

காரைக்குடி: “தமிழகத்தில் பாதுகாப்பு இல்லை என்ற உண்மையை தவெக தலைவர் விஜய் பேசியதை வரவேற்கிறேன்” என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்தார்.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: “திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற வலியுறுத்தி இந்து அமைப்புகள் 40 ஆண்டுகளாக போராடி வருகின்றன. தமிழக அரசின் நீதிமன்ற, இந்து விரோத செயலால், தேவையில்லாத சர்ச்சை எழுந்துள்ளது. இந்து மத உணர்வுகளை கொச்சைப்படுத்துவது திமுகவின் தொழிலாகவே மாறிவிட்டது. 20-ஐ விட 80 பெரிது என்பதை திமுக உணர வேண்டும்.இ.ஜெகநாதன்
கடந்த 1981-ல் வெளியான தமிழகத் தொல்லியல் துறையின் குன்றத்துக் கோவில் நூலில் 1945-ம் ஆண்டு 2-ம் உலகம் யுத்தம் வரை தீபத்தூணில் தீபம் ஏற்றப்பட்டது என குறிப்பிடப்பட்டுள்ளது. யுத்த காலத்துக்காக தீபம் ஏற்றுவதை நிறுத்தியிருக்கலாம். மீண்டும் தீபம் ஏற்ற 1994-ல் நீதிமன்ற தீர்ப்பு வந்தது. தீபம் ஏற்றி வந்ததுதான் மரபு. அதை நிறுத்தி வைத்தது தற்காலிகம்.
தீபத்தூணை ‘சர்வே கல்’ என்று கூறுகிறார் கனிமொழி. ஆண்டவனையே ஏற்காமல் கல் என்று கூறுவதுதான் கருணாநிதி குடும்பத்துக்கு பழக்கம். இதற்கு தக்க பதிலடியை 2026-ல் முருக பக்தர்கள் கொடுப்பர். தீபத்தூணில் தீபம் ஏற்ற சொன்ன தீர்ப்பால் மத மோதல், பதற்றம் வரவில்லை. அதற்கு முஸ்லிம் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
சுல்தான் ஆட்சிக் காலத்தில் 40 ஆண்டுகள் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் பூஜையே இல்லாமல் இருந்துள்ளது. இதுபோன்ற மறைக்கப்பட்ட, திரிக்கப்பட்ட நம் நாட்டின் சரித்திரம் பாடப்புத்தகங்களில் இடம்பெற வேண்டும்.
இந்து சமய அறநிலையத் துறையே உண்டியல் சுரண்டல், கோயில் நிலங்கள் அபகரிப்பு செய்கிறது. இந்துகளுக்கு விரோதமாக செயல்படுகிறது. மதுரை சென்ற என்னை தடுத்து போக்குவரத்தை பாதிப்பை ஏற்படுத்தியதே போலீஸார்தான். ஆனால் போக்குவரத்து பாதிப்பை ஏற்படுத்தியதாக என் மீது வழக்கு பதிந்துள்ளனர்.
பல நூற்றுக்கணக்கான சிவாச்சாரியர்களை உருவாக்கியவர் பிச்சை குருக்கள். அவரது கடிதத்தையே தவறாக பயன்படுத்தியுள்ளனர். தமிழகத்தில் பாதுகாப்பு இல்லை என்ற உண்மையை தவெக தலைவர் விஜய் பேசியதை வரவேற்கிறேன்” என்று அவர் கூறினார்.