

போகி பண்டிகை | கோப்புப் படம்
சென்னை: போகி பண்டிகையன்று பழைய பொருட்களை எரிப்பதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதுதொடர்பாக வாரிய தலைவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: நம் முன்னோர்கள் இயற்கையான தேவையற்ற பொருட்களைஎரித்து போகி பண்டிகையைக் கொண்டாடியதால் சுற்றுச்சூழல்பாதிக்கப்படாமல் இருந்தது.
ஆனால் தற்கால சூழலில் பிளாஸ்டிக் மற்றும் செயற்கை இழைத் துணிகள், ரப்பர், டயர் போன்றவற்றை எரிப்பதால் ஏற்படும் புகைமண்டலம், வாகன ஓட்டிகளுக்கு விபத்துகளை ஏற்படுத்துவதுடன், பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல், கண் எரிச்சல் உள்ளிட்ட உடல்நலப் பாதிப்புகளையும் உண்டாக்குகிறது. இத்தகைய செயல்கள் பொதுமக்களிடம் விழிப்புணர்வு இல்லாமையால் ஏற்பட்டு வந்தது.
இதைத் தொடர்ந்து கடந்த ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட விழிப்புணர்வு பிரச்சாரம் காரணமாக இத்தகைய பொருட்கள் எரிக்கப்படுவது பெருமளவு குறைந்துள்ளது. இந்த ஆண்டும் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன.
மேலும் சென்னையின் 15 முக்கிய இடங்களில் காற்றின் தரத்தை 24 மணி நேரமும் கண்காணிக்கவும், அதன் முடிவுகளை வாரியத்தின் இணையதளத்தில் வெளியிடவும் உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. எனவே பிளாஸ்டிக், டயர், ட்யூப் போன்றவற்றை எரிக்காமல் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் போகிப் பண்டிகையைக் கொண்டாட வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.