

கள்ளக்குறிச்சி: கோட்டக்குப்பத்தில் உடலை மாற்றி பிரேத பரிசோதனை செய்ததால் ஏற்பட்ட குழப்பத்தில் அடையாளம் தெரியாத சடலத்துக்கு சடங்கு செய்த உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் சின்ன முதலியார் சாவடிக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் விநாயகம் (60). இவர் நேற்று முன்தினம் அதிகாலை மீன் பிடிக்க கடலுக்குள் சென்றார். அப்போது படகு கவிழ்ந்து உயிரிழந் தார். கோட்டக்குப்பம் போலீஸார் விநாயகத்தின் உடலை பிரேத பரிசோதனைக்காக காலாபட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் வைத்திருந்தனர்.
இந்நிலையில் நேற்று காலை விநாயகம் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது அவரது சகோதரர் விஜயகுமார் மற்றும் மீனவக்குப்பம் பஞ்சாயத்தார் மற்றும் உறவினர் கள் மருத்துவமனைக்குச் சென்று பிரேத பரிசோதனைக்கு பின் போலீஸாரின் முன்னிலையில் உடலை கண்ணீர்மல்க வாங்கிச் சென்றனர்.
விநாயகத்தின் உடலை வீட்டுக்கு கொண்டு வந்தபோது உடலை பார்த்தவுடன் உறவினர்கள் கதறி அழுதனர். உடலை குளிர்சாதனப் பெட்டியில் வைப்பதற்கு முன்னர் சடங்கு செய்வதற்காக முகத்தை திறந்தபோது அது விநாயகத்தின் உடல் இல்லை என்பது தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள், இது விநாயகத்தின் உடல் இல்லை என்று கூறினர். ஆனால் உறவினர்களில் சிலர் பிரேத பரிசோதனை செய்தால் உடல் இப்படி தான் இருக்கும் என்று ஆறுதல் கூறினர். ஆனால் பெரும்பாலானோர் ஏற்றுக் கொள்ளாத நிலையில், அவரது அங்க அடையாளங்களை வைத்து அது விநாயகத்தின் உடல் இல்லை என்பதை உறுதி செய்தனர்.
சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக உடல் வீட்டில் வைக்கப்பட்டிருந்த நிலையில், இது குறித்து கோட்டக்குப்பம் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் பார்த்தபோது, அந்த உடல் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு புதுக்குப்பம் பகுதியில் இறந்த அடையாளம் தெரியாத நபரின் உடல் என்பதும், மருத்துவமனையில் விநாயகத்தின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்படாமல் இருந்ததும் தெரிய வந்தது.
இதையடுத்து விநாயகத்தின் வீட்டுக்கு எடுத்துவரப்பட்ட அடையாளம் தெரியாத உடல் மீண்டும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. மீண்டும் உறவினர்களை அழைத்துச் சென்று விநாயகத்தின் உடல் பிரேத பரிசோதனை செய்யும் பணி நடந்தது. அடையாளம் தெரியாத நபரின் உடலை நேற்று பிரேத
பரிசோதனை செய்தபோது அங்கு போலீஸார் இல்லாததால், விநாயகத்தின் உடலும் அடையாளம்‘ தெரியாத ஆதரவற்றவரின் உடலும் ஒரே மாதிரியாக இருந்ததால் மாற்றி பிரேத பரிசோதனை செய்தது தெரியவந்ததாக கூறப்பட்டது.