

சென்னை: பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை சுற்றி ஒரு கிமீ சுற்றளவுக்கு எந்த கட்டுமானங்களுக்கும் ஒப்புதல் வழங்கக்கூடாது என்ற பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், இதுதொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பள்ளிக்கரணை சதுப்பு நிலம் தொடர்பாக தாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரணை மேற்கொண்ட தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம், சதுப்பு நிலத்தை சுற்றி ஒரு கிலோ மீட்டர் சுற்றளவுக்கு எந்தவொரு கட்டுமானங்களுக்கும் ஒப்புதல் வழங்கக்கூடாது என தமிழக அரசுக்கு கடந்த ஆண்டு செப்டம்பரில் உத்தரவிட்டிருந்தது.
அந்த உத்தரவுப்படி சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் (சிஎம்டிஏ), பள்ளிக்கரணை சதுப்பு நிலப்பகுதிகளைச் சுற்றி சுமார் ஒரு கிமீ சுற்றளவுக்கு எந்த கட்டுமானங்களுக்கும் அனுமதி வழங்க முடியாது என மறுப்பு தெரிவித்து கடந்த அக்டோபரில் உத்தரவிட்டது.
இந்த உத்தரவால் பள்ளிக்கரணையை சுற்றியுள்ள பகுதிகளில் அடுக்குமாடி கட்டுமானப்பணிகள் முழுமையாக ஸ்தம்பித்துள்ளதாகக் கூறி ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் கூட்டமைப்பான கிரெடாய் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
அதில், எவ்வித அறிவியல் பூர்வமான ஆய்வும் மேற்கொள்ளாமல் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை சுற்றி ஒரு கிமீ சுற்றளவுக்கு எந்தவொரு கட்டுமானங்களும் கட்டக்கூடாது என தேசிய பசுமை தீர்ப்பாயம் பிறப்பித்துள்ள உத்தரவு சட்டவிரோதமானது என்பதால் அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என கோரியிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எம்.எம். வஸ்தவா மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு, இதுதொடர்பாக தமிழக அரசு மற்றும் சிஎம்டிஏ, மாநகராட்சி உள்ளிட்டோர் மூன்று வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்துள்ளனர்.
பள்ளிக்கரணையில் உள்ள ராம்சார் சதுப்பு நிலங்களை ஒட்டிய பகுதிகளில் அடுக்கு மாடி குடியிருப்புகளையோ, வணிக வளாகங்களையோ கட்டக்கூடாது என ஏற்கெனவே உயர் நீதிமன்றம் தடை விதித்திருந்த நிலையில் பள்ளிக்கரணையில் சதுப்பு நிலத்தை ஒட்டிய பகுதிகளில் பன்னடுக்கு அடுக்குமாடி குடியிருப்பு வளாகம் கட்ட தனியார் நிறுவனம் ஒன்றுக்கு சிஎம்டிஏ அனுமதி அளித்துள்ளதாக சர்ச்சை எழுந்தது.
அதுதொடர்பாகவும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில், சிஎம்டிஏ தரப்பில், சதுப்பு நிலத்தில் அந்த குடியிருப்புகளை கட்ட அனுமதியளிக்கவில்லை என்றும், சதுப்பு நிலத்துக்கு வெளியே உள்ள தனியார் பட்டா நிலத்தில் தான் அந்த கட்டிடம் கட்ட சிஎம்டிஏ சார்பில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றும் அரசு தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.
அதையடுத்து உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, பள்ளிக்கரணை சதுப்பு நிலம் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருவதால், இந்த பிரச்சினை தொடர்பாக உச்ச நீதிமன்றத்தை நாட உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.