

கோவை: “நூறு நாள் வேலை திட்டத்தை ஒழிக்க வேண்டும் என்பதே பாஜகவின் குறிக்கோள்” என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.
பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள இன்று கோவை வந்த அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியது: “100 நாள் வேலைத் திட்டத்தை அழித்து, ஒழிக்க வேண்டும் என்பதே பாஜகவின் குறிக்கோளாக உள்ளது. காந்தியின் பெயரை அந்தத் திட்டத்திற்கு இருக்கக் கூடாது என மாற்றி உள்ளனர். அவர்கள் ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் காந்தியடிகளை சிறுமைப்படுத்துவதில் குறியாக உள்ளனர்.
‘ஹேராம் ஹேராம்’ என்று கூறிய காந்தியின் பெயரை நீக்கிவிட்டு ‘ஜெய் ஶ்ரீராம்’ என பெயர் சூட்டுகின்றனர். 100 நாள் வேலை திட்டத்திற்கு ஒதுக்கிய நிதியை ஆண்டுதோறும் படிப்படியாக குறைத்து வருகின்றனர். 125 நாள் என்று உயர்த்தி நாடகம் ஆடுகின்றனர். இந்த போக்கை வன்மையாக கண்டிக்கிறோம். திமுக தலைமையிலான முற்போக்கு கூட்டணி சார்பில் தமிழ்நாடு முழுவதும் டிசம்பர் 24-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
தமிழ்நாட்டில் விருதுநகர் மாவட்டத்தில் அமைய உள்ள ‘பிஎம் மித்ரா’ ஜவுளிப் பூங்கா திட்டத்தில், தமிழகத்தில் அதிக தொகை வசூலிக்கப்படுவது தொடர்பான தகவல்களை திரட்டி அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று முதலீட்டாளர்கள் நலன் காக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்று அவர் தெரிவித்தார்.