மதுரை நகைக்கடையில் கொள்ளை அடித்த தனி ஒருவனின் பின்புலக் கதை!

அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தில் போலீஸார் பரபரப்பு தகவல்கள்
படங்கள்: நா.தங்கரத்தினம்

படங்கள்: நா.தங்கரத்தினம்

Updated on: 
5 min read

மதுரை: ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு, ‘இன்ஸ்டா’ தோழி மீனாட்சியுடன் சேர்ந்து திட்டமிட்டு தனி நபராக துணிச்சலாக நகைக்கடை கொள்ளையில் ஈடுபட்டது ஆட்டோ ஓட்டுநரின் மகன் நிஷாந்த் மட்டும்தான் என்பதை அறிந்து போலீஸார் திகைத்துப் போயுள்ளனர்.

ஒரே இளைஞர் இந்தளவுக்கு மிகப்பெரிய கொள்ளையில் ஈடுபடும் அளவுக்கு துணிச்சலை கொடுத்தது அவரின் கனவுலக ஆடம்பர வாழ்க்கை, இன்ஸ்டா மோகம்தான் என்பது தெரியவந்துள்ளது. நிஷாந்தை கைது செய்தால்தான் முழு உண்மையும் வெளிவரும்.

மதுரையில் உள்ள ‘தனிஷ்க்’ நகைக்கடை கொள்ளையில் ஈடுபட்ட யூடியூபரான இளைஞர் நிஷாந்த் தலைமறைவான நிலையில், ஆட்டோ ஓட்டுநரான அவரது தந்தை சுரேஷ், தோழியான மீனாட்சி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 15 கிலோ நகைகள் மீட்கப்பட்டுள்ளன. தோழி மீனாட்சிக்காகத்தான் நிஷாந்த் இந்த கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டாரா எனவும் தனிப்படை போலீஸார் விசாரிக்கின்றனர்.

மதுரை பைபாஸ் ரோட்டில் புதிதாக திறக்கப்பட்ட தனிஷ்க் நகைக்கடையில் நவ.12-ம் தேதி 15 கிலோவுக்கும் அதிகமான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. சரியான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யும் முன்னரே திறக்கப்பட்ட இக்கட்டிடத்துக்குள் புகுந்து துணிச்சலாக நடந்த இக்கொள்ளை காவல் துறை வட்டாரத்தில் தமிழக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பெரிய கும்பல் திட்டமிட்டு இக்கொள்ளையில் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் விசாரணையை போலீஸ் தொடங்கியது.

படம்: நா.தங்கரத்தினம்

முகமூடி, உடல் முழுவதும் கருப்பு நிற ஆடையால் மறைப்பு, தலையில் தொப்பியுடன் கூடிய இளைஞர் கடைக்குள் இறங்கி கொள்ளையடித்தது சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது. அதிகாலை 3 மணியளவில் நடந்த இக்கொள்ளை குறித்து நகரிலுள்ள சிசிடிவி காட்சிகள், செல்போன் தொடர்புகள், கை ரேகைகள், சம்பவ இடத்தில் கிடைத்த தடயங்களை வைத்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. மோப்ப நாயும் பயன்படுத்தப்பட்டது.

காவல் ஆணையர் ராஜேந்திரன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் சம்பவ இடத்தை ஆய்வு செய்தனர். குற்றப்பிரிவில் தேர்ந்த அதிகாரிகளைக் கொண்ட 9 தனிப்படைகள் களத்தில் இறங்கின. நகைக்கடை திறக்கப்பட்டது முதல் சிசிடிவி காட்சிகள் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டன. ஊழியர்கள், கட்டுமானப் பணியில் ஈடுபட்டவர்களின் கைரேகைகள் சேகரிக்கப்பட்டன. நம்பர் பிளேட் இல்லாத வாகனத்தில் தப்பிய கொள்ளையன் குறித்து ஏஐ உதவியோடு படம் உருவாக்கப்பட்டது. வாகனம் சென்ற தெருக்கள் ஆய்வு செய்யப்பட்டன.

இந்த தடயங்களின் அடிப்படையில் போலீஸாருக்கு முக்கிய துப்பு கிடைத்தது. அது மிகப்பெரிய ஆச்சரியத்தையும் அளித்தது. கொள்ளையில் ஈடுபட்டது ஒரேயொரு இளைஞர் என்பது தெரிந்தது. அந்த இளைஞர் 2 முறை நகைக்கடைக்கு வந்து நகைகளை தேர்வு செய்து போட்டோக்களை எடுத்ததும், அதை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்ததும் தெரிந்தது.

இதன் அடிப்படையில் அவர் இன்ஸ்டா பிரபலம் என்பது தெரிந்தது. அவர் குறித்து மேலும் கிடைத்த தகவல்கள் போலீஸாரை திகைக்க வைத்தன. அவர் தனது போனில் தொடர்புகொண்ட பெண் ஒருவரின் விவரம் கிடைத்தது. அந்த பெண் இன்ஸ்டா பிரபலம் மீனாட்சி என்பதும் தெரியவந்தது. உடனே அந்த பெண்ணை போலீஸார் சுற்றி வளைத்தனர். அவரிடம் விசாரித்தபோதுதான் இளைஞர் நகைக்கடைக்கு அருகேயுள்ள நேரு நகர் விகேபி நகரைச் சேர்ந்த நிஷாந்த் (21) இக்கொள்ளையில் ஈடுபட்டது தெரிந்தது.

உடனே நேற்று முன்தினம் அதிரடியாக ஏராளமான போலீஸார் நிஷாந்த் வீட்டுக்குள் நுழைந்தனர். அங்கு அவரது தந்தை ஆட்டோ டிரைவர் சுரேஷிடம் விசாரித்ததில், கொள்ளையில் அவருக்கும் தொடர்பிருந்தது தெரிந்தது. பின்னர் மீனாட்சியை எஸ்எஸ் காலனி காவல் நிலையத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தியதில், மாடக்குளம் கண்மாய் அருகே மலையடிவாரத்தில் நகைகள் புதைக்கப்பட்டுள்ளது தெரிந்தது. அதை போலீஸ் படையுடன் மீனாட்சியை அழைத்துச் சென்று கைப்பற்றினர். அதில் 10 கிலோ நகைகள் வரை இருந்தன.

கொள்ளை நடந்த மறுநாள் இப்பகுதிக்கு மீனாட்சி, நிஷாந்த் ஆகியோர் சென்று நகையை புதைத்துள்ளனர். மேலும் தந்தையின் ஆட்டோவில் சென்று கொள்ளைக்கு பயன்படுத்திய ஆடைகளை தீ வைத்து எரித்து தடயங்களை அழிக்க முயன்றுள்ளனர். இதை அந்த பகுதியில் இருந்த ஸ்டாலின் என்பவர் பார்த்து போலீஸாருக்கு தகவல் அளித்துள்ளார்.

படம்: நா.தங்கரத்தினம்

இதற்கிடையே கைது செய்யப்பட்டது தெரியாமல் மீனாட்சியை வேறு போனில் தொடர்புகொண்ட நிஷாந்த் சில தகவல்களை தெரிவித்துள்ளார். அப்போது அவர் திருப்பூரில் இருப்பது தெரிந்தது. அங்கு தனிப்படை விரைந்துள்ளது. யூடியூபர் நிஷாந்த், தலைமறைவாக உள்ள நிலையில் அவரை கைது செய்து விசாரித்தால் மட்டுமே இந்த கொள்ளை சம்பவத்தில் இன்னும் யாருக்கேனும் தொடர்பு உள்ளது? அவர்களுக்கு உதவியவர்கள் யார், யார் என்ற விவரமும் தெரியவரும்.

மீனாட்சியுடன் அறிமுகமானது எப்படி?

நிஷாந்த் தந்தை சுரேஷ் ஆட்டோ டிரைவர். அவர் 3 ஆட்டோக்கள் வைத்துள்ளார். ஒரு ஆட்டோவை அவர் ஓட்டிவந்த நிலையில் மற்ற 2 ஆட்டோக்களையும் வாடகைக்கு விட்டுள்ளார். நிஷாந்த் கல்லூரி முடித்தபிறகு யூடியூப் சேனல் ஒன்றில் பணிபுரிந்துள்ளார். பொழுதுபோக்குக்காக ஆடம்பரமான பைக் வாங்கி ஊர் சுற்றுவதுமாக இருந்து வந்துள்ளார்.

ஆரம்ப காலத்தில் நிஷாந்த் பணிபுரிந்த யூடியூப் சேனல் ஒன்றில், தற்போது கைதாகியுள்ள ‘இன்ஸ்டா பிரபலம்’ மீனாட்சியும் வேலை பார்த்துள்ளார். அதன் பிறகு மீனாட்சி அதிலிருந்து பிரிந்து தனியாக யூடியூப் சேனல் நடத்தி வருகிறார். மீனாட்சி நாச்சியார் என்ற பெயரில் தனியாக இன்ஸ்டா பக்கத்தில் செயல்பட்டு வருகிறார். தற்போது மீனாட்சிக்கும் நிஷாந்த், வீடியோக்களை எடிட் செய்து கொடுப்பது, இருவரும் சேர்ந்து அவுட்டிங் செல்வது என ஒன்றாக சுற்றித் திரிந்துள்ளனர்.

புதிய வீட்டுக்காக கொள்ளையா?

நிஷாந்த்திடம் நெருங்கிப் பழகிய மீனாட்சி, அவ்வப்போது அவருடன் சமைப்பது, அழகுக் கலை சம்பந்தமான வீடியோக்களை வெளியிட்டு வந்துள்ளார். மீனாட்சியை இன்ஸ்டாகிராமில் 1.54 லட்சம் பேர் பின்தொடர்கின்றனர். இவர் அவ்வப்போது தாய்லாந்து, மும்பை உள்ளிட்ட இடங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பது போன்றும், அழகுக்கலை தொடர்பான சாதனங்களை விளம்பரப்படுத்துதல் போன்றும் 176 வீடியோக்களை இதுவரை பதிவிட்டுள்ளார்.

இவர் தற்போது மதுரையில் புதிதாக வீடு கட்டி வருவது குறிப்பிடத்தக்கது. அவர் யூடியூபில் கிடைத்த வருவாயில் இந்த வீட்டைக் கட்டி வருகிறாரா? அல்லது வேறு வகைகளில் என்ன வருவாய் அவருக்கு வந்துள்ளது என்றும் தற்போது தனிப்படை போலீஸார் விசாரிக்கின்றனர். இந்த வீட்டுச் செலவுக்காக நகைக் கொள்ளை நடந்துள்ளதா என்றும் விசாரணை நடக்கிறது.

நகைக்கடையில் நகைகளை கொள்ளையடித்த பிறகு தலைமறைவான நிஷாந்த், மீனாட்சியிடம் மட்டும் ஒருமுறை பேசியுள்ளார். இந்த செல்ஃபோன் ‘நெட்வொர்க்’ தொடர்பை வைத்தே போலீஸார் மீனாட்சியை கைது செய்துள்ளனர். நேற்று கைது செய்த உடனே போலீஸார், மீனாட்சியை மதுரை எஸ்.எஸ்.காலனி காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.

அவரிடம் தலைமறைவான நிஷாந்த் குறித்தும், நகை குறித்தும் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியதில், 5 கிலோ நகையை ஒப்படைத்தார், மீதமுள்ள நகைகள் எங்கே? என விசாரித்தனர். மீனாட்சி, மீதமுள்ள நகைகளை, மாடக்குளம் கண்மாய் பகுதியில் வைத்ததாகத் தெரிவித்தார். அதன் அடிப்படையில் மாடக்குளத்துக்கு அவரை அழைத்துச் சென்ற போலீஸார், அவர் கூறிய இடத்தில் நகைகளை தோண்டி எடுத்தனர்.

நிஷாந்த்துடன் மீனாட்சியும் சென்றுதான், இந்த நகைகளை புதைத்தது தெரிய வந்துள்ளது. கொள்ளையடிக்க திட்டமிட்டது முதல், கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை புதைத்தது வரை, மீனாட்சியும் சேர்ந்து செய்துள்ளது தனிப்படை போலீஸார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

கொள்ளையன் நிஷாந்த் தனிஷ்க் நகைக் கடையில் கொள்ளையடிப்பதற்கு முன்பு பலமுறை கடைக்கு சென்று நோட்டமிட்டுள்ளார். ஒவ்வொரு முறையும் வெவ்வேறு உடைகளை அணிந்து சென்று தங்க நகைகள் வாங்குவதுபோல் விசாரித்துள்ளார். ஆனால் எந்த நகையையும் அவர் வாங்கவில்லை. விசாரித்து மட்டுமே சென்றுள்ளார்.

முகத்தை மறைக்கும் வகையில் ஒவ்வொரு முறையும் தொப்பி அணிந்து சென்றுள்ளார். சிசிடிவி-வில் அவரது முகம் தெரியாத நிலையில், அவர் வந்து சென்ற ஸ்கூட்டர் எண் குறித்து விசாரித்ததில் அது மீனாட்சியின் ஸ்கூட்டர் என தெரியவந்தது. அதன் மூலமே துப்புக் கிடைத்து நிஷாந்த் கொள்ளையில் ஈடுபட்டதை போலீஸார் கண்டறிந்தனர்.

மீனாட்சியை கலாய்க்கும் ஃபாலோயர்ஸ்:

கடந்த அக்டோபர் 21-ம் தேதி மீனாட்சி தனது இன்ஸ்டா பக்கத்தில் “நாளைக்கு ஒரு முக்கியமான விஷயம் சொல்லப் போகிறேன்” என்று கூறியிருந்தார். அதன்படி அவர் மறுநாளான 22-ம் தேதி இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். அதற்கு அவரை பின்தொடர்கிறவர்கள், என்ன கல்யாணமா? என்று வரிசைகட்ட தொடங்கி விட்டனர்.

அதற்கு அவர், “என்ன எனக்கு கல்யாணமா என்பதில் உங்கள் எல்லோருக்கும் அவ்வளவு ஆர்வமா என்ன? முதல் முறையாக சொந்தமாக ஒரு வீடு கட்டிக் கொண்டிருக்கிறோம். எங்க குடும்பத்துக்கு பிறகு உங்களுக்குதான் முதல் முறையாக நான் இதை சொல்கிறேன். உறவினர்கள், நண்பர்கள் யாருக்குமே சொல்லவில்லை. அவர்கள் யாருமே நல்லாயிருக்க வேண்டும் நினைப்பதில்லை.

படம்: நா.தங்கரத்தினம்

இந்த வீடு கட்டும் முயற்சிக்கு உங்களைத்தான் நான் முக்கிய காரணமாக நினைக்கிறேன். வங்கிக் கடன் மற்றும் சேர்த்து வைத்த பணத்தை வைத்து இந்த வீட்டைக் கட்டுகிறேன். நான் பிறந்ததில் இருந்து தற்போது வரை சொந்த வீட்டில் இருந்த ஃபீலிங்கை அனுபவித்ததே இல்லை, அந்த ஆசை நிறைவேற போகிறது” என்று தனது புதிய வீட்டை பற்றிய ஏக்கத்தை பதிவு செய்திருந்தார்.

அதற்கு அவரை பின்தொடர்கிறவர்கள், அவரை பாராட்டி புகழ்ந்து தள்ளிவிட்டனர். நேற்று நகைக்கடை கொள்ளையில் அவர் சிக்கிய பிறகு பாராட்டி புகழ்ந்த அதே பின்தொடர்பவர்கள் (ஃபாலோயர்ஸ்) அனைவரும் தற்போது, “அதெல்லாம் விடு, அவன் (தலைமறைவான நிஷாந்த்) வந்தானா இல்லையா?, எல்லாம் அந்த நகைக்கடையை ஆட்டயப் போட்ட காசுதானா?, ஒ... நகைக்கடை பணமா, வாழ்த்துகள் வாழ்த்துகள், புழல் ஜெயில்தான், எனக்கு அப்ப புரியல, இப்ப புரியுது” என விதவிதமாக திட்ட தொடங்கி விட்டனர்.

கொள்ளை சம்பவத்துக்கு பிறகு, மீனாட்சியின் இன்ஸ்டா பக்கம் முன்பைவிட மிகவும் பிரபலமாகி, அவரது பழைய வீடியோக்கள் அனைத்தையும் பார்வையாளர்கள் தற்போது பார்க்கத் தொடங்கியுள்ளனர்.

நிஷாந்துக்கு எப்படி இவ்வளவு துணிச்சல்?

இன்ஸ்டா, ரீல்ஸ் ஆர்வத்தால் நிஷாந்துக்கு திருட்டு, கொள்ளை, போலீஸ் குறித்து பல்வேறு விவரங்கள் தெரிந்துள்ளன. எப்படி கொள்ளை அடிக்கலாம், போலீஸாரிடமிருந்து எளிதாக எப்படி தப்பலாம். சினிமா பாணியில் தன்னை நினைத்துக்கொண்டு, யாரும் கண்டுபிடிக்க முடியாது எனக் கருதியுள்ளார். பல கிரைம் வீடியோக்களை பார்த்து தன்னை தயார்படுத்திக் கொண்டுள்ளார்.

ஆட்டோ டிரைவர் மகனாக ஏழை குடும்பத்தில் பிறந்தாலும் ஆடம்பரமான அனைத்தையும் அனுபவிக்க வேண்டும் என தீராத எண்ணத்தில் பைக், உடை, சிகை அலங்காரம் என பல விஷயங்களில் நாட்டம் கொண்டுள்ளார். இத்துடன் இன்ஸ்டா பிரபலத்துடன் கிடைத்த நட்பால் ஆடம்பர வாழ்க்கை மீது முழு கவனமும் திரும்பியுள்ளது.

இதற்கு தேவையான பணம் கிடைக்காததால், இவ்வளவு பெரிய குற்றத்தை, தன்னந்தனியாக மிக தைரியமாக செய்துள்ளார். நவீன டெக்னாலஜியால் கொள்ளையனாக மாறிய நிஷாந்தை, அதே டெக்னாலஜியை வைத்தே போலீஸார் 48 மணி நேரத்துக்குள் அடையாளம் கண்டு நகையை மீட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

என்ன சொல்கிறார் மனநல மருத்துவர்?

மனநல மருத்துவர் ஆ.காட்சன் கூறுகையில், “இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக், யூடியூப் போன்ற சமூக வலைதளங்களை பயன்படுத்துவோர் தொடக்கத்தில் தங்களது கருத்துகளையும், அன்றாட பதிவுகளையும் மற்றவர்கள் பார்க்க வேண்டும் என்பதற்காக வீடியோக்களாக பதிவிடுகின்றனர்.

அதன்பிறகு கருத்துகளை தாண்டி பின்தொடர்கிறவர்கள் எண்ணிக்கை, லைக்ஸ், ஷேர் அதிகரிக்க வேண்டும் என்பதற்காகவும், மற்றவர்கள் தங்களை ரசிக்க வேண்டும் என்பதற்காகவும் நாளடைவில் பதிவுகளை போட தொடங்குகின்றனர்.

போதைப்பொருளை போல் சமூக வலைதளங்களை அவர்கள் பயன்படுத்துகின்றனர். அதற்காக சில ‘ரிஸ்க்’ஆன செயல்களில் ஈடுபடுகின்றனர். அதனுடைய வெளிப்பாடே, ஆபத்தான இடங்களுக்குச் சென்று வீடியோ எடுப்பவர்கள் ஒரு ரகம், இதுபோல் கொள்ளையடித்தால் மாட்டிக் கொள்வோம் என்ற ஆபத்துகளை கணிக்காமல் ‘ரிஸ்க்’ எடுப்போர் மற்றொரு ரகம்.

தற்போது வங்கிகள், நகைக்கடைகளில் பிடிபடாமல் எப்படி கொள்ளையடிக்கலாம் என்ற வெப் சீரிஸ்கள் கொட்டிக்கிடக்கின்றன. அதைப் பார்க்கும் இதுபோன்றவர்கள், நாம் திறமையாக செயல்படுகிறோம், நாம் பிடிபட வாய்ப்பில்லை என்ற அதீத நம்பிக்கை ஏற்பட்டிருக்கலாம், என்றார்.

image-fallback
அம்பத்தூர்: கோயில்களில் பூட்டை உடைத்து கொள்ளையடித்த 3 பேர் கைது

X