

நாமக்கல்: “ஓ.பன்னீர்செல்வத்தை அதிமுகவில் சேர்க்காதது சரியான முடிவு என்பதை எடப்பாடி பழனிசாமி நிரூபித்து விட்டார். சிவாஜியை காட்டிலும் ஓ பன்னீர்செல்வம் மிகப்பெரிய நடிகர்” என பாஜக மாநில துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம் தெரிவித்தார்.
திருச்சியில் மார்ச் 11-ம் தேதி நடைபெறும் பாஜக மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ள உள்ளார். இது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நாமக்கல் மாவட்ட பாஜக அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற கட்சியின் மாநில துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது: திமுகவில் உள்ள பாரம்பரிய நிர்வாகிகளை விட கட்சி மாறி வந்த நிர்வாகிகள் அதிகம்.
உதாரணத்துக்கு கண்ணப்பன், சேகர்பாபு, எ.வ.வேலு, முத்துசாமி, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், ஜெகத்ரட்சகன், டி. எம்.செல்வகணபதி, ரகுபதி உள்ளிட்டோர். மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்ற பயத்தில் தான் மாற்றுக் கட்சியினரை திமுக இணைத்துக் கொண்டிருக்கிறது. பெரும் விலை கொடுத்து கூட்டணியில் கட்சியினரை திமுக சேர்க்கிறது. இரட்டை எஞ்சின் ஆட்சி முறை தான் தமிழகத்திற்கு தேவை என மக்கள் முடிவு எடுத்து விட்டனர். தேசிய தலைமையுடன் இணைந்து நடத்தும் ஆட்சி தான் தமிழகத்துக்கு நல்லதாக அமையும்.
வட மாநிலங்களில் மத்திய அரசு இயற்றும் சட்டங்களை ஏற்றுக் கொள்ளும் அரசு இருப்பதால் அங்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. முறையற்ற ஆட்சி தமிழகத்தில் நடப்பதால் மாநிலத்தின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. இதற்கு சரியான தீர்வு, அதிமுக ஆட்சி தமிழகத்தில் அமைய வேண்டும். கூட்டணி வலுவாக இருந்தால் மட்டும் போதாது மக்கள் ஆதரவும் வேண்டும். அந்த வகையில் கடந்த 1996-ம் ஆண்டு அதிமுகவிடம் அனைத்து கட்சிகளும் கூட்டணியில் இருந்தன. எனினும் மக்கள் ஆதரவு இல்லாததால் அதிமுக தோல்வி அடைந்தது. அதுபோல் தற்போது திமுகவிற்கு எதிரான மன நிலையில் மக்கள் உள்ளனர். அதனை அறுவடை செய்ய வேண்டும் என்ற காரணத்தினால் தவெக தலைவர் விஜய் தவெக, திமுகவிற்கும் தான் போட்டி எனக் கூறுகிறார்.
ஓ பன்னீர்செல்வத்தை அதிமுகவில் சேர்க்காதது சரியான முடிவு என்பதை எடப்பாடி பழனிசாமி நிரூபித்து விட்டார். திமுகவில் ஓ.பன்னீர்செல்வம் இணைந்ததால் அவர் அதிமுகவை இத்தனை ஆண்டு காலம் அழிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்துள்ளார் என்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது. சிவாஜியை காட்டிலும் மிகப்பெரிய நடிகர் ஓ.பன்னீர்செல்வம்.
திமுக மீது புகார் எழும் போது அதை மடைமாற்றும் விதமாக அரசு செய்தி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அதிமுக தலைமையில் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெறும். மார்ச் 15-ம் தேதிக்குள் அனைத்தும் நிறைவு செய்யப்படும். பாஜக எந்தெந்த தொகுதிகளில் வெற்றி பெறுமோ அந்தந்த தொகுதிகளைக் கேட்போம். 234 சட்டப்பேரவை தொகுதிகளிலும் திமுகவுக்கு எதிரான வேட்பாளர்கள் தான். அவர்களை நாங்கள் களத்தில் இறக்குவோம். எங்களைப் பொறுத்தவரை திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்பதுதான் இலக்கு” இவ்வாறு அவர் தெரிவித்தார்.