

சென்னை: விடுதலைப் போராட்ட வீரர் பூலித்தேவனின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக முதல்வர் விஜய் புகழ் வணக்கம் செலுத்தியுள்ளார்.
இதுகுறித்து தமிழக முதல்வர் விஜய் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு எதிராகத் தமிழக மண்ணில் முதல் இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு முன்னதாகவே துணிச்சலுடன் களம் கண்ட விடுதலைப் போராட்ட வீரரும், நெற்கட்டும்செவல் பாளையக்காரருமான மாவீரன் பூலித்தேவனின் பிறந்தநாளில், அவரைப் போற்றிப் பெருமிதத்துடன் நினைவுகூர்கிறேன்.
அடிமைத்தனத்தை ஏற்க மறுத்து, அந்நிய ஆதிக்கத்திற்கு எதிராகத் தனது இறுதி மூச்சுவரை அஞ்சாது போராடிய அவரது வீரமும், தாய்மண் மீதான பற்றும், சுயமரியாதை உணர்வும் தமிழர் வரலாற்றில் என்றும் அழியாத இடத்தைப் பெற்றுள்ளன. தாய்நாட்டு விடுதலைக்காகத் தன்னலமின்றிப் போராடிய மாவீரன் பூலித்தேவனின் புகழ் என்றும் நிலைத்திருக்கட்டும்’ எனத் தெரிவித்துள்ளார்.