

அரூர்: தருமபுரியை அடுத்த அரூரில் பாஜக சார்பில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் விசிக தலைவர் திருமாவளவனை விமர்சித்ததால், அங்கு விசிகவினருக்கும் பாஜகவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு, இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதால் பதற்றம் ஏற்பட்டது.
தருமபுரி மாவட்டம், அரூரில் பாரதிய ஜனதா கட்சி பட்டியல் அணி சார்பாக மத்திய அரசின் நிதிகளை, தமிழக அரசு மாற்றுத் திட்டங்களுக்கு பயன்படுத்துவதாக கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. இதில் பாஜக மாவட்ட தலைவர் சரவணன், அமமுக அமைப்பு செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான ஆர்.ஆர்.முருகன் மற்றும் அதிமுக, பாமக உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் பாஜக மாவட்ட தலைவர் சரவணன் பேசுகையில், “மத்திய அரசின் நிதிகளை தமிழக அரசு மடை மாற்றம் செய்வதை கூட்டணி கட்சியில் இருக்கும் திருமாவளவன் கண்டிக்காதது ஏன்?” என்ற ரீதியில் பேசினார். அப்போது விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அரூர் வடக்கு ஒன்றிய விசிக செயலாளர் மூவேந்தன் தலைமையில் 50-க்கும் மேற்பட்டோர் திரண்டு, திருமாவளவன் குறித்து பேசியதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இரு தரப்பினருக்கு இடையே தரப்பிடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், விசிக தரப்பில் இருந்து காலணி வீசப்பட்டது. இந்நிலையில், அவர்களை முன்னாள் எம்எல்ஏ ஆர்.ஆர்.முருகன் சமாதானப்படுத்த முயற்சித்தார். ஆனால் அமைதி அடையாத விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், ஆர்ப்பாட்டம் முடிந்தவுடன் மாவட்ட தலைவர் சரவணன் காரில் ஏறி சென்று விட்ட நிலையில், மறியலில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் மற்றும் பாரதிய ஜனதா கட்சியினர் இடையே தகராறு ஏற்பட்டது.
இரு தரப்பினரும் கட்டைகள், கட்சி கொடிகளால் மாறி மாறி தாக்கிக் கொண்டனர். இதில் பாஜகவை சேர்ந்த ஒருவருக்கும், தடுத்த போலீஸார் ஒருவருக்கும் காயம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அங்கு குவிந்த போலீஸார் இரு தரப்பினரை விலக்கி அனுப்பி வைத்தனர். தொடர்ந்து. இரு தரப்பும் அரூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.