பெண்களின் வாக்குகளை குறிவைக்கும் கட்சிகள்: காத்திருக்கும் ‘கலக்கல்’ அறிவிப்புகள்

பெண்களின் வாக்குகளை குறிவைக்கும் கட்சிகள்: காத்திருக்கும் ‘கலக்கல்’ அறிவிப்புகள்
Updated on
2 min read

சுமார் ஒன்றரை லட்சம் பெண்கள் கலந்து கொண்ட மேற்கு மண்டல மகளிர் மாநாட்டை பிரமாதமாக நடத்தி முடித்திருக்கிறது திமுக. அதற்கு ஒரு நாள் முன்னதாக, பெண்களுக்கான மானிய விலை ஸ்கூட்டர் அறிவிப்பை வெளியிட்டியிருக்கிறார் பழனிசாமி. இது எல்லாம் தமிழக தேர்தல் களம் பெண்களை நோக்கி திரும்பி இருப்பதற்கான அறிகுறிகள்.

இளைஞர்கள், பெண்களின் வாக்குகளை எப்படி நம்பக்கம் திருப்புவது என்பதில் தான் முக்கிய அரசியல் கட்சிகளின் முழு கவனமும் இப்போது இருக்கிறது. இதற்கு, நடிகர் விஜய்யின் அரசியல் வருகையும் முக்கிய காரணம்.

“அதிமுக ஆட்சிக்கு வந்தால் 5 லட்சம் பெண்களுக்கு இருசக்கர வாகனங்கள் வாங்க மானியம் வழங்கப்படும்” என்று திருப்போரூர் பரப்புரையில் அறிவித்திருக்கிறார் பழனிசாமி. தாலிக்குத் தங்கம் திட்டம் மீண்டும் தொடங்கப்படும் என்பதை முன்னமே அவர் அறிவித்திருக்கிறார். கடந்த தேர்

தலிலேயே அனைத்துப் பெண்களுக்கும் ரூ.1,500 ரூபாய் மாதாந்திர உதவித் தொகை வழங்கப்படும் என அறிவித்திருந்த பழனிசாமி, இந்தத் தேர்தலுக்கு அதை மேலும் உயர்த்தி அறிவிக்கக் கூடும் என்கிறார்கள்.

இப்படி, பெண்களுக்கான அறிவிப்புகள் ஒரு பக்கம் இருக்க, திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத மாநிலம் என்று தொடர் பிரச்சாரத்தை மேற்கொண்டு வரும் பழனிசாமி, தங்களது ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இருந்தது என்று நிறுவும் வேலையிலும் ஈடுபட்டிருக்கிறார். அதிமுக இப்படி என்றால், திமுக தரப்பில் இலவச பேருந்து பயணம், மகளிர் உரிமைத் தொகை, புதுமைப்பெண் திட்டம், தோழி விடுதிகள் திட்டம், மகப்பேறு விடுப்பு அதிகரிப்பு, உள்ளாட்சிகளில் 50% இட ஒதுக்கீடு என பெண்களுக்கான பல சலுகை திட்டங்களை நிறைவேற்றிய தைரியத்தில் இருக்கிறார்கள். அதோடு மட்டும் நின்றுவிடாமல் மகளிர் மாநாடுகளையும் மண்டல வாரியாக நடத்தத் தயாராகி வரும் திமுக, முதல்கட்டமாக மேற்கு மண்டல மாநாட்டை நடத்தி பெண்களைத் திரட்டிக் காட்டியிருக்கிறது.

ஆண்ட கட்சியும் ஆளும் கட்சியும் பெண்களுக்கான சிறப்புத் திட்டங்களை அறிவித்தும் செயல்படுத்தியும் வருவது ஒருபுறமிருக்க, இப்படியான எந்த அறிவிப்புகளும் இல்லாத போதே தவெக தலைவர் விஜய்யின் கூட்டங்களில் பெண்கள் கூட்டம் குதூகலத்தில் குத்தாட்டம் போடுகின்றன. முந்தைய காலத்தில் எம்ஜிஆருக்கும் இப்படித்தான் ‘தாய்க்குலங்கள்’ தங்களின் ஆதரவைத் தந்து அவரை அரியணையில் அமரவைத்தார்கள். இங்கே கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், மற்ற கட்சிகளைப் போல் எவ்வித ‘கவனிப்புகளும்’ இல்லாமலே விஜய்க்கு தன்னெழுச்சியாக பெண்கள் கூடுகிறார்கள்.

இவர்களுக்கு மத்தியில் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான், 117 தொகுதிகளில் பெண்களையே வேட்பாளர்களாக அங்கீகரித்து இளம் பெண்களின் வாக்குகளை கவர்ந்து வருகிறார். இப்படி அனைத்துக் கட்சிகளும் பெண்களின் வாக்குகளை குறி வைத்தாலும், ஆளும் திமுக-வும், ஆண்ட அதிமுக-வும் பெண்களுக்காக செய்ததையும் இனிமேல் செய்யப் போவதையும் உரிமையுடன் சொல்லி அவர்களின் வாக்குகளை வளைக்க திட்டம் போடுகின்றன. தேர்தல் நெருக்கத்தில் பெண்களை மையப்படுத்தி இவ்விரு கட்சிகளுமே இன்னும் பல கலக்கல் அறிவிப்புகளை வெளியிடலாம் என்கிறார்கள். அனைத்தையும் பார்த்துவிட்டு தமிழக பெண்கள் யார் சொன்னதை நம்பி வாக்களிக்கப் போகிறார்கள் என்பது சஸ்பென்ஸ்!

பெண்களின் வாக்குகளை குறிவைக்கும் கட்சிகள்: காத்திருக்கும் ‘கலக்கல்’ அறிவிப்புகள்
திமுகவை வீழ்த்தவே பாஜகவுடன் கூட்டணி என்பதை மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்: இபிஎஸ் அறிவுரை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in