“ஆறுமுகத்தின் அருளால் பாஜகவுக்கு ஏறுமுகம் தான்!” - அடித்துச் சொல்லும் பொதுச் செயலாளர் ராம.சீனிவாசன் | நேர்காணல்
சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கட்சி நிர்வாகிகளை தேர்தலுக்காகத் தயார்படுத்தி வருகிறார் தமிழக பாஜக பொதுச் செயலாளர் பேராசிரியர் ராம.சீனிவாசன். அவரிடம் ‘ஜனநாயகத் திருவிழா’வுக்காகப் பேசினோம்.
தொகுதிப் பங்கீடுகளே முடியாத போது அதிமுக-வில் விருப்ப மனு பெறப்படுவதை பாஜக எப்படி பார்க்கிறது?
தேர்தலில் எல்லா தொகுதிகளுக்கும் விருப்ப மனு பெறுவது வழக்கமான ஒன்று தான். அந்த விதத்தில் அதிமுக-வில் விருப்ப மனு பெறுவது நல்ல விஷயம் தான். இதை பாஜக வரவேற்கிறது. விருப்ப மனு பெறும்போது தான், எந்தெந்த தொகுதிகளுக்கு பேசுவது, அங்கு யார் வலிமையாக இருக்கிறார்கள், அவர்களின் பின்னணி என்ன என்பதை எல்லாம் தெரிந்து கொள்ள முடியும்.
டிடிவி.தினகரன், ஓபிஎஸ், அன்புமணி, பிரேமலதா ஆகியோர் உங்கள் கூட்டணிக்கு வருவார்கள் என எதிர்பார்க்கிறீர்களா?
ஏற்கெனவே எங்களோடு இருந்த இவர்கள் மீண்டும் பாஜக கூட்டணிக்கு வரமாட்டார்கள் என ஏன் நினைக்க வேண்டும்? திமுக கூட்டணியானது திமுக என்ன சொல்கிறதோ, அதற்கு ஜால்ரா போடும் கூட்டணியாக உள்ளது. அதனால் திமுக கொடுக்கும் இடங்களை வாங்கிக்கொண்டு கள்ள மவுனம் காக்கிறார்கள். அது கொத்தடிமை கூட்டணி. அதில் பிளவு வராது. ஆனால், எங்கள் கூட்டணி அப்படியல்ல... ஆளுமையுள்ள கூட்டணி.
பாமக உள்கட்சி பிரச்சினையை முடித்துவிட்டு வரட்டும் என காத்திருக்கிறோம். விஜய்காந்த் ஒருபோதும் திமுக-வுடன் கூட்டணி அமைத்தது இல்லை. அந்த மரபை பிரேமலதாவும் தொடர்வார் என எதிர்பார்க்கிறோம். டிடிவிக்கு எடப்பாடி பங்காளி; ஸ்டாலின் பகையாளி. அதனால் நிச்சயம் அவர் பகையாளியுடன் போக விரும்பமாட்டார் என நம்புகிறோம்.
அதிமுக கூட்டணியில் 60 சீட் கேட்கிறீர்களாமே..?
எத்தனை தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்பதை விட ஒவ்வொரு கட்சியும் வெற்றி சதவீதத்தை உயர்த்த வேண்டும் என நினைக்கிறோம். இந்த அணுகுமுறையில் தொகுதி பங்கீடு நடைபெற வேண்டும் என நினைக்கிறோம். காங்கிரஸ் கட்சியைப் போல் அதிக தொகுதிகளில் போட்டியிட்டு தோற்பதில் அர்த்தமில்லை. அதிகமான தொகுதிகளில் போட்டியிட்டால் தான் பெரிய கட்சி என்பதில்லை. இருந்தாலும் கடந்த முறையை விட இம்முறை கூடுதலான தொகுதிகளில் பாஜக போட்டியிடும்.
தமிழ்நாடு எப்போதும் பாஜக-வுக்கு அவுட் ஆஃப் கன்ட்ரோல் தான் என்கிறாரே ஸ்டாலின்?
தமிழகத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என பாஜக எப்போதும் நினைத்ததில்லை. கட்டுப்பாடு என்பதே கெட்ட வார்த்தை. திமுக தான் மீடியா, சமூகவலைதளம், சேனல்களை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறது. இந்தக் கட்டுப்பாடுகளால் தான் தமிழ்நாடு வளரவில்லை. நாங்கள் மாநிலத்தை கட்டுப்படுத்தாமல் மாநில மக்கள், தொழில்கள், பொருளாதாரம், மருத்துவ வசதிகள் மேம்பட உதவி செய்வோம்.
தேர்தலுக்காக திருப்பரங்குன்றம் விவகாரத்தை பாஜகவும் இந்து அமைப்புகளும் ஊதிப் பெரிதாக்குவதாகக் கூறப்படுகிறதே?
திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழி பலியிடுவோம் எனக் கூறியதில் இருந்து தான் பிரச்சினை வந்தது. அதை நாங்களா செய்தோம்? இதில், பாஜக வினையாற்றியதை விட எதிர்வினை யாற்றியது தான் அதிகம். தற்போது, பாஜகபிரச்சினை செய்வதாகக் கூறுகிறார்கள். மலையில் ஆடு, கோழி வெட்டுவோம் என்றவர்களை யாரும் தட்டிக்கேட்கவில்லை. கோயில் படிக்கட்டில் நவாஸ்கனி எம்.பி பிரியாணி சாப்பிட்டதை யாரும் தட்டிக்கேட்கவில்லை. தர்காவுக்குச் சொந்தமான இடத்தில் தீபம் ஏற்றவேண்டும் என நாங்கள் கேட்கவில்லையே... இதில் அவர்களுக்கு என்ன பிரச்சினை? இதை தேர்தலுக்கான அரசியல் எனக் கருதினால் அதைத் தொடர்ந்து செய்வோம்.
செங்கோட்டையன் தவெக-வில் சேர்ந்ததால் உங்கள் கூட்டணிக்கு கொங்கு மண்டலத்தில் வெற்றி பாதிக்குமா?
அவர் மட்டும் தான் போயிருக்கிறார். போன இடத்தில் அவருக்கு முக்கியத்துவம் கொடுத்து வைத்துள்ளனர். அதற்கு விசுவாசம் காட்ட வேண்டும் அல்லவா, அதனால், அதிமுக-வில் இருந்து இன்னும் பலர் வருவார்கள் எனக் கூறி வருகிறார். செங்கோட்டையன் பிறந்த வீட்டிலிருந்து புகுந்த வீட்டுக்குச் சென்றுள்ளார். புகுந்த வீட்டுக்குச் சென்ற புதிய மருமகள் நன்றாகச் சமையல் செய்தால், வாசல் தெளித்துக் கோலம் போட்டால் அங்கு நல்ல மரியாதை கிடைக்கும். சும்மா படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தால் மரியாதை கிடைக்காது. அதுமாதிரி தவெக-வுக்குச் சென்ற புதிய மருமகள் செங்கோட்டையன் ஆர்வமாக வேலை செய்கிறார். அவரால் என்டிஏ கூட்டணி கோட்டைக்குப் போவதை தடுக்க முடியாது
பிஹார் பேரவைத் தேர்தல் மற்றும் கேரள உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் தமிழகத்திலும் எதிரொலிக்குமா?
நிச்சயமாக எதிரொலிக்கும். மக்களவைத் தேர்தலில் பாஜக-வுக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றார்கள். அதன் பிறகு நடந்த டெல்லி, ஹரியாணா, மகாராஷ்டிரா, பிஹார் ஆகிய அனைத்து தேர்தல்களிலும் பாஜக வெற்றிப்பெற்றுள்ளது. கேரள உள்ளாட்சி தேர்தலில் மாநிலத்தின் தலைநகரை கைப்பற்றியுள்ளோம். அங்கு 2,000 உள்ளாட்சி பிரதிநிதிகள் பாஜக-வுக்கு கிடைத்துள்ளனர். தமிழகத்திலும் ஆறுமுகத்தின் அருளால் பாஜக-வுக்கு ஏறுமுகம் தான்.
ஆனால் திராவிட மாடல் ஆட்சியே தொடரும் என திமுக-வும், அதன் கூட்டணிக் கட்சிகளும் சொல்கின்றனவே..?
அடுத்தும் திமுக ஆட்சி தான் என திமுக-வினர் போதையில் டாஸ்மாக் பாட்டில் மீது அடித்து வேண்டுமானால் சத்தியம் செய்வார்கள். சாப்பிடும் சோற்றில் அடித்து சத்தியம் செய்யச் சொல்லுங்கள் பார்க்கலாம்; செய்யமாட்டார்கள். பாஜக-வின் வாக்கு வங்கி 20 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. இது அதிமுக வாக்கு வங்கியுடன் சேரும்போது எங்களுக்கு வெற்றி உறுதி. திமுக-வின் திறனற்ற ஆட்சி நிர்வாகத்தைப் பார்த்து மக்கள் கொதித்துப்போய் உள்ளனர். ஆனால், இது எதுவுமே தெரியாமல் முதல்வர் நாடக அரசியல் நடத்திக் கொண்டிருக்கிறார்.
