

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய அளவில் பொதுத்துறை மற்றும் தனியார் வங்கி ஊழியர்கள் சார்பில் நேற்று வேலைநிறுத்தப் போராட்டம் நடந்தது. இதையொட்டி, சென்னை பிராட்வேயில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஊழியர் மற்றும் அதிகாரிகள். | படம்: எல்.சீனிவாசன் |
சென்னை: வாரத்துக்கு 5 நாட்கள் மட்டுமே வேலைநாட்களாக அறிவிக்கக் கோரி, நாடு முழுவதும் நேற்று வங்கி ஊழியர்கள் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் வங்கி சேவைகள் முடங்கி பொதுமக்கள் அவதியுற்றனர்.
வாரத்துக்கு 5 நாட்கள் மட்டுமே வேலைநாட்களாக அறிவிக்கக் கோரி, யுனைடெட் ஃபோரம் ஆஃப் பேங்க் யூனியன்ஸ் கூட்டமைப்பின்கீழ் அதிகாரிகளுக்கான சங்கம், ஊழியர்களுக்கான சங்கம் என வங்கித் துறையில் உள்ள அனைத்து 9 சங்கங்களின் சார்பில் நாடு தழுவிய ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம் நேற்று நடைபெற்றது.
இதில் இந்தியாவில் உள்ள பொதுத்துறை, தனியார் வங்கிகள், கிராமப்புற, கூட்டுறவு வங்கிகள் என ஒட்டுமொத்தமாக 8 லட்சம் ஊழியர்கள் பங்கேற்றனர். அதன்படி, சென்னையில் பிராட்வே பிரகாசம் சாலையில் உள்ள யூனியன் வங்கி முன்பு அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம், இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் உள்ளிட்ட சங்கங்களின் சார்பில் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்றது.
இதில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதுகுறித்து இந்திய வங்கி ஊழியர் சம்மேளன மாநிலத் தலைவர் சுனில் குமார் செய்தியாளர்களிடம் கூறும்போது, “வங்கி ஊழியர்களுக்கு கடந்த 2015-ம் ஆண்டு முதல் 2-வது மற்றும் 4-வது சனிக்கிழமைகள் மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது.
அனைத்து சனிக்கிழமைகளிலும் விடுமுறை அளித்து, வாரத்துக்கு 5 நாட்கள் மட்டும் வேலை என்பதை அமல்படுத்த வேண்டும் என்பது எங்களது 10 ஆண்டுகால கோரிக்கை. நிதித்துறையில் உள்ள எல்ஐசி மற்றும் ரிசர்வ் வங்கியில் ஏற்கெனவே 5 நாள் வேலைமுறை அமலில் உள்ளது. ஆனால், பொதுத்துறை மற்றும் இதர வங்கி ஊழியர்களுக்கு மட்டும் இது மறுக்கப்படுகிறது.
கடந்த 2024-ம் ஆண்டு ஊதிய ஒப்பந்தம் கையெழுத்தானபோது, 5 நாள் வேலைத்திட்டம் குறித்து 6 மாதங்களுக்குள் முடிவெடுத்து அமல்படுத்துவதாக இந்திய வங்கிகள் சங்கம் (ஐபிஏ) உறுதியளித்திருந்தது.
ஆனால், இதுவரை மத்திய நிதிச்சேவைகள் துறையின் ஒப்புதல் கிடைக்கவில்லை எனக் கூறி காலம் தாழ்த்தி வருகின்றனர். அரசு மற்றும் ஐபிஏ தரப்பில் இருந்து சாதகமான அறிவிப்பு வராவிட்டால், மார்ச் மாதத்தில் காலவரையற்ற தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட ஆலோசிக்கப்படும்” என்றார்.
ஏற்கெனவே கடந்த 24-ம் தேதி (4-வது சனி) மற்றும் ஞாயிறு விடுமுறையைத் தொடர்ந்து 26-ம் தேதி குடியரசு தினத்துக்கும் வங்கிகள் திறக்கப்படவில்லை.
இந்நிலையில் தொடர்ந்து 4-வது நாளாக வேலைநிறுத்தம் காரணமாக பல்வேறு வங்கிகளில் ஊழியர்கள் இல்லாமல் வங்கி சேவைகள் முடங்கின. பண பரிவர்த்தனையும் பாதிக்கப்பட்டது. இதனால் வாடிக்கையாளர்கள் பெரிதும் அவதியுற்றனர்.