“தவெக எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கும் முயற்சி தற்போதும் நடக்கிறது” - அமைச்சர் நிர்மல் குமார்

கோப்புப் படம்

கோப்புப் படம்

Updated on
2 min read

சென்னை: தவெக எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கும் முயற்சிகள் தற்போதும் நடந்து கொண்டுதான் இருக்கிறது என்றும், சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தில் வெற்றி பெறுவதன் மூலம் இந்த அரசை கவிழ்த்துவிடலாம் என திமுக கருதுகிறது என்றும் அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.

மின்துறை அமைச்சர் நிர்மல் குமார் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: “மின்வாரிய ஒப்பந்தத் தொழிலாளர்கள் குறித்து கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஒப்பந்தத் தொழிலாளர்கள் எவ்வளவு பேர் இருக்கிறார்கள் என்பது தெரிந்த பிறகுதான் அவர்களை நிரந்தரப்படுத்துவது குறித்து ஒரு முடிவுக்கு வர முடியும். டிஎன்பிஎஸ்சி வழியாகத்தான் அரசுப் பணியாளர்களை நியமிக்க முடியும். இது தொடர்பாக பல்வேறு நீதிமன்ற உத்தரவுகள் உள்ளன. எனவே, சட்டப்படித்தான் அரசு செயல்பட முடியும்.

பழநி முருகன் கோயிலுக்குச் சொந்தமான நிலம் மோசடியாக பத்திரப் பதிவு செய்யப்பட்ட விவகாரத்தில் விரிவான விசாரணை தேவை. இந்த விசாரணை விரிவடைய வேண்டும். இதில், பலர் சம்பந்தப்பட்டிருக்க வாய்ப்புள்ளதாக நாங்கள் கருதுகிறோம். பழநியில் மட்டுமல்ல பல இடங்களில் போலி பத்திரப் பதிவு சம்பவங்கள் கடந்த 5 ஆண்டுகளாக நடந்துள்ளதாக நாங்கள் சந்தேகப்படுகிறோம். எனவே, இது தொடர்பான விசாரணை விரிவடைய வேண்டும். குற்றமிழைத்தவர்கள் கைது செய்யப்பட வேண்டும். கோயில் இடங்கள், நீர்நிலைகள் உள்ள இடங்களில் போலிப் பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஏராளமான புகார்கள் வந்துள்ளன. எனவே, இவை அனைத்தும் துரிதமாக விசாரிக்கப்பட வேண்டும்.

கடந்த ஐந்து ஆண்டுகளில் பத்திரப் பதிவு மோசடி தொடர்பாக ஒரு வழக்கு கூட பதிவு செய்யப்படவில்லை. தவெக அரசு வந்த பிறகுதான் இதில் நடந்துள்ள மோசடிகள் குறித்து விரிவாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பழநி நில மோசடி தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கு முந்தைய ஆட்சியில் இதுபோன்ற நடவடிக்கைகள் ஏதும் எடுக்கப்படவில்லை.

பழநி கோயில் நில போலிப் பத்திரப் பதிவு மிகவும் நுணுக்கமாக நடைபெற்று வருகிறது. இதுபோல் வேறு எங்கேனும் போலி பத்திரப் பதிவு நடைபெற்று இருந்தால் பொதுமக்கள் அதனை அரசின் கவனத்துக்குக் கொண்டு வர வேண்டும். அரசு விரிவான விசாரணையை நடத்தும்.

எங்கள் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கும் முயற்சியை திமுக தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. ரூ.40 கோடி, ரூ. 50 கோடி கொடுத்து எங்கள் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க அவர்கள் தொடர்ந்து முயற்சி செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். இந்த முயற்சி தொடர்பாக ரூ.2 கோடி ரூபாய்க்கும் மேலாக ரொக்கம் கைப்பற்றப்பட்டுள்ளது.

எங்கள் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க திமுக மற்றும் செந்தில் பாலாஜி சார்பாக கொடுக்கப்பட்ட பணம் ஆங்காங்கே பதுக்கிவைக்கப்பட்டுள்ளது. அந்த பணத்தை கைப்பற்றும் நடவடிக்கைகளை நாங்கள் எடுத்து வருகிறோம். நிறைய இடங்களில் இவ்வாறு பணத்தை அவர்கள் பதுக்கி வைத்திருக்கிறார்கள். இன்றளவும் அந்த முயற்சிகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. இந்த முயற்சியை ஸ்டாலின் கைவிட வேண்டும்.

சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர அவர்கள் திட்டமிட்டுள்ளார்கள். அதில் வெற்றி பெறுவதன் மூலம், இந்த அரசை பதவி நீக்கம் செய்ய அவர்கள் திட்டமிடுகிறார்கள்.

திருச்சி சிவா எப்போது வேண்டுமானாலும் மத்திய அமைச்சராகலாம் என்று அனிதா ராதாகிருஷ்ணன் கூறி இருப்பதை எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது. எங்களுக்குப் பின்னால் பாஜக இருக்கிறது, நாங்கள் அசைக்க முடியாத சக்தி என்று அவர் சொல்ல வருகிறாரா என்ற கேள்வி எழுகிறது” என்று நிர்மல் குமார் தெரிவித்தார்.

<div class="paragraphs"><p>கோப்புப் படம்</p></div>
“தமிழ்நாட்டை இந்தியாவின் முதன்மை மாநிலமாக உருவாக்கிட உறுதியேற்போம்” - முதல்வர் விஜய்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in