மீண்டும் மீண்டும் வம்பு... ரங்கசாமியின் பொறுமையை சோதிக்கும் பாஜக!

படங்கள்: எம்.சாம்ராஜ்

படங்கள்: எம்.சாம்ராஜ்

Updated on
1 min read

புதுச்சேரியில் ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு எதிராக பாஜக அமைச்சர் ஜான்குமார் பல ரூட்களில் குடைச்சல் கொடுத்து வரும் நிலையில், என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் பிரதான அமைச்சரான லட்சுமிநாராயணனின் ராஜ்பவன் தொகுதிக்கும் இப்போது பங்கம் உண்டாக்கிக் கொண்டிருக்கிறது பாஜக.

நகர் பகுதியில் உள்ள ராஜ்பவன் தொகுதியில் வடமாநிலத்தவரும் கணிசமாக வசிக்கின்றனர். அரவிந்தர் ஆசிரம பக்தர்களின் வாக்கு களும், மீனவர்கள் வாக்குகளும் இங்கு கணிசமாக உள்ளது. அதை கணக்கிட்டு மாநில பாஜக தலைவர் வி.பி.ராமலிங்கம் இந்தத் தொகுதியின் மீது கண் வைத்திருப்பது கூட்டணிக்குள் புது குமைச்சலை உண்டாக்கிக் கொண்டிருக்கிறது.

அண்மையில் ராஜ்பவன் தொகுதியில் தனது அலுவலகத்தை திறந்த வி.பி.ராமலிங்கம், தீபாவளி சமயத்தில் வீடு வீடாகச் சென்று மக்களுக்கு தீபாவளி பரிசுகளையும் வாரி வழங்கினார். இந்தத் தொகுதிக்குள் நடக்கும் கோயில் திருவிழா உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகளிலும் பங்கேற்கிறார். தொகுதிக்குள் சின்னதாய் ஒரு பிரச்சினை என்றாலும் உடனேஆஜராகி விடுகிறார். தொகுதிக்குட்பட்ட முக்கிய இடங்களில் தாமரை சின்னத்துடன் கூடிய ராமலிங்கத்தின் போஸ்டர்களும் பளபளக்கின்றன.

இதுபற்றி என்.ஆர்.காங்கிரஸ் தரப்பில் விசாரித்தபோது, "அமைச்சர் லட்சுமி நாராயணனும் முதல்வர் ரங்கசாமியிடம் இவ்விஷயத்தை சுட்டிக் காட்டியிருக்கிறார். ‘நீங்கள் வழக்கம் போல் கட்சி வேலையைப் பாருங்கள். ராஜ்பவன் தொகுதி உங்களுக்குத் தான்’ என முதல்வர் உறுதியாகச் சொன்னதால் அமைச்சர் வழக்கம் போல் பணிகளை செய்து வருகிறார். என்.ஆர்.காங்கிரஸ் வென்ற தொகுதிகளை ரங்கசாமி எப்படியும் விட்டுத்தரமாட்டார். அதையும் மீறி பாஜக ஏதும் செய்தால் அவர் தனது பாணியில் செயல்படுவார்" என்கின்றனர் புன்சிரிப்புடன்.

வி.பி.ராமலிங்கத்திடம் இதுபற்றிகேட்டதற்கு, "அனைத்து தொகுதியிலும் எங்கள் கட்சியை வலுப்படுத்துகிறோம். 30 தொகுதிகளிலும் பாஜக-வை வளர்க்கிறோம். கூட்டணியில் எந்தத் தொகுதி யாருக்கு ஒதுக்கப்பட்டாலும் கூட்டணி தர்மத்துடன் வேலை செய்வோம்" என்றார்.

இவர்கள் இப்படிச் சொன்னாலும், என்.ஆர்.காங்கிரஸ் தொகுதிகளை குறிவைத்து பாஜக-வும் அவர்களின் பி டீம் என்று சொல்லப்படும் ஜோஸ் சார்லஸ் தரப்பும் போட்டி போட்டு நல உதவிகள் என்ற பெயரில் பணத்தை வாரி இறைக்கிறார்கள். தன்னோடு கூட்டணி வைக்காவிட்டால் பாஜக-வுக்கு புதுச்சேரியில் வேலை இல்லை என்று நன்கு உணர்ந்திருந்தும் ரங்கசாமி இவை அனைத்தையும் அமைதியாக வேடிக்கை பார்த்து வருகிறார்.

தேர்தல் நெருக்கத்தில் ரங்கசாமி தடாலடி முடிவு எடுப்பார் அல்லது தொகுதி பங்கீட்டில் கறார் காட்டுவார் என்று ஒரு தரப்பினர் சொல்லும் அதே சமயம், பாஜக-வும் முரண்டு பிடிக்கும் அவரை வழிக்குக் கொண்டுவர புது ரூட் எடுத்து குடைச்சல் கொடுக்கலாம் என்றும் சிலர் சொல்கிறார்கள்.

<div class="paragraphs"><p>படங்கள்: எம்.சாம்ராஜ்</p></div>
‘சந்திர’மானவர் Vs ‘பெல்’ புள்ளி | உள்குத்து உளவாளி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in