

ஞாயிறு மற்றும் நாளை திங்கட்கிழமை ஆயுத பூஜை என தொடர் விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்குச் செல்ல எழும்பூர் ரயில் நிலையத்தில் நேற்று குவிந்த பயணிகள் கூட்டம்.
சென்னை: ஆயுத பூஜை, விஜயதசமி பண்டிகைகளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பூஜை பொருட்களை வாங்குவதற்காகத் திரண்ட பொதுமக்களால் கடை வீதிகள் மற்றும் முக்கிய சந்தைகள் களைகட்டின. சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர்.
தமிழகம் முழுவதும் நாளை ஆயுத பூஜை கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள முக்கியச் சந்தை பகுதிகள், கடை வீதிகளில் பூஜை பொருட்கள் வாங்குவதற்காகக் கடந்த 2 நாட்களாக ஏராளமான பொதுமக்கள் திரண்டு வருகின்றனர். சென்னையில் கோயம்பேடு, பாரிமுனை, தி.நகர், பெரம்பூர், புரசைவாக்கம், வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட முக்கிய சந்தை பகுதிகள் காலை முதலே பரபரப்பாகக் காணப்பட்டன.
குறிப்பாக ஆயுத பூஜையை முன்னிட்டு கோயம்பேட்டில் சிறப்புச் சந்தை ஒரு வாரம் நடைபெறுகிறது. இதில் பொரி, கடலை, வாழைப்பழம், இலை, தேங்காய், பழங்கள் உள்ளிட்ட பூஜை பொருட்களை விற்பனை செய்ய தனியாக ஓர் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இங்கும் அமோகமாக விற்பனை நடைபெற்றது.
அதேநேரம் பொருட்கள் மற்றும் பூக்களின் விலை வழக்கத்தைவிட அதிகரித்து இருந்தது. ஒரு கிலோ மல்லி ரூ.400-ல் இருந்து ரூ.1,500 வரை தரத்துக்கு ஏற்ப விற்பனையானது. அதேபோல் சம்பங்கி ரூ.100-ல் இருந்து ரூ.250 வரையும், ஜாதிமல்லி ரூ.400 வரையும், முல்லை ரூ.250 வரையும் விற்பனையாகின.
ரோஜா ரூ.110-க்கும், சம்பங்கி ரூ.100-க்கும் விற்பனையானது. சில்லறை வியாபாரிகளும் கடைகளுக்குத் தேவையான பொருட்களை வாங்கிச் சென்றனர். இதேபோல் வாட்டர் வாஷ் செய்வதற்கும், மெக்கானிக் ஷாப்களில் ஏராளமான வாகனங்கள் குவிந்த வண்ணம் இருந்தன. சுண்டல் உள்ளிட்ட பதார்த்தங்களைச் செய்வதற்கான பொருட்களை வாங்க மளிகை கடைகளிலும் கூட்டம் குவிந்தது.
குறிப்பாக மாலை நேரங்களில் இறுதி நேர வியாபாரம் களைகட்டியது. இவ்வாறு பொருட்களை வாங்கிச் செல்ல ஏராளமான வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் வந்த நிலையில், அலுவலகம் முடிந்து வீடு செல்வோர், பண்டிகைக்கு ஊர்களுக்கு செல்வோர் என அணிவகுத்ததால் முக்கிய சாலைகளிலும், புறநகர் பிரதான சாலைகளிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
போக்குவரத்து காவலர்கள் கூடுதலாக பணியமர்த்தப்பட்டு, நெரிசலை சீர் செய்தனர். கிளாம்பாக்கம், கோயம்பேடு, மாதவரம், மறைமலை நகர், சிஎம்டிஏ காலநிலைப் பூங்கா உள்ளிட்ட பேருந்து நிலையங்களுக்கு வந்தவர்களுக்காகப் போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வாரத்தின் தொடக்கத்தில் ஆயுதபூஜை வந்த போதும், அதைத் தொடர்ந்து விஜயதசமி என தொடர் விடுமுறை இருப்பதால் பலரும் ஊர்களுக்கு பயணிக்க திட்டமிட்டனர். இதனால் மக்கள் கூட்டம் அலைமோதியது.
அதன்படி, கடந்த 15, 16, 17 ஆகிய 3 நாட்களில் வழக்கமான பேருந்துகளுடன், சிறப்புப் பேருந்துகளும் சேர்த்து மொத்தம் 10,277 பேருந்துகள் இயக்கப்பட்டன. அதன்மூலம் ரூ.4.25 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்குச் சென்றுள்ளனர். முன்பதிவு செய்தவர்கள் சம்பந்தப்பட்ட பேருந்திலும், அண்டை மாவட்டங்களில் வசிப்போர் மற்றும் முன்பதிவு செய்யாமல் வந்தவர்கள் பேருந்துக்காகக் காத்திருந்து பயணித்தனர்.
ஆம்னி பேருந்துகளிலும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் சொந்த ஊர்களுக்குப் புறப்பட்டனர். இதற்கிடையில் நேற்று மாலை முதல் பல்வேறு இடங்களில் மழை பெய்ததால், பேருந்து, ரயில் நிலையங்களுக்குச் செல்ல பொதுமக்கள் சிரமப்பட்டனர். மேலும், டோல்கேட்களில் வாகனங்கள் அதிகரித்ததால் தாமதம் ஏற்பட்டது.
இதற்கிடையே பண்டிகைக் காலத்தில் ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக எழுந்த புகார்களைத் தொடர்ந்து, போக்குவரத்து அதிகாரிகள் தமிழகம் முழுவதும் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். இதுவரை 1,222 ஆம்னி பேருந்துகளில் சோதனை நடத்தப்பட்டு விதிமீறலில் ஈடுபட்ட 207 பேருந்துகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
அதேபோல் ஆயுதபூஜை, விஜயதசமியை முன்னிட்டு ரயில்களில் சொந்த ஊர்களுக்குச் செல்வதற்காக ஏராளமானோர் முன்பதிவு செய்திருந்தனர். சென்னையில் இருந்து கன்னியாகுமரி, போத்தனூர், தாம்பரத்தில் இருந்து செங்கோட்டை உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்குச் சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டிருந்தன. இதன்காரணமாக, சென்னை எழும்பூர், சென்ட்ரல், தாம்பரம் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது. ரயில்களின் முன்பதிவில்லாத பெட்டிகளில் கட்டுக்கடங்காத கூட்டம் நிரம்பி வழிந்தது. அந்த வகையில் சென்னையில் இருந்து புறப்பட்ட ரயில்களில் கடந்த 3 நாட்களில் மட்டும் 4 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயணம் மேற்கொண்டனர்.
இதுதவிர கார், வேன் போன்ற சொந்த வாகனங்களிலும் ஏராளமானோர் விடுமுறையை கொண்டாட உற்சாகமாகப் பயணத்தை மேற்கொண்டனர். சனி, ஞாயிறு விடுமுறை மற்றும் திங்கட்கிழமை ஆயுத பூஜை என தொடர்ந்து விடுமுறை வந்ததால் சுமார் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டனர். பேருந்து, ரயில்களில் டிக்கெட் இல்லாததால் பலர் விமானங்களில் பயணித்து வருகின்றனர். இதனால் சென்னை விமான நிலையத்தில் கூட்டம் அதிகரித்துள்ளது. அதற்கேற்ப சென்னையில் இருந்து திருச்சி, மதுரை, தூத்துக்குடி, கோவை, சேலம் மற்றும் கேரளா, ஆந்திரா, கர்நாடகா செல்லும் விமானங்களில் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டு இருந்தன.
இதன் காரணமாக கோயம்பேடு, எழும்பூர், சென்ட்ரல், விமான நிலையம், போரூர், பூந்தமல்லி உள்ளிட்ட இடங்களுக்குச் சென்று அங்கிருந்து பேருந்து, ரயில், விமானம் மூலம் சொந்த ஊர்களுக்குச் செல்ல மெட்ரோ ரயில் நிலையத்திலும் கூட்டம் அலைமோதியது. பொதுவாக சென்னை மெட்ரோ ரயிலில் நாள்தோறும் 3 லட்சம் பேரும், வடபழனி - பூந்தமல்லி வழிதடத்தில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரும் பயணிக்கும் நிலையில், நேற்று முன்தினமும், நேற்றும் மெட்ரோ ரயில்களில் கூட்டம் நிரம்பி வழிந்தது. வெளியூர் சென்றவர்கள் திரும்பி சென்னை வருவதற்கும் கூடுதல் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.