

சென்னை: ஆயுத பூஜை, விஜயதசமி பண்டிகைகளை முன்னிட்டு எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன், ஜி.கே.வாசன் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “நவராத்திரி எனப்படும் ஒன்பது திருநாட்களின் இறுதியில், ஒன்பதாவது நாளான ஆயுத பூஜை மற்றும் பத்தாவது நாளான விஜயதசமி திருநாட்களை பக்தியுடனும், மகிழ்ச்சியுடனும் கொண்டாடி மகிழும் தமிழக மக்கள் அனைவருக்கும் எனது உளங்கனிந்த ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி நல்வாழ்த்துகளை அன்போடு தெரிவித்துக்கொள்கிறேன்.
ஆதிபராசக்தியை துர்க்கை வடிவில் வழிபட்டால் வீரம் பிறக்கும்; லட்சுமி வடிவில் வழிபட்டால் செல்வம் பெருகும்; சரஸ்வதி வடிவில் வழிபட்டால் கல்வி சிறக்கும் என்கிற நம்பிக்கையின் அடிப்படையில், நவராத்திரி பண்டிகையின் முதல் மூன்று நாட்களில் துர்க்கா தேவியையும், அடுத்த மூன்று நாட்களில் லட்சுமி தேவியையும்; கடைசி மூன்று நாட்களில் சரஸ்வதி தேவியையும் மக்கள் பக்தியோடு வணங்கி வழிபடுவார்கள்.
ஒவ்வொருவரின் வாழ்வுக்கும் ஆதாரமாகத் திகழ்கின்ற அவரவரது தொழிலின் மேன்மையைப் போற்றும் வகையில், மக்கள் தத்தமது தொழிற் கருவிகளுக்கெல்லாம் பூஜை செய்து வழிபடும் திருநாளே ஆயுத பூஜையாகும். 'விஜயதசமி திருநாளில் தொடங்கும் அத்தனை காரியங்களும் வெற்றியில் முடியும்' என்ற நம்பிக்கையில், மக்கள் அன்னை மகா சக்தியை வழிபட்டு நற்காரியங்களைத் தொடங்கும் வெற்றித் திருநாளே விஜயதசமி பண்டிகையாகும்.
"செய்யும் தொழிலே தெய்வம்” என்பதையும்; “உழைப்பின் மூலமே வெற்றி” என்பதையும் உணர்த்தும் வகையில் ஆயுத பூஜையையும், விஜயதசமியையும் கொண்டாடும் தமிழக மக்கள் அனைவரும், அனைத்து வளமும், நலமும் பெற்று சிறப்போடு வாழ்ந்திட வேண்டும் என்ற எனது உளமார்ந்த நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக் கொள்கிறேன்.” என்று கூறியுள்ளார்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்: “உழைப்பின் மேன்மையையும், அறிவின் ஆற்றலையும் போற்றி வணங்கும் ஆயுதபூஜை மற்றும் தீமைகளை வென்று நன்மை வெற்றி பெறுவதைக் குறிக்கும் விஜயதசமி திருநாள்களில், தமிழக மக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
உழைப்பே உயர்வு தரும் என்ற உயரிய சிந்தனையை மனதில் ஏந்தி, நாம் பயன்படுத்தும் கருவிகள் முதல் நாம் சார்ந்திருக்கும் தொழில்கள் வரை அனைத்தையும் மதித்து வணங்கிடும் திருநாளாம் ஆயுதபூஜையும், நாம் மேற்கொள்ளும் முயற்சிகளில் வெற்றியையும் உழைப்பிற்கேற்ற பலனையும் வழங்கிடும் நன்னாளாம் விஜயதசமியும், தடைகளைத் தகர்த்திடும் மனவலிமையையும், புதிய இலக்குகளை நோக்கிப் பயணித்திடும் ஊக்கத்தையும் அளித்து, வாழ்வில் மென்மேலும் முன்னேற வழிவகுக்கட்டும்.
இத்தகைய சிறப்புமிக்க திருநாள்களில், மக்கள் அனைவரின் வாழ்விலும் அமைதியும், அன்பும், வளமும், மகிழ்ச்சியும் பெருகிடவும், தமிழகமெங்கும் ஒற்றுமையும் நல்லிணக்கமும் தழைத்தோங்கிடவும் வாழ்த்தி, அனைவருக்கும் எனது இனிய ஆயுதபூஜை மற்றும் விஜயதசமி நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக் கொள்கிறேன்.” என்று தினகரன் கூறியுள்ளார்.
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன்: “கல்வியையும், அறிவையும், ஞானத்தையும், இசையையும், அளித்து வாழ்வில் வெளிச்சத்தை அளிக்கும் சரஸ்வதி தேவியையும், தொழிலையும், வளத்தையும், செல்வத்தையும் அளித்து நம் வாழ்வை வளமாக்கும் லட்சுமி தேவியையும் ஒருசேர வணங்கும் நாள்.
தொழில் நிறுவனங்கள், தங்கள் தொழிலின் மூலதாரமாக விளங்கும் இயந்திரங்கள், உபகரணங்கள், வாகனங்கள், கணினிகள் போன்றவற்றை சுத்தம் செய்தும், விவசாயிகள், தங்களின் விவசாயத்திற்கு ஆதாரமாக விளங்கும் ஏர் கலப்பை, அரிவாள் போன்றவற்றை சுத்தம் செய்து அவற்றிற்கு சந்தனம்- குங்குமம் வைத்து நன்றி செலுத்தும் விதமாக வணங்கும் நாள்.
குழந்தைகளின் கல்வியை விஜயதசமியன்று தட்டில் அரிசி, நெல் பரப்பி அதில் தமிழின் முதல் எழுத்தான "அ" எழுதி தொடங்கும் உன்னதமான நாள். நம் வாழ்வில் அறிவின் ஒளியையும், வளத்தின் வழியையும் அளிக்கும் சரஸ்வதி பூசை மற்றும் ஆயுத பூஜை நன்னாளில் அனைவரது வாழ்வில், கல்வியில் சிறந்து விளங்கவும், அறிவும், தன்னம்பிக்கை பெருகவும், எதிர்கால கனவுகள் நிறைவேறவும், தொழில் பெருகவும், செல்வம் கொழிக்கவும், அனைத்து துறைகளிலும் வெற்றிபெறவும் தமிழ் மாநில காங்கிரஸ் (மூ) சார்பில் வாழ்த்துகிறேன்.” என்று ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம்: “சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை, விஜயதசமி கொண்டாடும் இந்த தருணத்தில் எல்லோரும் வளமாக வாழ, தமிழகத்தில் வளமும் நலமும் சேர சரஸ்வதி, லட்சுமி, துர்க்கை எனும் மூன்று தேவியரின் நல்லருள் கிடைத்திட பிரார்த்தனை செய்து அனைவருக்கும் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை, விஜயதசமி நல்வாழ்த்துகளை இந்து முன்னணி சார்பில் தெரிவித்துக்கொள்கிறோம்.” என்று காடேஸ்வரா சுப்பிரமணியம் கூறினார்.