

சென்னை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் இன்று முதல் 3 நாட்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்.
வாரத்தில் 5 நாட்களுக்கு வேலை திட்டத்தை அமல்படுத்துவது, அனைத்து ஊழியர்களுக்கும் விகிதாச்சார அடிப்படையில் பிஎல்ஐ (லாபத்தின் அடிப்படையில் இணைப்பு ஊக்கத்தொகை) சமமாக வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி சங்கங்களின் கூட்டமைப்பும், இந்த கோரிக்கைகளுடன் ஐடிபிஐ வங்கியை தனியார்மயமாக்கும் முயற்சியைக் கைவிடுவது ஆகிய 3 கோரிக்கைகளை வலியுறுத்தி, அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கமும் நாடு தழுவிய அளவில் இன்று முதல் வரும் 30-ம் தேதி வரை வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளன.
இதுகுறித்து, இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் தமிழகப் பிரிவு துணைத் தலைவர் சி.பி.கிருஷ்ணன் கூறியதாவது: கோரிக்கைகள் தொடர்பாகக் கடந்த 22-ம் தேதி நடந்த முத்தரப்பு பேச்சுவார்த்தையில் சுமுகத் தீர்வு எட்டப்படவில்லை.
எனவே, திட்டமிட்டபடி திங்கள் கிழமை (செப்.28) முதல் புதன்கிழமை (செப்.30) வரை நாடு தழுவிய வேலை நிறுத்தம் நடைபெறவுள்ளது. நாடு முழுவதும் 9 லட்சம் ஊழியர்கள், அதிகாரிகள் இதில் பங்கேற்க உள்ளனர். 60 ஆயிரம் தனியார் வங்கிகளின் ஊழியர்கள், ஒரு லட்சம் கிராமப்புற வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர். தமிழகத்தில் 70 ஆயிரம் வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.
ஏடிஎம் பணம் லோடு மேற்கொள்வதை வெளிநபர்களிடம் கொடுத்துவிட்டனர். இதுபோல நிறைய பிரச்சினைகள் உள்ளன. தனியார் மயமாக்குவதை நிறுத்த வலியுறுத்துகிறோம். தற்காலிகப் பணியாளர்களை நிரந்தரம் செய்யவும், காலி பணியிடங்களை நிரப்பவும் வலியுறுத்தி உள்ளோம். இவ்வாறு சி.பி.கிருஷ்ணன் கூறினார்.
வேலை நிறுத்தத்தால், வங்கிகளில் பணம் செலுத்துவது, பெறுவது போன்ற சேவைகள் மேற்கொள்ள முடியாது. காசோலை பரிவர்த்தனை பாதிக்கும். வங்கி கடன் வாங்குவது தொடர்பாக சேவை இருக்காது. அதேநேரத்தில், ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்கலாம். நெட் பேங்கிங், யுபிஐ, மொபைல் பேங்கிங் செயல்படும் என்று வங்கி ஊழியர் சம்மேளன நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.