

நீலகிரி மாவட்டம் நாடுகாணி சோதனைச் சாவடியில் கேரளாவிலிருந்து வரும் வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளித்த கால்நடை மருத்துவக் குழுவினர்.
கோவை / கூடலூர்: கேரள மாநிலத்தில் பறவைக் காய்ச்சல் பரவும் சூழலில், கேரளாவை ஒட்டியுள்ள தமிழக மாவட்டங்களில் மருத்துவக் கண்காணிப்பு, சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கோவை, நீலகிரியில் பறவைக் காய்ச்சல் பீதியால், பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கேரள மாநிலம் ஆலப்புழா, கோட்டயம் மாவட்டங்களில் பண்ணைகளில் வளர்க்கப்படும் கோழிகள், வாத்துகள் அதிக எண்ணிக்கையில் உயிரிழந்தன. அவற்றின் ரத்த மாதிரிகளைப் பரிசோதித்ததில் பறவை காய்ச்சல் பரவியிருந்தது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, அங்கு நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டதுடன், நோயால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கோழி, காடை, வாத்து இறைச்சி மற்றும் முட்டைகள் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக கோவை, நீலகிரி மாவட்டங்களில் பறவைக் காய்ச்சல் பீதி ஏற்பட்டுள்ளது.
கேரளாவுக்கு அருகில் உள்ள கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், சிறுமுகை பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் இயங்கி வருகின்றன. இவற்றில் கிருமி நாசினி தெளித்தல் உள்ளிட்ட நோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள பண்ணை உரிமையாளர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
கால்நடைத் துறை இணை இயக்குநர் மகாலிங்கம் கூறும்போது, “கோழிப் பண்ணைகளின் நுழைவுவாயில் பகுதிகளில் பொட்டாசியம் பெர்மாங்கனேட் கரைசல் கலந்த தண்ணீரை வைக்கவும், பண்ணைக்கு வரும் வாகனங்களில் கிருமி நாசினி தெளிக்கவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
கோவையில் இதுவரை எந்த கோழிக்கும் பறவைக் காய்ச்சல் அறிகுறி கண்டறியப்படவில்லை. கோழிகளுக்கு ஏதாவது அறிகுறி தென்பட்டால், உடனடியாக அருகில் உள்ள கால்நடை மருத்துவர்களுக்கு தகவல் கொடுக்குமாறு பண்ணை உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளோம்.
தமிழக-கேரள எல்லைகளான வாளையாறு, வேலந்தாவளம் உட்பட 12 இடங்களில் உள்ள சோதனைச்சாவடிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கேரளாவில் இருந்து தமிழகத்துக்கு வரும் வாகனங்கள் மீது கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது” என்றார்.
இதேபோல, தமிழக, கேரள மாநிலங்களின் எல்லையில் அமைந்துள்ள நீலகிரி மாவட்டத்தில் உள்ள கக்கனல்லா, நம்பியார் குன்னு, தாளூர், சோலாடி, பூலகுன்னு, நாடுகாணி மற்றும் பாட்டவயல் உள்ளிட்ட சோதனைச் சாவடிகளில் ஒரு கால்நடை உதவி மருத்துவர் தலைமையில், கால்நடை ஆய்வாளர் மற்றும் கால்நடைப் பராமரிப்பு உதவியாளர்கள் கொண்ட குழுவினர் பறவைக் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். மேலும், கேரளாவில் இருந்து கோழிகளை நீலகிரிக்கு கொண்டுவர தற்காலிகமாக தடை விதித்துள்ளனர்.