''பழநி தொகுதி கட்டாயம் வேண்டும்'' - எல்.முருகனை முற்றுகையிட்டு பாஜகவினர் வாக்குவாதம்

''பழநி தொகுதி கட்டாயம் வேண்டும்'' - எல்.முருகனை முற்றுகையிட்டு பாஜகவினர் வாக்குவாதம்
Updated on
2 min read

பழநி: தே.ஜ.கூட்டணியில் பழநி தொகுதியை பாஜகவிற்கு ஒதுக்காததை கண்டித்து, பழநி வந்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகனை, நிர்வாகிகள், தொண்டர்கள் ஆவேசத்துடன் முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது.

சட்டப்பேரவை தேர்தலில் இம்முறை பழநி தொகுதி பாஜகவிற்கு ஒதுக்கப்படுமென தொண்டர்களும், நிர்வாகிகளும் எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர். நம்பிக்கையோடு தேர்தல் பணிகளையும் தொடங்கினர். இந்நிலையில் பழநி தொகுதி, அதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டது. இதனால் அதிருப்தி அடைந்த நிர்வாகிகள், தொண்டர்கள் நேற்று முன்தினம் (மார்ச் 27) பழநி தொகுதியை பாஜகவிற்கு ஒதுக்கக் கோரி, தேங்காய் உடைத்தும், கட்சி அலுவலகம் முன்பு சாலையில் அமர்ந்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, இளைஞரணி நிர்வாகி சதீஷ் (38) கட்சி அலுவலக மாடியில் ஏறி நின்று தற்கொலை மிரட்டல் விடுத்தார். இதனையடுத்து, தொண்டர்களின் கோரிக்கை குறித்து மாவட்ட மற்றும் மாநில நிர்வாகிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் நல்ல அறிவிப்பு வரும். எனவே, போராட்டத்தை கைவிட வேண்டும் என நிர்வாகிகள் அறிவுறுத்தினர். இதையடுத்து, தொண்டர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இந்நிலையில் நேற்று (மார்ச் 28) பழநி வந்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பழநி அடிவாரத்தில் உள்ள புலிப்பாணி ஆசிரமத்தில் சிறப்பு யாகம் நடத்தினார். பின்னர், மலைக்கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை (இன்று) காலை புலிப்பாணி ஆசிரமத்துக்கு வந்தார். அவரை ஆசிரமத்தில் வைத்து சந்திக்க கட்சியினர் முயன்றனர். ஆனால், தான் தங்கியிருக்கும் விடுதியில் வைத்து அனைவரையும் சந்திப்பதாகவும், தற்போது கலைந்து செல்லுமாறும் எல்.முருகன் கூறினார்.

அதை ஏற்க மறுத்து, அவருக்காக ஆசிரமத்துக்கு வெளியே கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் காத்திருந்தனர். ஆசிரமத்தில் இருந்து வெளியே வந்த அவரை, நிர்வாகிகள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ‘பழநி தொகுதி பாஜகவிற்கு ஒதுக்கப்படும் என்ற நம்பிக்கையில் 2 ஆண்டுகளாக பணியாற்றி வந்தோம். திடீரென அதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதை ஏற்றுக்கொள்ள முடியாது. பழநி தொகுதியை பாஜகவிற்கு ஒதுக்க வேண்டும். எங்களுக்கு முடிவு தெரியாமல் உங்களை இங்கிருந்து அனுப்ப முடியாது என்று நிர்வாகிகள் கூறினர்.

அதற்கு எல்.முருகன்,’ தொகுதி ஒதுக்கீடு செய்தது கட்சி மேலிடம் தான். உங்கள் கோரிக்கையை மேலிடத்தில் சொல்லி பழநி தொகுதியை பாஜவிற்கு ஒதுக்குவதற்கு ஏற்பாடு செய்கிறேன்’ என்று கூறிவிட்டு, காரில் ஏறிச் செல்ல முயன்றார். ஆனால், அவர் காரை மறித்து, தரையில் அமர்ந்து தொண்டர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, பழநி தொகுதியை ஒதுக்கவில்லையெனில் எங்களுக்கு கட்சி பதவியும் வேண்டாம், கட்சியும் வேண்டாம். எப்படியாவது பழநி தொகுதியை வாங்கித்தர வேண்டும் என்று கோஷம் எழுப்பினர். போராட்டத்துக்கு நடுவே கோபமாக காரில் காத்திருந்த எல்.முருகன் , நிர்வாகிகள் சிலரை அழைத்து, தொகுதி ஒதுக்குவது தொடர்பாக பேசலாம் என்று சொல்லியும் கோயில் என்று பார்க்காமல் போராட்டத்தில் ஈடுபடுவது நல்லதல்ல. இப்படி நடந்து கொள்வது சரியா? என்று கண்டித்தார்.

போராட்டத்தில் ஈடுபட்ட தொண்டர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்திய மேற்கு மாவட்ட தலைவர் ஜெயக்குமார், மத்திய இணை அமைச்சர் பழநி தொகுதியை பாஜகவிற்கு வாங்கித்தருவதாக கூறியுள்ளார். நிச்சயம் நல்ல பதில் கிடைக்கும்.

அதனால் போராட்டத்தை கைவிட்டு, அவர் செல்ல வழிவிடுங்கள், என்று கெஞ்சிக் கேட்டு கொண்டார். இதையடுத்து, போராட்டத்தை கைவிட்டு தொண்டர்கள், நிர்வாகிகள் கலைந்து சென்றனர்.

அதன்பின்னர், காரில் புறப்பட்ட எல்.முருகன், நிர்வாகிகள், தொண்டர்களை பார்க்காமல் இருப்பதற்காக கார் கண்ணாடியை ஏற்றிவிட்டபடி சென்றார். மத்திய இணை அமைச்சரை, சொந்த கட்சியினரே முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பழநியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே, இந்தப் போராட்டத்தால் அதிமுகவுக்கு ஒதுக்கப்பட்ட பழநி தொகுதி பாஜகவிற்கு கைமாறிவிடுமோ என்று ஒருவித அச்சத்தில் பழநி அதிமுகவினர் உள்ளனர்.

''பழநி தொகுதி கட்டாயம் வேண்டும்'' - எல்.முருகனை முற்றுகையிட்டு பாஜகவினர் வாக்குவாதம்
“எனக்கும் ஸ்டாலினுக்கும் இடையே தான் போட்டி” - வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் விஜய் பேச்சு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in