சுயசான்று மூலம் குடியிருப்புகள் கட்டுவதற்கு அனுமதி பெற 5,000 சதுரஅடியாக பரப்பளவு உயர்வு: அமைச்சர் ராஜ்குமார் அறிவிப்பு

சுயசான்று மூலம் குடியிருப்புகள் கட்டுவதற்கு அனுமதி பெற 5,000 சதுரஅடியாக பரப்பளவு உயர்வு: அமைச்சர் ராஜ்குமார் அறிவிப்பு
Updated on
2 min read

சென்னை: தமிழகத்தில் சுயசான்று மூலம் குடியிருப்புகள் கட்ட கட்டிட அனுமதி பெறுவதற்கான பரப்பளவு தற்போதுள்ள 3,500 சதுரஅடியில் இருந்து 5 ஆயிரம் சதுரஅடியாக உயர்த்தப்படும் என்று அமைச்சர் ப.ராஜ்குமார் அறிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில், நேற்று வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை சார்பில் அறிவிப்புகளை அமைச்சர் ப.ராஜ்குமார் வெளியிட்டார்.

அதன் விவரம் வருமாறு: தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சார்பில் சுயநிதி திட்டத்தின் கீழ் சென்னை அண்ணா நகர், புரசைவாக்கம், நந்தனம், எர்ணாவூர், கடலூர் மாவட்டம் குண்டு சாலை, மதுரை மாவட்டம் எல்லீஸ் நகர், திருவள்ளூர் மாவட்டம் திருமழிசை, கன்னியாகுமரி மாவட்டம் வள்ளன்குமாரவிளை ஆகிய இடங்களில் ரூ.914 கோடியில் 842 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படும்.

மனை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.45 கோடியில் சென்னை வளசரவாக்கம், சோழிங்க நல்லூர், திருவான்மியூர், கிருஷ்ணகிரி - ஓசூர், கடலூர் - வெளிச்சமண்டலம், சேலம் - எடப்பாடி, ராணிப்பேட்டை - ஆற்காடு, நாமக்கல் - காடச்ச நல்லூர், மதுரை - எல்லீஸ் நகர், திண்டுக்கல் - செட்டிநாயக் கன்பட்டி ஆகிய இடங்களில் 564 மனைகள் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தால் மேம்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்படும்.

தரைதளம் மற்றும் 2 தளம், தூண் தளம் மற்றும் 3 தளம் கொண்ட குடியிருப்பு கட்டிடங்களுக்கான கட்டிட அனுமதி, சுயசான்றிதழ் மூலம் குடியிருப்பு கட்டிடங்கள் கட்டிட அனுமதி பெறுவதற்கான பரப்பளவு தற்போதுள்ள 3,500 சதுரஅடியில் இருந்து 5 ஆயிரம் சதுரஅடியாக உயர்த்தப்படும்.

மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் குடியிருப்பு கட்டிட அனுமதிக்கான அதிகாரம் தற்போதுள்ள 10 ஆயிரம் சதுர அடியில் இருந்து 16,140 சதுர அடியாக உயர்த்தப்படும்.

பேரூராட்சிகள் மற்றும் கிராம ஊராட்சிகளில் 10 ஆயிரம் சதுர அடியில் இருந்து 12,912 சதுர அடியாக உயர்த்தப்படும். சிறிய வணிக கட்டிடங்களுக்கு சுய சான்றளிப்பு மூலம் திட்ட அனுமதி வழங்கும் நடைமுறை அறிமுகப்படுத்தப்படும்.

பொதுமக்கள் உள்ளாட்சி அலுவலகங்களுக்கு செல்லாமல் எளிதாக கட்டிட அனுமதி பெறும் வகையில் 8,070 (750 சமீ) எஃப்எஸ்ஐ பரப்பு வரையுள்ள குடியிருப்பு கட்டிடங்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட 3-ம் தரப்பினர் மூலம் கட்டிட விதிகள் முறையாக பின்பற்றப்படுவதை உறுதிசெய்து கட்டிட அனுமதி வழங்கும் நடைமுறை முதல் முறையாக அறிமுகப்படுத்தப்படும்.

அதேபோல், வணிக கட்டிடங்களில் 3,230 சதுரஅடி எஃப்எஸ்ஐ பரப்பு வரையுள்ள கட்டிடங்களுக்கும் 3-ம் தரப்பு சான்றளிப்பு மூலம் கட்டிட அனுமதி முறை அறிமுகப்படுத்தப்படும். கோயம்பேடு காய்கறி அங்காடியில் 22 ஆயிரம் சதுரஅடி பரப்பளவில் ரூ.7.50 கோடியில் புதிய கடைகள் கட்டப்படும்.

ரூ.10 கோடியில் பிரத்யேக குடிநீர் இணைப்புகள் அமைக்கப்படும். நகர்ப்புறங்களில் உள்ள நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் 20 திட்டப் பகுதிகளில் சிதிலமடைந்த அடுக்குமாடி குடியிருப்புகளை இடித்துவிட்டு புதிதாக 12,648 அடுக்குமாடி குடியிருப்புகள் மறு கட்டுமானம் செய்யப்படும்.

சென்னை பெரம்பூரில் சாலையோரங்கள் இதர ஆட்சேபகரமான பகுதிகளில் வாழும் குடும்பங்கள் மற்றும் ஏழை எளிய வீடற்ற குடும்பங்களுக்கான 462 அடுக்குமாடி குடியிருப்புகள் ரூ.111.08 கோடியில் கட்டப்படும்.

ஆட்டோ டாக்ஸி செயலி

ஆட்டோ மற்றும் டாக்ஸி ஓட்டு நர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும், ஆட்டோ, டாக்ஸி பயணிகளுக்கு நியாயமான பயணத்தொகையை உறுதி செய்யவும் டிஜிட்டல் மீட்டர் உள்ளடக்கிய ஆட்டோ டாக்ஸி செயலி சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து அதிகார அமைப்பால் உருவாக்கப்படும் என்பன உள்ளிட்ட 28 அறிவிப்புகளை அவர் வெளியிட்டார்.

சுயசான்று மூலம் குடியிருப்புகள் கட்டுவதற்கு அனுமதி பெற 5,000 சதுரஅடியாக பரப்பளவு உயர்வு: அமைச்சர் ராஜ்குமார் அறிவிப்பு
அமைப்பு ரீதியிலான 110 மாவட்டங்கள் பட்டியல்: திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டார்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in