இடைத்தேர்தலில் தவெகவுக்கு ஆதரவு? - புதுச்சேரி காங்கிரஸ் அலுவலகத்தில் நிர்வாகிகள் வாக்குவாதம்

இடைத்தேர்தலில் தவெகவுக்கு ஆதரவு? - புதுச்சேரி காங்கிரஸ் அலுவலகத்தில் நிர்வாகிகள் வாக்குவாதம்
Updated on
1 min read

புதுச்சேரி: புதுச்சேரியில் காங்கிரஸ் அலுவலகத்தில் கிரிஷ் சோடங்கர் முன்பாக நிர்வாகிகள் வாக்குவாதத்தில் இன்று ஈடுபட்டனர்.

புதுச்சேரி காங்கிரஸ் அலுவலகத்தில் தேர்தல் தோல்விக்கான ஆலோசனைக் கூட்டம் இன்று இரவு நடைபெற்றது. இதில் காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் நட்பு போட்டி என கூட்டணி கட்சிகள் தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிட்டு படுதோல்வி அடைந்து ஒரு தொகுதியில் மட்டுமே வென்றது. மாநிலத் தலைவர் எம்பி வைத்திலிங்கம் டெபாசிட் இழந்தார்.

இதையடுத்து மாநிலத் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக கட்சித் தலைமைக்கு கடிதம் அனுப்பினார். அக்கடிதம் இன்னும் ஏற்கப்படவில்லை.

தேர்தல் தோல்விக்கான காரணத்தை ஆராய கூட்டம் நடத்தப்படும் என்று வைத்திலிங்கம் சொல்லியிருந்தார். இந்நிலையில் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் முன்னிலையில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் நிர்வாகிகள் காரசாரமாகப் பேசியதாகத் தெரிகிறது.

குறிப்பாக மாநிலத் தலைவர் எம்பி வைத்திலிங்கம் நிர்வாகிகள் சிலரை நீக்கியுள்ளார். அதற்கு அவருக்கு அதிகாரமில்லை என நிர்வாகிகள் கிரிஷ் சோடங்கரை சந்திக்க வந்தபோது அனுமதிக்க மறுத்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் நிர்வாகிகள் பலரை கிரிஷ் சோடங்கர் தனித்தனியாக சந்தித்தார்.

மேலும் வைத்திலிங்கம் ராஜினாமா ஏற்கப்பட்டதா என்பது பற்றியும் கேள்வி எழுப்பினர். வைத்திலிங்கத்துக்கு ஆதரவாக அவர் தொடரவும் பலர் வலியுறுத்தினர். வைத்திலிங்கத்துக்கு எதிராகவும் கருத்துகளை நிர்வாகிகள் தெரிவித்தனர். தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவளிக்கும் என்று வைத்திலிங்கம் கூறியுள்ளது பற்றியும் கேள்வி எழுப்பினர்.

அத்தொகுதியில் காங்கிரஸ் போட்டியா? தவெகவுக்கு ஆதரவு அளிக்கலாமா? என்பது பற்றியும் விவாதிக்கப்பட்டது. பின்னர் மறைந்த நிர்வாகி தேவதாஸ் வீட்டுக்கு கிரிஷ் சோடங்கர் சென்று அஞ்சலி செலுத்தினார். அதைத்தொடர்ந்து நாளையும் புதுச்சேரியில் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

இடைத்தேர்தலில் தவெகவுக்கு ஆதரவு? - புதுச்சேரி காங்கிரஸ் அலுவலகத்தில் நிர்வாகிகள் வாக்குவாதம்
“மாணவர் கொல்லி நீட் தேர்வை ஒழிப்பது மட்டும்தான் ஒரே தீர்வு” - அன்புமணி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in