பருவநிலை மாற்றம் உலகை இயக்கிக் கொண்டிருக்கிறது. ஐரோப்பிய குளிர் நாடுகளில் வெப்பநிலை மாற்றம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. அதிகப்படியான மின் உற்பத்தி, நிலக்கரி எடுப்பது என கடந்த 50-60 ஆண்டுகளில் இந்த புவி அதிக மாற்றத்தை சந்தித்துள்ளது.
அமேசான் காடுகள் அழியத் தொடங்கி உள்ளன. நம் புவியியலை சுற்றி நிகழும், சூழல் பாதிப்புகளை நாம் உணர வேண்டும்” என்றார். நிகழ்வில் கல்லூரியின் தேர்வு கட்டுப்பாட்டுத் துறை ஆணையர் ஷீலா பிரியதர்ஷினி உ்ள்பட பலர் பங்கேற்றனர். போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் கல்லூரி மாணவர்களுக்காக ரூ.900 மதிப்பிலான புவியியல் நூலின் 2 பாகங்களும் சேர்த்து சலுகை விலையில் ரூ.500-க்கு வழங்கப்பட்டது.