

நாராயணன் திருப்பதி
ராமேசுவரம்: “தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மதவாதப் போக்குடன் நடந்து கொள்கிறார். திராவிட முன்னேற்றக் கழகம் ஒரு மதவாதக் கட்சியாக மாறிக் கொண்டிருக்கிறது” என பாஜக மாநில தலைமை செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி குற்றம்சாட்டியுள்ளார்.
ராமேசுவரத்தில் அவர் இன்று செய்தியாளர் சந்திப்பில் கூறியது: “கடந்த சில நாட்களாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மதவாதப் போக்குடன் நடந்து கொள்கிறார். திராவிட முன்னேற்றக் கழகம் ஒரு மதவாதக் கட்சியாக மாறிக் கொண்டிருக்கிறது. தமிழகத்தில் மதவாத சிந்தனையை தூண்டி விட்டு, மதங்களுக்கு இடையே குழப்பத்தை ஏற்படுத்தி ஒரு மிகப் பெரிய சதித் திட்டத்தை தமிழகத்தில் வருகின்ற தேர்தலிலே அரங்கேற்றுவதற்கான முயற்சியை திமுகவும் அதனுடைய கூட்டணி கட்சிகளும் செய்கிறார்களோ என்கின்ற ஐயம் நம்மிடத்திலே இருக்கிறது.
கோயில்களில் அரசியல் பேசக் கூடாது என்று சொல்பவர்கள் கிறிஸ்துமஸ் விழாவில் முழுமையாக அரசியல் பேசி, பாஜகவையும் பிற இயக்கங்களையும் குற்றம் சொல்லி ஒரு தவறான முன்னுதாரணத்தை இந்த தேர்தலுக்காக செய்கிறார்கள். பெரும்பான்மையின மக்களின் மனதை புண்படுத்தி, அதன் மூலம் சிறுபான்மை மக்களை குளிர்விக்கலாம் என்று பணிகளை செய்து கொண்டிருக்கிறார்கள்.
வேறு சில மாநிலங்களில் சட்டம் - ஒழுங்கு பிரச்சினைகளை காரணம் காட்டுகின்றார் முதல்வர். ஆனால், தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு சீர்கேட்டுப் போய் இருக்கிறது. பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி வருகிறது. பள்ளிக்கூடங்களில் பாலியல் வன்முறைகள் அதிகரித்து வருகின்றது. பாதுகாப்பற்ற மாநிலமாக தமிழகம் விளங்கிக் கொண்டிருக்கின்றது.
திமுக ஆட்சிக் காலத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தில் போதைப் பொருள் கடத்தல் கடந்த நான்கரை ஆண்டுகளாக அதிகரித்திருக்கிறது. இதை திராவிட மாடல் அரசாங்கம் கண்டு கொள்ளவில்லை. இதற்கெல்லாம் 2026 தேர்தலில் தமிழகம் தக்க பதிலடி தரும்.
அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மிகப் பெரிய வெற்றி பெற்று, திமுகவை தோல்வியைத் தழுவ வைக்கப் போகிறது.
தமிழக முதல்வரும், காங்கிரஸ் கட்சியினரும் நூறு நாள் வேலை திட்டத்தில் மகாத்மாக காந்தியடிகளின் பெயரை எடுத்து விட்டார்கள் என்று பொங்கிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், இந்தியாவிலேயே மகாத்மா காந்தியை பற்றி மிக கொச்சையாக பேசியவர்கள் திராவிட கட்சியை சார்ந்தவர்கள் தான். அதற்கான ஆதாரங்கள் திராவிட கழக புத்தகங்களிலேயே இருக்கிறது.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு சவால் விடுறோம். தமிழ்நாட்டில் எல்லா திட்டங்களில் உள்ள பெயர்களிலும் கருணாநிதி பெயரில் உள்ள திட்டங்கள், ஈ.வெ.ரா பெயரில் உள்ள திட்டங்களில் அவர்களின் பெயர்களை எடுத்துவிட்டு மகாத்மா காந்தியின் பெயரை வைப்பதற்கு தயாரா?
வாஜ்பாய் தலைமையிலான அரசு தான் சர்வ சிக்ஷா அபியான் அதாவது, அனைவருக்கும் கல்வி திட்டத்தை கொண்டு வந்தார்கள். ஆனால், அப்படியே அந்த திட்டத்தின் பெயரையே மாற்றி கட்டாய கல்வி சட்டமாக பெயர் மாற்றி காங்கிரஸார் கொண்டு வந்தனர். எங்கு சென்றாலும் தமிழை பரப்பிக் கொண்டிருக்கிறார் நமது பிரதமர் மோடி. ஆனால் தமிழை சாகடித்துக் கொண்டிருக்கிறது திமுக ஆட்சி” என்று அவர் தெரிவித்துள்ளார்.