

'அர்னாப்' புயலின் பயண கணிப்பு வழித்தடம்
சென்னை: வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று ‘அர்னாப்’ புயலாக வலுப்பெறும். ஆந்திராவில் அக்.28-ம் தேதி கரையைக் கடக்கும். அப்போது, மணிக்கு 140 கி.மீ. வேகத்தில் பயங்கர சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இதுதொடர்பாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மத்திய கிழக்கு, அதை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாகக் கடந்த 24-ம் தேதி வலுப்பெற்றது.
இது தெற்கு திசையில் நகர்ந்து நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது இன்று (அக்.26) காலை மேலும் வலுப்பெற்று மத்திய கிழக்கு, அதை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ‘அர்னாப்’ புயலாகவும், நாளை (அக்.27) மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் தீவிர புயலாகவும் வலுப்பெறக் கூடும்.
இது வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுப்பெற்று மிக தீவிர புயலாக ஆந்திர கடலோரப் பகுதிகளுக்கு அருகே மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளை அடையக் கூடும். ஆந்திரா, ஏனாம் கடற்கரைப் பகுதிகளில் பாபட்லா - விசாகப்பட்டினம் இடையே மிக தீவிர புயலாக 28-ம் தேதிமுற்பகல் கரை கடக்கக்கூடும்.
அப்போது, மணிக்கு 115 முதல் 125 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 140 கி.மீ. வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும். இதற்கிடையே, தென்கிழக்கு அரபிக் கடலில் லட்சத்தீவு பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி தற்போது கேரளப் பகுதிக்கு நகர்ந்துள்ளது. அந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியில் இருந்து கேரளாவழியாக வட தமிழகக்கடலோரப் பகுதிகள்வரை ஒரு காற்றழுத்த தாழ்வுப் பாதை நிலவுகிறது.
இதன் காரணமாக இன்று புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் இடி, மின்னல், பலத்த காற்றுடன் கன முதல் மிக கனமழை பெய்யக் கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் இடி, மின்னல், பலத்த காற்றுடன் கனமழை பெய்யக் கூடும்.
மற்ற மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. நாளை (அக்.27) ராமநாதபுரம் மாவட்டத்தில் கனமழையும், மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் மிதமான மழையும் பெய்யக் கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
இன்று தமிழகக் கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகளிலும், 27, 28-ம் தேதிகளில் வட தமிழக கடலோரப் பகுதிகளிலும் மணிக்கு 35-45 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். இவ்வாறு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.