‘எங்கள் கூட்டணிக்கு வந்தால் தகுதியான இடங்களை வழங்குவோம்’ - விடாமல் விஜய்க்கு வலைவீசும் பாஜக

‘எங்கள் கூட்டணிக்கு வந்தால் தகுதியான இடங்களை வழங்குவோம்’ - விடாமல் விஜய்க்கு வலைவீசும் பாஜக
Updated on
1 min read

“தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றிக்கு விஜய் தடைக் கல்லாக இருக்கக் கூடாது. அவர் எங்களுடன் இணைந்தால் தகுதியான இடங்களை வழங்குவோம்” என விஜய்க்கு பாஜக வலைவீசி இருக்கிறது.

இதுதொடர்பாக, பாஜக செய்தி தொடர்பாளர் ஏ.ஏன்.எஸ்.பிரசாத் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக சட்டப் பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. அந்த பீதியால் தான், கொள்கை இல்லாத 'லெட்டர் பேட்' கட்சிகளை எல்லாம் திரட்டி அண்ணா அறிவாலயத்தில் திமுக ஒரு சந்தர்ப்பவாத கூட்டணியை அமைத்துள்ளது.

நேற்று வந்த தேமுதிக-வுக்கு ராஜ்ய சபா எம்பி பதவி வழங்கியதால், கடந்த ஏழு ஆண்டுகளாக கூட்டணியில் விசுவாசமாக இருக்கும் விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் கடும் கொதிப்பில் உள்ளனர். "எங்கள் விசுவாசத்துக்கு இதுதான் மரியாதையா?" என சிறுத்தைகளும், தோழர்களும் உள்ளுக்குள் குமுறி வருகின்றனர். காலங்காலமாக திமுக-வுக்காக உழைத்த தொண்டர்களும், புதிய கட்சிகளின் வரவால் ஓரங்கட்டப்பட்டு கண்ணீரில் உள்ளனர்.

திமுக-வின் ஊழல் மற்றும் குடும்ப ஆட்சி ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கும் எதிரானது. அரசை எதிர்த்து ஒரு வார்த்தை பேசினால் கூட, நள்ளிரவில் பயங்கரவாதிகளைப் பிடிப்பது போல பெரும் போலீஸ் படையுடன் வந்து கைது செய்யும் கொடுமை அரங்கேறுகிறது. ஹிட்லர் ஆட்சியில் கூட இத்தகைய அடக்குமுறைகள் இருந்திருக்குமா என்பது சந்தேகமே. தமிழகத்தின் சினிமாத் துறை இன்று முழுமையாக ஸ்டாலின் குடும்பத்தின் பிடியில் சிக்கியுள்ளது.

மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால், கருத்துச் சுதந்திரம் முழுமையாகப் பறிக்கப்படும். அடுத்த சில மாதங்களிலேயே உதயநிதி ஸ்டாலினின் மகன் இன்பநிதி, திமுக இளைஞரணி செயலாளராக முடிசூட்டப்படுவார். திமுக-வை வீழ்த்துவதே தனது லட்சியம் என தவெக தலைவர் விஜய் கூறி வருவது உண்மையானால், அவர் உடனடியாக தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைய வேண்டும்.

தீய சக்திகளின் தவறான ஆலோசனைகளை ஏற்று, திமுக எதிர்ப்பு வாக்குகளைப் பிரித்து, பாஜக - அதிமுக கூட்டணியின் வெற்றிக்கு அவர் தடைக்கல்லாக இருக்கக்கூடாது.

தமிழக அரசியலில் விஜய் ஒரு மாபெரும் சரித்திர நாயகனாக மாறவும், மக்கள் நல அரசியலை முன்னெடுக்கவும் இதுவே சரியான தருணம். விஜய்க்கான தகுதியான இடத்தையும் மரியாதையையும் தேசிய ஜனநாயகக் கூட்டணி நிச்சயம் வழங்கும். விஜய் இப்போதே முடிவெடுக்காவிட்டால், தேர்தல் முடிவுக்குப் பின் திமுக-வின் பாசிச கரங்கள் அவர் மீது பாயும். அவர் கட்சி நடத்தவே முடியாத நிலை உருவாகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

‘எங்கள் கூட்டணிக்கு வந்தால் தகுதியான இடங்களை வழங்குவோம்’ - விடாமல் விஜய்க்கு வலைவீசும் பாஜக
டார்கெட் உதயநிதி... அதிமுக கூட்டணியின் வியூகத்தை முறியடிக்குமா திமுக?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in