

கும்பகோணம்: பாஜக அனைத்து பிரிவுகளின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் சங்கமம் மாநாடு கும்பகோணத்தில் நேற்று நடைபெற்றது. அனைத்து பிரிவுகளின் மாநில இணை அமைப்பாளர் நாச்சியப்பன் வரவேற்றார்.
சிறப்பு விருந்தினராக தேசிய அமைப்பு பொதுச் செயலாளர் சந்தோஷ், சிறப்பு அழைப்பாளர்களாக தமிழக தேர்தல் பொறுப்பாளர் வைஜயந்த் ஜெய் பாண்டா, தமிழக பொறுப்பாளர் அரவிந்த்மேனன், இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, மாநில அமைப்புச் செயலாளர் கேசவவிநாயகம், முன்னாள் தேசியச் செயலாளர் எச்.ராஜா, முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், பேராசிரியர் ராம.சீனிவாசன், மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம், பிரிவுகளின் மாநில அமைப்பாளர் கே.டி.ராகவன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
நிகழ்வில், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமை வகித்து பேசியது: தமிழகத்தில் கனமழைக்கு ஆரஞ்சு, ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. ஆனாலும், சங்கமம் மாநாடு சிறப்பாக நடைபெறுகிறது. இந்த அலர்ட் எல்லாம் திமுக ஆட்சிக்கு காவி கொடுக்கும் அலர்ட்தான். 2026 தேர்தலுக்கு பிறகு இதுவரை இல்லாத அளவுக்கு இரட்டை இலக்கத்தில் பாஜக எம்எல்ஏக்கள் சட்டப் பேரவைக்கு உறுதியாகச் செல்வார்கள்.
இன்னும் 100 நாட்கள் இருக்கின்றன. திமுகவை விரட்ட வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் பாஜகவினர் செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.