

தமிழிசை
சென்னை: “எங்களுக்கு விசில் தேவை இல்லை. குக்கரிலேயே விசில் உள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியில் மீண்டும் பல கட்சிகள் இணைய உள்ளன’’ என பாஜக மூத்த தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, “தமிழகத்தில் தேர்தல் அறிக்கை தொடர்பாக அனைத்து துறையைச் சார்ந்தவர்களையும், மக்களையும் சந்திக்க இருக்கிறோம்.
மக்களின் வளர்ச்சி சார்ந்ததாக தேர்தல் அறிக்கை இருக்கும். நீங்களே எங்களை பாராட்டும் அளவுக்கு தேர்தல் அறிக்கை இருக்கும். 2026 தேர்தலில் எங்கள் கூட்டணி நிச்சயம் வெற்றியடையும்.
டபுள் இல்லை, பாஜவின் டிரிபிள் என்ஜின் அரசு பல மாநிலங்களில் நடந்து கொண்டிருக்கிறது. ஆனால், திமுக ஆட்சி சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதில் ட்ரபுள் (TROUBLE) , மக்களுக்கான திட்டங்களை கொண்டுவருவதில் ட்ரபுள் என ட்ரபுள் எஞ்ஜின் மாடலாக ஆட்சி நடத்துகிறது.
செவிலியர்கள், மருத்துவர்கள், துப்புரவு தொழிலாளர்கள், சத்துணவு பணியாளர்கள் என அனைவரும் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
எங்களுக்கு விசில் இப்போது உடனே தேவை இல்லை. குக்கரிலேயே விசில் உள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியில் மீண்டும் பல கட்சிகள் இணைய உள்ளன. எங்கள் கூட்டணி குறித்து திருமாவளவன் கவலைப்பட தேவையில்லை. தேசிய ஜனநாயக கூட்டணி முழுமையாக உள்ளது.
இண்டி கூட்டணிதான் முழுமையடையாத கூட்டணி. அவர்கள் உள்ளுக்குள் புழுங்கிக் கொண்டே இருக்கிறார்கள். எப்போது வெடிக்கும் என்று தெரியவில்லை. மத்திய அரசின் அனைத்து உதவிகளையும் பெற்றுவிட்டு, நாங்கள் மத்திய அரசின் உதவியே இல்லாமல் போராடிக்கொண்டிருக்கிறோம், உழைத்துக் கொண்டிருக்கிறோம் என முதல்வர் கூறிவருகிறார்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.