

கிருஷ்ணகிரி: மன்னார்குடி தொகுதி அமமுக எம்எல்ஏ காமரஜை, தினகரன் மிரட்டுகிறார் என புரட்சி அதிமுக பெங்களூரு புகழேந்தி தெரிவித்தார்.
இதுதொடர்பாக கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: அமமுக எம்எல்ஏ காமராஜ், தவெகவுக்கு செல்ல முடிவு செய்துவிட்டார். இதுகுறித்து அவர் என்னிடம் தெரிவித்தார். தினகரனுடன் யாரும் பயணிக்க முடியாது. காமராஜை, தினகரன் மிரட்டுகிறார். தினகரனுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை பழனிசாமி கொடுப்பாரா என்பதற்கு காலம்தான் பதில் சொல்லும்.
அதிமுக ஆட்சியின்போது, தினகரனிடம் 18 எம்எல்ஏ-க்கள் சென்றனர். அப்போது திமுகவிடம் 99 எம்எல்ஏ-க்கள் இருந்தனர். அப்போது திமுக தலைவர் ஸ்டாலின் நினைத்திருந்தால் ஆட்சி அமைத்திருக்க முடியும். ஆனால், அவர், “கொல்லைப்புற வழியாக ஆட்சிக்கு வர மாட்டேன்” என்றார். திமுகவுக்கு எப்போது அரசியல் செய்ய வேண்டும் என தெரியும். தமிழகத்தில் பாஜக காலூன்றக் கூடாது என்பதால் தான் ஒரு இடத்தில் மட்டுமே பாஜக வெற்றி பெற்றுள்ளது. பாஜக கொடுக்கும் நெருக்கடியால் தான் விஜய்யால் வெளிப்படையாக பேச முடியவில்லை.
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய் ஆதரவு கேட்டால், காங்கிரஸ், கம்யூனிஸ்ட்கள், விசிக தங்களது ஆதரவைப் திரும்ப பெறுவார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.