

விழுப்புரம்: “திமுக பாணியில் அரசியல் செய்ய நினைத்தால் தவெகவை மக்கள் விரட்டி அடிப்பார்கள்” என பாஜக மாநில இளைஞரணி தலைவர் எஸ்.ஜி.சூர்யா எச்சரித்துள்ளார்.
பிரதமர் மோடியின் நட்சத்திர பிறந்தநாளையொட்டி விழுப்புரம் ஆஞ்சநேயர் கோயிலில் பாஜக சார்பில் இன்று (அக்.14) சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது. மேலும், கோயில் குளத்தை சீரமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற பாஜக இளைஞரணி மாநிலத் தலைவர் எஸ்.ஜி.சூர்யா கூறியது: “ஆந்திராவில் பாஜகவின் கூட்டணி அரசாங்கம் உள்ளது. பாஜகவைச் சேர்ந்தவர்களும் அமைச்சரவையில் உள்ளனர். பாஜக கூட்டணி அரசாங்கம், தனது மாநிலத்துக்கு தண்ணீர் இல்லையென்றாலும், தமிழகத்துக்கு தண்ணீர் கொடுப்போம் என பரந்த மனப்பான்மையுடன் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இருவர் அமைச்சர்களாக உள்ளனர். கர்நாடகவில் காங்கிரஸ் அரசாங்கம் உள்ளது. கர்நாடக காங்கிரஸ் அரசாங்கத்திடம், ஆந்திராவில் பெறப்பட்டது போன்ற உத்தரவாதத்தை முதல்வர் விஜய்யால் பெற முடியவில்லை என்றால், கூட்டணியில் காங்கிரஸ் கட்சி எதற்கு இருக்க வேண்டும். தமிழகத்துக்கு எந்த நன்மையும் செய்யாத காங்கிரஸ் கட்சியை, கூட்டணியில் வைத்துக்கொண்டு விஜய் என்ன செய்யபோகிறார்.
பாஜக கூட்டணியில் உள்ள ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, தமிழக முதல்வருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளித்து உத்தரவாதம் அளிக்கிறார். காவிரி தண்ணீருக்காக தமிழக முதல்வர் விஜய்யை வர வேண்டாம் என கர்நாடக முதல்வர் சிவக்குமார் சொல்கிறார். இங்குள்ள காங்கிரஸ் என்ன செய்கிறது. எதிர்க்கட்சி வரிசையில் இருந்தாலும் கூட, தமிழகத்துக்கு நல்லது நடக்க வேண்டும் என பாஜக முயற்சி எடுக்கிறது.
கர்நாடகாவில், இதுபோன்று சுமுகமாக பேசி தீர்வு காணவில்லை என்றால் ஆளுவதற்கு தகுதியற்றவர்கள் என்பதுதான் பொருள். நாட்டின் நலனில் பாஜக மற்றும் காங்கிரஸ் எவ்வாறு செயல்படுகிறது என்பதை முதல்வர் விஜய்தான் புரிந்துகொள்ள வேண்டும்.
மத்திய அரசின், அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வை நோக்கி முதல்வர் விஜய் செல்ல விரும்பினால், தீர்வை செய்து கொடுக்க பாஜக அரசு தயாராக இருக்கிறது. எனவே, காங்கிரஸ் கட்சியை விஜய் நம்ப வேண்டாம். அவர்களை கூட்டணியில் வைத்துக்கொள்வதற்கு சவக்குழியை தோண்டிக் கொள்வதற்கு சமமானதாகும்.
அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல் என்பது, தமிழகத்தில் இதுவரை நடைபெறவில்லை. முன்கூட்டியே திட்டமிட்டு கடந்த மாதமே, ஆந்திர அரசு மின்சாரத்தை கொள்முதல் செய்துவிட்டது. பத்து ரூபாய்க்கு கொள்முதல் செய்துள்ளனர்.
தமிழக அரசாங்கம் முன்கூட்டியே கணிக்காமல் கோட்டை விட்டு, ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.37-க்கும் வாங்குவது, மக்களின் பல கோடி ரூபாய் பணம் விரையம் செய்யப்படுகிறது. ஆளுவதற்கு தகுதி இல்லாமலும், திறமை இல்லாமலும், தேவையில்லாத அரசியல் விஷயத்தையெ பேசிக் கொண்டிருக்கின்ற மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல் குமார், ஆளுவதை பற்றியும் சற்று சிந்திக்க வேண்டும்.
தினசரி 5 மணி நேரம் மின்வெட்டு ஏற்படுவதால், பல லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மின்வெட்டு பிரச்சினையில் கவனம் செலுத்தாமல், பத்து பைசாவுக்கு பயன் தராதவற்றை பேசி, திமுக பாணியில் அரசியல் செய்ய நினைத்தால் மக்கள் விரட்டி அடிப்பார்கள்.
திமுகவை போன்று மடைமாற்று வேலையை செய்தால், மக்கள் பதிலடி கொடுப்பார்கள். வீ த லீடர்ஸ் அமைப்பின் பாதை வேறு, எங்களது பாதை வேறு. அவர்களுக்கு வாழ்த்துகள். அவர்களால் பாஜகவுக்கு பாதிப்பு இல்லை. பல மாநிலங்கல் பல தலைவர்கள் விலகி சென்றாலும், அசைக்க முடியாத சக்தியாக பாஜக உள்ளது.
முரண்பட்ட கருத்துகளை விசிக தலைவர் திருமாவளவன் பேசி வருகிறார். தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டு, டெல்லியில் எஸ்ஐஆருக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்றவர், எஸ்ஐஆரால் தமிழக தேர்தல் முடிவுகள் தவறாக பெறப்பட்டுள்ளதாக, தவெக ஆட்சிக்கு எதிராக கருத்து தெரிவிக்கிறார். திருமாவளவன், மிகப்பெரிய மனவருத்தத்துடன், குழப்பத்தில் இருக்கிறார். இன்று பேசுவதை நாளை மறுக்கிறார், நாளை பேசுவதை நாளை மறுநாள் மறுக்கிறார்.
திருமாவளவனின் நிலையான நிலைப்பாடு என்னவென்று, அவரது கட்சியினருக்கே புரியவில்லை. மாற்றி மாற்றி ஏன் முடிவெடுக்கிறார் என விசிகவினரும் குழப்பத்தில் உள்ளனர். திருமாவளவன் என்ன நினைக்கிறார் என்பதை தெளிவாக தெரிவிக்க வேண்டும்.
திமுகவுடன் மீண்டும் செல்லலாமா, தவெகவில் நீடிக்கலாமா என்பதற்கு விடை தெரியாததால், பாஜகவை விமர்சிப்பதை ஆயுதமாக பயன்படுத்தி வருகிறார். இதைத்பார்த்து, தமிழக மக்களும் சளித்துபோய்விட்டனர். உங்கள் கட்சியை முதலில் காப்பாற்றும் வேலையை பார்க்கலாம்.
தவெக ஆட்சி என்பது அனுபவம் இல்லாத ஒரு ஆட்சியாகும். ஊழலை ஒழிப்பார்கள், நல்லாட்சி கொடுப்பார்கள் என நாங்களும் வரவேற்றோம். ஆனால், நான்கு மாத ஆட்சியை பார்க்கும்போது, மிக மோசமான ஆட்சியாக தெரிகிறது. தவறு செய்வது இயல்பு, தவறுகளை திருத்திக் கொள்ள வேண்டும்.
திமுகவுக்கு சற்றும் சளைத்தவர்கள் இல்லை என இருக்கின்றனர். இடைத்தேர்தலில் திக்கி திக்கித்தான் வெற்றி பெற்றனர். பொதுத் தேர்தலில் விரட்டி அடிக்காமல் இருக்க வேண்டும் என்றால், திமுக பாணியில் அரசியல் செய்யாமல், மக்கள் நலனுக்காக அரசியல் செய்ய வேண்டும் என சிந்தித்ததாக தெரியவில்லை. உங்கள் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த மக்களுக்காக செயல்படுங்கள்” என்று அவர் கூறினார்.