

கரூர்: கரூரில் தவெக கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த துயர சம்பவத்தை விசாரித்த டிஎஸ்பிக்கள், காவல் ஆய்வாளர்கள் உட்பட 19 போலீஸார் வெவ்வேறுமண்டலங்களுக்கு நேற்று முன்தினம் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
கரூரில் கடந்த ஆண்டு செப்.27-ம் தேதி நடைபெற்ற தவெக பொதுக்கூட்டத்தில் அதன் தலைவர் விஜய் பங்கேற்றோர். இதில் நேரிட்ட நெரிசல் காரணமாக 41 பேர் உயிரிழந்தனர். இதுதொடர்பான வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. முன்னதாக இந்த வழக்கை விசாரித்த கரூர் டிஎஸ்பி வி.செல்வராஜ், தூத்துக்குடி மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் டிஎஸ்பியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல, கரூர் ஊரகம், குளித்தலை டிஎஸ்பிக்கள் பி.அப்துல்கபூர், கே.கே.செந்தில்குமார் ஆகிய 2 பேரும் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் டிஎஸ்பிக்களாக முறையே தருமபுரி, கடலூர் மாவட்டங்களுக்கு மாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.
இதேபோல, கரூர் நகர காவல் ஆய்வாளராக இருந்து, தற்போது தனிப் பிரிவில் உள்ள ஜி.மணிவண்ணன், பசுபதிபாளையம் ஆய்வாளராக இருந்து தற்போது நங்கவரத்தில் உள்ள சதீஷ்குமார் மற்றும் ஆய்வாளர்கள் திலக்(தென்னிலை), ராஜேந்திர பிரசாத் (சின்னதாராபுரம்) ஆகியோர் வடக்கு மண்டலத்துக்கு பணியிட மாறுதல் செய்யப்பட்டனர். ஆய்வாளர்கள் முத்துக்குமார் (வெங்கமேடு), சீனிபாபு (பசுபதிபாளையம்), அருள் பிரகாஷ் (கரூர் நகரம்), நெப்போலியன் (க.பரமத்தி), கோபி (வேலாயுதம்பாளையம்), தனிப் பிரிவில் உள்ள உதவி ஆய்வாளர் நாகராஜ் ஆகியோர் தென் மண்டலத்துக்கும், தோகைமலை காவல் ஆய்வாளர் ஜெயராமன் ஆவடி மாநகர காவல் துறைக்கும் மாறுதல் செய்யப்பட்டனர்.
கரூர் துயர சம்பவத்தின்போது சிறப்பு உதவி ஆய்வாளராக இருந்த ராஜாமணி (தற்போது ஐஜி தனிப் பிரிவு, கரூர் நகரம்), தனிப்பிரிவு தலைமை காவலர்கள் எஸ்.ராமலிங்கம் (சின்னதாராபுரம்), மோகன்ராஜ் (க.பரமத்தி) ஆகியோர் தென்மண்டலத்துக்கும், தலைமைக் காவலர்கள் கதிர்வேல் (வேலாயுதம்பாளையம்) சக்கரைபாவா (அரவக்குறிச்சி) ஆகியோர் வடக்கு மண்டலத்துக்கும் மாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.