

சென்னை: முரசு புயலில் சிக்கி உயிரிழந்த மேலும் 2 மீனவர்களின் உடல்கள் நேற்று முன்தினம் மீட்கப்பட்டன. சென்னை காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து கடந்த அக். 29-ம் தேதி, செல்வழகன் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில், படகு ஓட்டுநர் சூர்யா உள்ளிட்ட 9 மீனவர்கள் ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்றனர்.
ஆந்திர மாநிலம் நிஜாம்பட்டினம் அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, புயல் எச்சரிக்கை காரணமாகப் பாதுகாப்பு கருதி நிஜாம்பட்டினம் துறைமுகத்தில் விசைப்படகை நிறுத்தியுள்ளனர். பிறகு மீண்டும் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றபோது, நடுக்கடலில் விசைப்படகின் இன்ஜின் பழுதடைந்துள்ளது.
இதுகுறித்து, அருகில் இருந்த மற்றொரு விசைப்படகுக்கு கடந்த 3-ம் தேதி அதிகாலை 3.30 மணி அளவில் வயர்லெஸ் மூலம் தகவல் தெரிவித்துள்ளனர். அதன்பிறகு, அந்த 9 மீனவர்களையும் தொடர்புகொள்ள முடியவில்லை.
இதனிடையே, ஆந்திர மாநிலம் ஓங்கோல் அருகே 7 மீனவர்களின் உடல்கள் அடுத்தடுத்து கரை ஒதுங்கின. இவை மீட்கப்பட்டு, மாயமான தமிழக மீனவர்களின் உடல்கள் என்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, மோகன், சூர்யா, முருகன், விஜயகாந்த், குப்புசாமி, குப்பன், அரவிந்த் ஆகிய 7 பேரின் உடல்களும் அடையாளம் காணப்பட்டு, அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
இருப்பினும், எஞ்சிய இரண்டு மீனவர்களின் நிலை குறித்து எந்தத் தகவலும் கிடைக்காததால், அவர்களைத் தேடும் பணியை கடலோரக் காவல் படையினர் தீவிரப்படுத்தினர். இந்நிலையில், ஆந்திர மாநிலம் கொத்தப்பட்டினம் அருகே உள்ள லட்சுமிபுரம் கடற்கரையில் மேலும் 2 மீனவர்களின் உடல்கள் கரை ஒதுங்கின.
இதையடுத்து, அந்த உடல்களை மீட்ட அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டதில், அவை மாயமான மீனவர்களான ராஜேஷ், நாராயணன் ஆகியோருடையவை என்பது உறுதி செய்யப்பட்டது.
தொடர்ந்து, இருவரின் உடல்களும் உடற்கூறாய்வுக்கு பிறகு ஆம்புலன்ஸ் மூலம் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. சென்னை காசிமேட்டில் இருந்து மீன்பிடிக்கச் சென்று ஆந்திர கடல் பகுதியில் மாயமான 9 மீனவர்களும் தற்போது சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.