

கோப்புப் படம்
சென்னை: தமிழ்நாடு மின்சார வாரிய தலைமையகத்தில் இருந்து ஹார்டு டிஸ்க்குகள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. இதன்மூலம் இவ்வழக்கின் விசாரணை சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது.
சென்னை, அண்ணாசாலையில் தமிழ்நாடு மின் வாரிய தலைமை அலுவலகத்தில் கம்ப்யூட்டர் பிரிவில் 34 ஹார்டு டிஸ்க்குகள் அண்மையில் திருடு போன சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக மின்வாரியம் சார்பில் சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
தமிழ்நாடு மின் வாரிய தலைமை அலுவலகத்தில் திருடுபோன 34 ஹார்டு டிஸ்க்குகளும், ரூ.75 ஆயிரத்துக்கு பெங்களூருவில் விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது. அவற்றை வாங்கியவரையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.
போலீஸாரின் விசாரணையில் மின்வாரிய தலைமை அலுவலகத்தில் கம்ப்யூட்டர்களை மேற்பார்வையிடும் ஒப்பந்த ஊழியரான கோபிநாத் (31) என்பவர் கைது செய்யப்பட்டார். அவர் கம்ப்யூட்டர் ஹார்டு டிஸ்க்குகளை திருடி, பெங்களூருவில் உள்ள ஒரு காம்ப்ளக்ஸ் கடையில் விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீஸார் பெங்களூரு விரைந்து 34 ஹார்டு டிஸ்க்குகளையும் கைப்பற்றினர்.
கைதான கோபிநாத்திடம் விசாரித்தபோது, திருடிய ஹார்டு டிஸ்க்குகளில் உள்ள தகவல்களை அழித்துவிட்டு ரூ.75 ஆயிரத்துக்கு விற்பனை செய்ததாக தெரிவித்துள்ளார். அதில் சதி திட்டம் ஏதும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
இதற்கிடையே ஹார்டு டிஸ்க்குகளை வாங்கிய பெங்களூரு காம்ப்ளக்ஸ் கடை உரிமையாளர் கர்நாடகா மாநிலம், பெங்களூரு தெற்கு பகுதியைச் சேர்ந்த முரளி மனோகர் (32) கைது செய்யப்பட்டார்.
அவரிடமும் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், சென்னை காவல்துறை, டிஜிபியிடம் பரிந்துரை செய்ததன்பேரில், இவ்வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. இதன்மூலம் வழக்கு விசாரணை சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. பல்வேறு கோணங்களில் இவ்வழக்கின் விசாரணை நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.