

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி
புதுச்சேரியில் மீண்டும் ரங்கசாமி தலைமையில் கூட்டணி ஆட்சியை அமைக்க பாஜக பகீரதப் பிரயத்தனம் செய்கிறது. ஆனால், இத்தனை நாளும் தனது கோரிக்கைகளை எல்லாம் கேட்டும் கேட்காதது போல் இருந்த பாஜக-வை இதுதான் சமயம் என்று சுற்றலில் விட்டுக் கொண்டிருக்கிறார் ரங்கசாமி. விளைவு, மத்திய அமைச்சர்கள் ஒருவர் மாற்றி ஒருவராக புதுச்சேரிக்கு வந்து ரங்கசாமியின் மனதைக் கரைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்தத் தேர்தலில், இப்போதுள்ள கூட்டணியே தொடருமா அல்லது இன்னொரு கூட்டணியில் அங்கம் வகிப்பீர்களா என்று கேட்பவர்களுக்கு எல்லாம் “கூட்டணி பற்றி தேர்தல் நெருங்கும் போது பேசலாம்” எனச் சொல்லி வரும் முதல்வர் ரங்கசாமி, பாஜக தரப்புக்கும் இதே பதிலைச் சொல்லிவிட்டார். இந்த நிலையில், புதுச்சேரி மாநில பாஜக தேர்தல் பொறுப்பாளராக அறிவிக்கப்பட்ட மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா, கடந்த மாதம் நேரில் வந்து ரங்கசாமியை சந்தித்துப் பேசினார். அப்போது ரங்கசாமி சில கோரிக்கைகளை முன்வைத்ததாகவும் அவற்றை பாஜக தலைமையின் கவனத்துக்குக் கொண்டு செல்வதாக மத்திய அமைச்சர் சொன்னதாகவும் தகவல் பரவியது.
இதையடுத்து, பாஜக தேசிய செயல் தலைவராக நியமிக்கப்பட்ட நிதின் நபின் முதல் வேலையாக புதுச்சேரிக்குப் புறப்பட்டு வந்தார். தனது இல்லம் தேடி வந்து சந்தித்துப் பேசிய நிதின் நபினை அப்பா பைத்தியம் சாமி கோயிலுக்கு அழைத்துச் சென்று பூஜை செய்து எலுமிச்சை பிரசாதம் தந்து ஆசி வழங்கினார் ரங்கசாமி. நிதினைத் தொடர்ந்து ரங்கசாமியைத் தேடி வந்து சந்தித்த மத்திய உள்துறை இணையமைச்சர் நித்தியானந்த் ராயும் அப்பா பைத்தியம் சாமி கோயிலில் வழிபாடு நடத்தி ரங்கசாமி காலில் விழுந்து வணங்கி எலுமிச்சை பிரசாதத்தைப் பெற்றதுடன் அங்கேயே அன்னதான மண்டபத்தில் உணவும் சாப்பிட்டுச் சென்றார்.
இவர்களைத் தொடர்ந்து குடியரசு துணைத்தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனும் புதுச்சேரிக்கு வந்து ரங்கசாமியை சந்தித்துப் பேசினார். அவரிடம் சகஜமாகப் பேசிய ரங்கசாமி, புதுச்சேரியின் கவனிக்கப்படாத கோரிக்கைகளை பட்டியலிட்டார். அதற்கு, "புதுச்சேரிக்கான மகத்தான திட்டங்கள் பிரதமர் வருகையின் போது செயல்வடிவம் பெறும்” என உத்தரவாதம் அளித்துச் சென்றார் ராதாகிருஷ்ணன்.
இத்தனை சந்திப்புகள் நடந்த பிறகும் மனதில் உள்ளதை இன்னும் வெளிப்படையாகப் பேசியபாடில்லை ரங்கசாமி. இதுபற்றி என்டிஏ வட்டாரங்களில் விசாரித்த போது, “பிஹாரில் தங்களை விட குறைவான எண்ணிக்கையில் எம்எல்ஏ-க்களை வைத்திருக்கும் நிதிஷ் குமாரை கடந்த முறையும் இப்போதும் முதல்வராக அங்கீகரித்திருக்கிறது பாஜக. மகாராஷ்டிராவிலும் ஆட்சி மாற்றம் ஏற்படக் காரணமாக இருந்த ஷிண்டேவை முதல்வர் பதவியில் அமர்த்தி ஆதரவளித்தது.
அதன்படியே, இந்த முறையும் புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி வெற்றிபெற்றால் ரங்கசாமி தான் முதல்வர் என்பதில் உறுதியாக இருக்கிறது பாஜக. தனி மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைத்தால் கூட யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் மத்திய அரசின் தயவின்றி ஆட்சி நடத்துவது கடினம். மத்தியில் 2029 வரை பாஜக ஆட்சி நிச்சயம் என்பதால், பாஜக ஆதரவில்லாமல் ரங்கசாமியால் எதையும் சாதிக்க முடியாது. இது அவருக்கும் தெரியும் என்றாலும் அதை அவரது வாயால் சொல்ல வைப்பதற்காகவே மத்திய அமைச்சர்கள் மாறி மாறி புதுச்சேரிக்கு படையெடுத்துக் கொண்டிருக்கிறார்கள்” என்றனர்.