

கோவையில் பாஜக மாநில மையக்குழு கூட்டத்துக்கு வந்த தேசிய அமைப்பு பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷ், மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர்.
கோவை: தேர்தலில் ஏற்பட்ட தோல்வி குறித்து கோவையில் நேற்று தொடங்கிய பாஜக மாநில மையக்குழு கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்படவுள்ளது. இதில்மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர் தமிழிசை, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பின்பு, பாஜகவின் மாநில அளவிலான மையக்குழுவின் 2 நாள் ஆலோசனைக் கூட்டம் கோவையில் நேற்று தொடங்கியது. தேசிய அமைப்பு பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷ் தலைமை வகித்தார். இதில் நயினார் நாகேந்திரன், தமிழக மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன், முன்னாள் தலைவர்கள் தமிழிசை, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உட்பட பலர் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்தில் தேர்தல் தோல்வி, கூட்டணி விவகாரம், பெற்ற வாக்குகள், தமிழகத்தில் அடுத்ததாக வரும் உள்ளாட்சித் தேர்தல் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட உள்ளது. இன்று நடைபெறும் கூட்டத்தில், மாநில ஐடி, சோஷியல் மீடியா செய்தி தொடர்பாளர்கள், அணித் தலைவர்கள், 26 பாஜக வேட்பாளர்கள், கோட்ட பொறுப்பாளர்கள், அமைப்பு செயலாளர்கள் பங்கேற்கின்றனர்.
முன்னதாக செய்தியாளர்களிடம் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறும்போது, “அதிமுகவின் உள்கட்சி பிரச்சினையில் கருத்து கூற முடியாது. மக்களை சந்திப்பது, மக்கள் பிரச்சினை குறித்து ஆராய்வது என அடுத்தகட்ட நகர்வை நோக்கி செல்கிறோம். சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சரியான ஒருங்கிணைப்பை தரவில்லை என்ற புகார் எங்கும் இல்லை” என்றார்.