

கோவை மாவட்டம் வாளையாறு சோதனைச்சாவடியில் நேற்று கேரளாவில் இருந்து வந்த வாகனங்களுக்கு கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.
கோவை: கேரளாவில் பறவைக் காய்ச்சல் பரவியுள்ளதைத் தொடர்ந்து, தமிழக - கேரள எல்லையில் வாளையாறு உள்ளிட்ட 12 சோதனைச் சாவடிகளில் கால்நடைப் பராமரிப்புத் துறை சார்பில் 24 மணி நேர கண்காணிப்புப் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் ஆலப்புழாவில் உள்ள கோழிப் பண்ணைகளில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, தமிழக எல்லையோர மாவட்டங்களில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கோவை மாவட்டத்தில் ஆனைகட்டி, வாளையாறு, வேலந்தாவளம், மேல்பாவி, முள்ளி, மீனாட்சிபுரம், கோபாலபுரம், செம்மனாம்பதி, வீரப்பகவுண்டன்புதூர், நடுப்புணி, ஜமீன்காளியாபுரம், வடக்காடு ஆகிய 12 சோதனைச் சாவடிகளில் கால்நடைப் பராமரிப்புத் துறையின் சிறப்புக் குழுவினர் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து கோவை மண்டல கால்நடைப் பராமரிப்புத் துறை இணை இயக்குநர் சித்ரா தேவி கூறும்போது, “கேரளாவில் இருந்து வரும் சரக்கு வாகனங்கள், தமிழகத்தில் இருந்து கால்நடைத் தீவனம் கொண்டு செல்லும் வாகனங்கள் ஆகியவை முழுமையாகச் சோதனை செய்யப்படுகின்றன. கிருமிநாசினி தெளித்த பிறகே வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன.
வாகனங்களின் வருகை, புறப்படும் இடம், செல்லும் இடம் உள்ளிட்ட விவரங்களும் சேகரிக்கப்படுகின்றன. மேலும், கோழிப் பண்ணைகளுக்கும் முன்னெச்சரிக்கை அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன” என்றார்.