

பிரகதீஷ்
திருவாரூர்: இணையத்தில் அத்துமீறி பரவிய பெண்கள் தொடர்பான ஆபாச வீடியோ புகைப்படங்கள் மற்றும் அவதூறு போன்ற சைபர் குற்றங்களை கண்டறிந்து அவற்றை நீக்கிய தற்காக மன்னார்குடியைச் சேர்ந்த மென்பொறியாளர் நடத்திவரும் அமைப்புக்கு அசாம் மாநில காவல் துறை பாராட்டு தெரிவித்துள்ளது.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியைச் சேர்ந்த குருமூர்த்தி, செல்வி தம்பதியரின் மகன் பிரகதீஷ். மென்பொறியாளரான இவர் பெங்களூருவை தலைமை இடமாகக் கொண்டு ஷெட்பீக் (Zetpeak ) என்ற சாப்ட்வேர் நிறுவனம் நடத்தி வருகிறார்.
இதன் ஒருபகுதியாக சைபர் க்ரைம் தடுப்பு மற்றும் பதிலளிப்பு முகமை (Cyber Crisis Response Agency ) என்ற அமைப்பை நிறுவி, இணையத்தில் அத்துமீறி பரவும் பெண்கள், குழந்தைகள் தொடர்பான ஆபாச வீடியோக்கள், புகைப்படங்கள் மற்றும் தனிமனித அவதூறுகள் போன்ற சைபர் குற்றங்களை கண்டறிந்து, அவற்றை அகற்றும் சேவையை செய்து வருகிறார்.
இந்நிலையில், அசாம் மாநிலத்தில் காவல் துறை உதவி கோரியதன் அடிப்படையில், இணையத்தில் அத்துமீறி பரவிய, 200-க்கும் மேற்பட்ட உள்ளடக்கங்களை பிரகதீஷ் மற்றும் அவரது குழுவினர் இணைந்து அகற்றியுள்ளனர். இதையடுத்து, பிரகதீஷ் மற்றும் குழுவினரை அம்மாநில சைபர் க்ரைம் போலீஸ் எஸ்பி சி.ஆர்.சிங் பாராட்டி கடிதம் அனுப்பியுள்ளார்.
அந்தக் கடிதத்தில் கூறியிருப்பதாவது: இணையத்தில் அத்து மீறி பரவிய 200-க்கும் மேற்பட்ட உள்ளடக்கங்களை அகற்றியுள்ள உங்களது குறிப்பிடத்தக்க சாதனையை நாங்கள் அங்கீகரித்து பாராட்டுகிறோம். உங்களது நடவடிக்கைகள், எண்ணற்ற பெண்களின் கண்ணியம், தனியுரிமை மற்றும் பாதுகாப்பை காப்பதில் முக்கிய பங்காற்றியுள்ளன. மேலும், சமூகத்தில் ஏற்படக்கூடிய தொடர்ச்சியான பாதிப்புகளையும் தடுக்க உதவியுள்ளன.
இணையக் குற்றங்களும், ஆன்லைன் சுரண்டல்களும் வேகமாக அதிகரித்து வரும் இக்காலகட்டத்தில் உங்கள் செயல்பாடானது, தைரியம், பொறுப்புணர்வு மற்றும் மனித நேயத்தின் சிறந்த முன்னுதாரணம் ஆகும். பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் அவர்களது உரிமையை வலுப்படுத்தி, மரியாதையான டிஜிட்டல் சூழலை உருவாக்கும் எங்களது முயற்சிக்கு தாங்கள் வழங்கி வரும் ஆதரவை அசாம் காவல்துறை பெரிதும் மதிக்கிறது.
இந்த பணியில் நீங்கள் தொடர்ந்து வெற்றி பெற எங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். உங்களுக்கு எங்களது தொடர்ச்சியான ஆதரவு எப்போதும் உண்டு. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பிரகதீஷ் கூறும்போது, டிஜிட்டல் குற்றங்களை பொருத்தவரை விரைவாக செயல்பட்டால்தான் குற்றத்தை முற்றிலும் தடுப்பதுடன், இணையத்திலிருந்து அகற்றி பாதிப்புகளை குறைத்து, விரைவாக தீர்வு காணமுடியும். அந்தப் பணியைதான் செய்கிறோம் என்றார்.
மன்னார்குடியில் தனியார் பள்ளியில் 2020-ம் ஆண்டில் பிரகதீஷ் 12-ம் வகுப்பு படிக்கும்போதே, இணைய வழியில் சைபர் குற்றங்கள் தொடர்பாக ஒரு நிறுவனத்தை தொடங்கி நடத்தினார். இளம்வயதில் மென்பொருள் நிறுவனம் நடத்திவருவதை பாராட்டி, லிம்கா புக் ஆப் ரெக்கார்ட் அமைப்பு சான்றிதழையும் பெற்றிருந்தார். இதை அறிந்த அப்போதைய திருவாரூர் எஸ்.பி. துரை ஏற்பாட்டின்பேரில், சைபர் குற்றங்களை கையாள்வது தொடர்பாக திருவாரூர் மாவட்ட காவல் துறையினருக்கு பிரகதீஷ் பயிற்சி அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.