தமிழ் சினிமாவுக்கு நலன் மாதிரி இயக்குநர்கள் ஏன் தேவை? - நடிகர் கார்த்தி விவரிப்பு

தமிழ் சினிமாவுக்கு நலன் மாதிரி இயக்குநர்கள் ஏன் தேவை? - நடிகர் கார்த்தி விவரிப்பு
Updated on
2 min read

“மற்ற திரையுலகினரைப் போல, தமிழிலும் புதிதாக முயற்சிக்க வேண்டும்” என்று நடிகர் கார்த்தி தனது பேச்சில் குறிப்பிட்டார்.

ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘வா வாத்தியார்’. நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி, ராஜ்கிரண், சத்யராஜ், கருணாகரன், கீர்த்தி ஷெட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

பல மாதங்களாக தயாரிப்பில் இருக்கும் இப்படம் டிசம்பர் 12-ம் தேதி வெளியாகவுள்ளது. இதன் விளம்பரப்படுத்தும் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. இதில் படக் குழுவினருடன், பிரபலங்களும் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் நடிகர் கார்த்தி பேசும்போது, “நலன் சொன்னது போல தர்மத்தின் வாழ்வு தனை சூது கவ்வும் என ஒரு படம் செய்து விட்டு, 10 வருடம் கழித்து தர்மம் வெல்லும் எனப் படம் செய்துள்ளார். நலனுக்கு தான் நிறைய இயக்குநர்களே ரசிகர்களாக இருக்கிறார்கள். எங்கு சென்றாலும் நலன் உடன் படம் செய்கிறீர்களா என ஆவலாகக் கேட்பார்கள். அவர் எல்லா இடத்திலும் ஸ்கோர் செய்து விடுகிறார்.

அரசியல்வாதியைக் கடத்துவது போல ஒரு கதை சொல்வார் என நினைத்தால் ’வா வாத்தியார்’ கதை சொன்னார். இது எப்படி நம்மால் செய்ய முடியும் என பயமாக இருந்தது. எவ்வளவு ஜெயித்தாலும் நாம் தோற்றதைப் பற்றித்தான் பேசுவார்கள். அதனால் துணிந்து செய்து விட வேண்டும் என ஒத்துக்கொண்டேன்.

நலன் 70, 80 கமர்ஷியல் படங்களுக்கு அர்ப்பணிப்பாக இப்படத்தைச் செய்துள்ளார். இந்தப் படத்துக்குள் போன பிறகு தான், எம்ஜிஆரின் விஸ்வரூபம் புரிந்தது.

அவர் தன் ஆளுமையை மக்கள் மத்தியில் நல்லவிதமாகக் கொண்டு சேர்த்தவர். அவர் படங்களில் தம்மடிக்க மாட்டார் தண்ணியடிக்க மாட்டார். அதை தன் ரசிகர்களும் சொல்லிக் கொடுத்து அப்படியே இருக்கச் செய்தவர். எப்படி இப்படி ஒரு மனிதர் இருந்தார் என வியக்க வைத்தவர்.

“வாழ்ந்தாலும் மறைந்தாலும்" பேர் சொல்ல வேண்டும், இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்” என பாடி வைத்து விட்டு போய் விட்டார். இன்று சென்னை ரயில் நிலையத்தில் 5000 முறை அவர் பெயர் சொல்கிறார்கள். இன்றும் அவர் பற்றி பேசுகிறோம்.

எம்ஜிஆர் ரசிகர்களின் அன்புக்கான கடனாகவே தான் இந்தப் படத்தில் நடித்தேன். நலன் அவரைப் பற்றி பெரிய ஆராய்ச்சி செய்து படம் எடுத்துள்ளார். 90 கிட்ஸ் சொல்வது போல நலன் யாருனு இந்தப் படம் வந்த பிறகு தெரியும்.

மலையாளம் போல நம் தமிழ் சினிமாவில் இல்லையே எனத் தோணும். நாமும் புதிதாக முயற்சிக்க வேண்டும். அதற்கு நலன் மாதிரி இயக்குநர் வேண்டும்.

இந்தப் படம் எல்லோருக்கும் பிடிக்கும். ஒவ்வொருவரும் அவ்வளவு கடின உழைப்பைத் தந்துள்ளார்கள். சத்யராஜ் மாமா திரும்பவும் ஸ்பெஷலாக மொட்டை பாஸாக நடித்துள்ளார்.

ராஜ்கிரண் ஒரு எம்ஜிஆர் பக்தராக நடித்துள்ளார். கீர்த்தி ஷெட்டிக்கு முதல் தமிழ்ப் படம் சூப்பராக நடித்துள்ளார். சந்தோஷ் சூப்பரான இசையைத் தந்துள்ளார். எல்லோரும் பெரும் உழைப்பைப் போட்டு உருவாக்கியுள்ள படம். நம் தமிழ் சினிமாவுக்கு பெருமையாக இந்தப் படம் இருக்கும்.

ஞானவேலுக்கு இந்தப் படம் பெரிய லாபம் தரக்கூடிய படமாக வெற்றியைத் தரட்டும். புரட்சித் தலைவரின் ஆசியுடன் இந்தப்படம் ஜெயிக்க வேண்டும்” என்று பேசினார் கார்த்தி.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in