21 அதிமுக எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை இல்லை: சட்டப்பேரவைத் தலைவர் அறிவிப்பு

21 அதிமுக எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை இல்லை: சட்டப்பேரவைத் தலைவர் அறிவிப்பு
Updated on
1 min read

சென்னை: தவெகவுக்கு ஆதரவாக வாக்களித்த 21 அதிமுக எம்எல்ஏ.க்கள் மீது தகுதி நீக்க நடவடிக்கை இல்லை என்று சட்டப்பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் தெரிவித்தார்.

தவெக அரசு மீதான நம்பிக்கை கோரும் தீர்மானம் சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட்ட போது அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் தீர்மானத்துக்கு எதிராக வாக்களிக்க வேண்டுமென கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

ஆனால், இந்த உத்தரவை மீறி சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி தலைமையில் அதிமுக எம்எல்ஏக்கள் 25 பேர் தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர். எனவே, அவர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டுமென பழனிசாமி தரப்பில் சட்டப்பேரவைத் தலை வரிடம் மனு அளிக்கப்பட்டது.

இருதரப்பும் பரஸ்பரம் புகார்

இதேபோல் எஸ்.பி.வேலுமணி தரப்பிலும், பழனிசாமிக்கு எதிராக பேரவைத் தலைவரிடம் புகார் மனு கொடுக்கப்பட்டிருந்தது. இருதரப்பு மனுக்களையும் ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுப்பதாக பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் தெரிவித்தார்.

இதற்கிடையே இரண்டாக பிரிந்திருந்த அதிமுக பல்வேறு கட்ட ஆலோசனைகளுக்குப் பிறகு மீண்டும் ஒன்றிணைந்தது. அதைத்தொடர்ந்து, அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமியை, வேலுமணி அணியினர் சந்தித்து கொறாடாவின் உத்தரவை மீறி தவெகவுக்கு ஆதரவு அளித்தமைக்காக வருத்தம் தெரிவித்து முறைப்படி மன்னிப்பு கடிதம் வழங்கினர்.

மேலும், இருதரப்பினரும் பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகரை சந்தித்து, பரஸ்பரம் தாங்கள் கொடுத்த புகார் மனுக்களை திரும்பப் பெறுவதாக தெரிவித்தனர்.

இந்நிலையில் சட்டப்பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர், சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர் களிடம் நேற்று கூறியதாவது:

தவறுக்கு வருத்தம்

கடந்த மே 13-ம் தேதி நடைபெற்ற தவெக அரசின் மீதான நம்பிக்கை தீர்மானத்தின்போது, அதிமுக கொறடா பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக செயல்பட்டதாக அக்கட்சியைச் சேர்ந்த 25 எம்எல்ஏ.க்களை தகுதிநீக்கம் செய்யக்கோரி அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி தரப்பில் மனு அளிக்கப்பட்டது.

இந்த விவகாரம் தொடர்பாக பழனிசாமியிடம் இருந்து எங்களுக்கு 4 கடிதங்கள் வந்தன. அவை முழுமையாக ஆய்வு செய்யப்பட்டன. அதன்படி தகுதிநீக்கம் கோரப்பட்ட 25 உறுப்பினர்களில் 21 பேர் தாங்கள் செய்த தவறுக்கு வருத்தம் தெரிவித்ததாகவும், அதையேற்று அவர்களை மன்னித்துவிட்டதாகவும் பழனிசாமி தெரிவித்தார்.

இதையடுத்து பழனிசாமியின் கோரிக்கையை ஏற்று, அந்த 21 எம்எல்ஏ.க்கள் மீது எடுக்கப்பட இருந்த தகுதிநீக்க நடவடிக்கைகளை கைவிடுகிறேன். அவர்கள் மீதான மேல் நடவடிக்கைகள் அனைத்தும் இத்துடன் முடித்து வைக்கப்படுகிறது.

வாக்களித்தது செல்லுபடியாகும்

அதேநேரம் பதவியை ராஜினாமா செய்த 4 எம்எல்ஏ.க்கள் (இசக்கி சுப்பையா, சத்தியபாமா, மரகதம் குமரவேல், ஜெயக்குமார்) மீதான தகுதிநீக்க மனுக்கள் மீது விசாரணை மற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மேலும், தவெக அரசுக்கு ஆதரவாக அதிமுக எம்எல்ஏ.க்கள் வாக்களித்தது செல்லுபடியாகும். இவ்வாறு பேரவைத் தலை வர் கூறினார்.

21 அதிமுக எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை இல்லை: சட்டப்பேரவைத் தலைவர் அறிவிப்பு
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 10 ஜூன் 2026

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in