

தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன்
தருமபுரி: சிபிஐ வழக்கைப் பயன்படுத்தி, தவெக தலைவர் விஜய்யை கூட்டணிக்கு இழுக்கப் பார்க்கிறார்கள் எனறு தவாக தலைவர் வேல்முருகன் கூறினார்.
தருமபுரியில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: வரும் தேர்தலில் கூடுதல் தொகுதிகள் ஒதுக்குமாறு நான் நிச்சயம் கேட்பேன். கடந்த தேர்தலில் திமுக கூட்டணியில் ஒரு இடத்தில் போட்டியிட்டு வென்ற நான், பல்வேறு பிரச்சினைகளுக்காக தொடர்ந்து ஒற்றை ஆளாகசட்டப் பேரவையில் குரல் கொடுத்து வருகிறேன்.
என்னுடன் கூடுதல் உறுப்பினர்கள் இருந்தால், என் கோரிக்கையும் வலுப்பெறும். என் கட்சியும் வலுப்பெறும். தமிழகத்தில்பாஜக காலூன்ற வேண்டும் என்று விரும்புகிறது. அதற்காக,மத்திய அரசு அமைப்புகள், அதிகாரிகளைப் பயன்படுத்துகிறார்கள். அதில் சில வெற்றியும்கண்டுள்ளனர்.
தமிழகத்தில் பாஜக வளரவே இல்லை, எதுவுமே செய்ய முடியாது என்று தப்புக் கணக்கு போடக்கூடாது. பல அரசுகளை கவிழ்த்து, எம்எல்ஏ-க்களை கும்பலாக ஈர்த்தவர்கள் என்பதால், அவர்களிடம் தமிழகம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். காங்கிரஸ் கட்சியுடன் எனக்கு உறவோ, நெருக்கமோ கிடையாது. எனவே, அவர்களது நடவடிக்கைகள் குறித்து நான் கருத்து கூற விரும்பவில்லை.
சிபிஐ வழக்கில் சிக்கியுள்ளவர்கள் பாஜக கூட்டணிக்கு வந்து கொண்டிருக்கிறார்கள். அதேபோல, சிபிஐ வழக்கைப் பயன்படுத்தி, தவெக தலைவர் விஜய்யை கூட்டணிக்கு இழுக்க அமித் ஷா முயற்சிக்கலாம். அது நிறைவேறுமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். இவ்வாறு வேல்முருகன் கூறினார்.