

சென்னை: திமுகவைப் போலவே 4 பேர் பிடியில் பாஜக இருக்கிறது என அக்கட்சியிலிருந்து விலகிய அமர்பிரசாத் ரெட்டி குற்றம்சாட்டி உள்ளார்.
பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை ‘வீ த லீடர்ஸ்’ என்ற புதிய இயக்கத்தைத் தொடங்கியுள்ள நிலையில், தமிழக பாஜகவின் முக்கிய நிர்வாகியான அமர்பிரசாத் ரெட்டி அக்கட்சியிலிருந்து விலகி அண்ணாமலையுடன் இணைந்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், பாஜக தலைமை மீது அடுக்கடுக்கான புகார்களை முன்வைத்துள்ளார். வீடியோவில் அமர்பிரசாத் ரெட்டி கூறியிருப்பதாவது:
கடந்த 2013-ம் ஆண்டு பாஜகவில் இணைந்தேன். கடந்த ஓராண்டாக கட்சியின் செயல்பாடுகள் எனக்கு மிகுந்த வேதனையை அளித்தன.
முன்னாள் தலைவர்கள் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் எல்.முருகன் ஆகியோர் தேர்தல்களில் தோல்வியடைந்த போதும், அவர்களுக்கு ஆளுநர் பதவி மற்றும் மத்திய அமைச்சர் பதவி வழங்கி அங்கீகாரம் அளிக்கப்பட்டது. அண்ணாமலை தலைவராகப் பொறுப்பேற்ற போது 3 சதவீதமாக இருந்த வாக்கு வங்கியை 12 சதவீதமாக உயர்த்தினார். ஆனால், ஒரு கூட்டணிக்காக அண்ணாமலையை ஒரே இரவில் அதுவும் ஒரு மணி நேரத்தில் முடிவெடுத்து, அவரை தலைவர் பதவியிலிருந்து நீக்கிவிட்டு, நயினார் நாகேந்திரனை நியமித்தனர்.
திமுக ஒரு குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்று நாம் சொல்கிறோம். ஆனால், தமிழக பாஜகவும் ஒரு நான்கு பேர் கொண்ட குழுவின் கையில் தான் சிக்கியுள்ளது. உண்மையில், பாஜகவும் திமுகவும் ஒன்றுதான். தோற்றவர்களுக்கே மீண்டும் மீண்டும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. இதில் ஏதோ ஒரு லாபம் இருப்பதாக நான் சந்தேகிக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.