சென்னை: திமுகவுடன் தேமுதிக கூட்டணி அமைத்ததை விஜயகாந்த்தின் ஆன்மா ஒருபோதும் மன்னிக்காது என்று தமிழக பாஜக விமர்சித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக பாஜகவின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில், ‘‘தன் வாழ்நாள் முழுவதும் தீய சக்தி திமுகவை எதிர்த்து மக்கள் பணியாற்றியவர் கேப்டன் விஜயகாந்த். அதனால், விஜயகாந்த்துக்கும், அவர் உருவாக்கிய தேமுதிக-வுக்கும் கொடுமைகளையும், அவமானங்களையும் மட்டுமே வழங்கியது திமுக. அத்தகைய மக்கள் விரோத திமுகவுடன் இன்று கேப்டன் உருவாக்கிய இயக்கம் இணைந்ததை, ஒருபோதும் கேப்டனின் ஆன்மா மன்னிக்காது!’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, தேமுதிக பொதுச் செயலாளர் பிரமலதா, சுதீஷ் உள்ளிட்ட அக்கட்சியின் நிர்வாகிகள் திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்துக்கு இன்று காலை சென்றனர். அங்கு முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்தனர். அவர்களுக்கு சால்வை அணிவித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் வரவேற்றார். இந்த சந்திப்பின்போது துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் கே.என். நேரு, எ.வ. வேலு, சேகர் பாபு, கனிமொழி எம்.பி., முன்னாள் அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோர் இருந்தனர்.
சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பிரமலதா விஜயகாந்த், ‘‘தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தேமுதிக யாருடன் கூட்டணி என்ற கேள்வி நீண்ட நாட்களாக நிலவிவந்தது. அதன்படி, இன்று திமுகவுடன் தேமுதிக கூட்டணியை உறுதி செய்துள்ளோம். தேமுதிக நிர்வாகிகள், தொண்டர்கள் விரும்பியடிய திமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளோம். தேமுதிக முதன்முறையாக திமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளது.
2016-லேயே இந்தக் கூட்டணி அமைந்திருக்க வேண்டும். பழம் நழுவி பாலில் விழும் என்று கருணாநிதி கூறியிருந்தார். ஆனால், அது இப்போது கேப்டன் இல்லாதபோது தாமதமாக நடந்துள்ளது.
மற்றபடி இந்தத் தேர்தலில் தேமுதிக எத்தனை தொகுதிகளில் போட்டியிடும், எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடும் போன்றவை எல்லாம் அண்ணன் ஸ்டாலின் அறிவிப்பார். இதற்காக ஒரு குழு அமைக்கப்படும். அந்தக் குழு திமுகவுடன் ஆலோசனை செய்தபின்னர் முறைப்படி அறிவிப்பு வெளியாகும். ராஜ்யசபா எம்.பி. சீட் குறித்து எல்லாம் அண்ணன் ஸ்டாலின் உரிய நேரத்தில் அறிவிப்பார்’’ என்று தெரிவித்தார்.
இந்த சந்திப்பை அடுத்து மு.க. ஸ்டாலின் வெளியிட்ட சமூக ஊடக பதிவில், “தலைவர் கலைஞர் மேல் மாறாத அன்பு கொண்டவரும், எனது அன்பு நண்பருமான ‘கேப்டன்’ விஜயகாந்த் உருவாக்கிய தேசிய முற்போக்கு திராவிட கழகம், இன்று மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இணைந்திருப்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது.
சகோதரர் கேப்டன் உருவாக்கிய இயக்கத்தைத் தற்போது திறமையாக வழிநடத்தி வரும் பொதுச்செயலாளர் அன்புச் சகோதரி பிரேமலதா விஜயகாந்தையும், அக்கட்சியின் நிர்வாகிகளையும் வருக வருக என வரவேற்கிறேன்.
கருப்பு சிவப்பைக் கொடியில் தாங்கியிருக்கும் தங்களது நல்வரவு - நல்லுறவு தொடர்ந்து தமிழ்நாட்டின் உயர்வுக்குப் பங்களிக்கட்டும். திராவிட மாடல் ஆட்சி தொடரவும், தமிழ்நாடு அனைத்து வகையிலும் முன்னேறவும் இணைந்து பயணிப்போம். வெல்வோம் ஒன்றாக” என தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.