தவெக அமைச்சரவையில் விசிக: ஆ.ராசாவின் கண்டன ட்வீட்களால் சர்ச்சை

ஆ.ராசா
ஆ.ராசா
Updated on
2 min read

சென்னை: தவெக அமைச்சரவையில் விசிக இடம்பெற்றுள்ள நிலையில் அதை விமர்சித்து திமுக எம்.பி. ஆ.ராசா பதிவு செய்த ட்வீட்கள் சர்ச்சையாகியுள்ளன.

தமிழக சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் விஜய் தலைமையிலான தவெக 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக ஆட்சியமைக்க உரிமை கோரியது. ஆட்சியமைக்கத் தேவையான 118 இடங்களுக்காக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விசிக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐயூஎம்எல்) ஆகிய கட்சிகளின் ஆதரவைப் பெற்றது.

ஆரம்பத்தில் விசிக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐயூஎம்எல்) கட்சிகள் வெளியில் இருந்து ஆதரவு என்று அறிவித்த நிலையில் தவெகவின், முதல்வர் விஜய்யின் கோரிக்கைகளை ஏற்று இரண்டு கட்சிகளும் அமைச்சரவையில் இணைந்தன.

இதனையடுத்து, விசிகவின் வன்னியரசு, ஐயூஎம்எல் கட்சியின் ஷாஜஹானுக்கு அமைச்சர்களாக, இன்று ஆளுநர் ஆர்.வி.அர்லேகர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இவர்களுக்கான இலாகாவும் ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஐயூஎம்எல் கட்சியின் ஷாஜஹான் சிறுபான்மை நலத்துறை அமைச்சராகவும், விசிகவின் வன்னியரசு சமூகநீதித் துறை அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

இந்நிலையில், தவெக அமைச்சரவையில் ஐயூஎம்எல், விசிக இடம்பெறுவது குறித்து ஆ.ராசாவின் கண்டன ட்வீட்கள் சர்ச்சையைக் கிளப்பியுள்ளன. நேற்றிரவு 11.16 மணிக்கு ஆ.ராசா தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவைப் பகிர்ந்தார்.

அதில் அவர்,

முன் ‘ஏற’ தரப்பட்ட ‘ஏணியும்’

மூட சாதியை நொறுக்க வேண்டிய

‘சிறுத்தையும்’

வெறும் ‘விசில்' சத்தத்திற்கு

முட்டுக் கொடுக்குமென்றால்;

பூ முடித்தவனை புறந்தள்ளி -

புணர்ச்சிக்கு வேறிடம்

தேடுவதில் தவறில்லை!

பெரியாரின் ‘காலதேச வர்த்தமான’த்திற்கு

காத்திருப்போம்; என்றாலும் களமாடுவோம்!

வெற்றி நமக்கே - என்று குறிப்பிட்டிருந்தார்.

ஆ.ராசாவின் இந்த ட்வீட் பரவலாக கடும் கண்டனங்களை சம்பாதித்தது. பெண்களை அவமதிக்கும் வகையில் அவர் அவதூறு பேசியிருப்பதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் அந்தப் பதிவை ஆ.ராசா நீக்கினார்.

தொடர்ந்து இன்று காலை அவர் மற்றுமொரு ட்வீட்டை பதிவு செய்துள்ளார். அதில் அவர், “என் வீட்டுத் தோட்டத்துத் தென்னை கூனி வளைந்து எதிர் வீட்டிற்கு இளநீர் தந்தால் இலக்கியத்தில் அதற்குப் பெயர் ”முடத்தெங்கு”! அரசியலில் என்ன பெயர் சூட்டலாம்? வாழ்க தமிழ்!” என்று பதிவிட்டுள்ளார்.

ஆ.ராசாவின் இந்த இரண்டு ட்வீட்களுமே கடும் விமர்சனங்களைப் பெற்று வருகின்றன.

கடந்த செப்டம்பர் 2024-ல், விசிக தலைவர் திருமாவளவனின் சமூக வலைதளப்பக்கத்தில், ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்று விசிக தலைவர் திருமாவளவன் பேசிய பழைய வீடியோவானது , வெளியிடப்பட்டு சிறுது நேரத்திலேயே நீக்கப்பட்டது.

அந்த வீடியோவில், ”எதிர்த்து பேசக்கூடாது, போராடக்கூடாது, கல்வியில் உயர்ந்துவிடக்கூடாது, உயர்ந்த பதவிக்கு ஆசைப்படக் கூடாது, ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்கக்கூடாது . தமிழ்நாட்டில் இதற்குமுன் கூட்டணி ஆட்சி என்ற குரலை உயர்த்தினார்களோ இல்லையோ 2016ல் கூட்டணி ஆட்சி என்ற குரலை உயர்த்தியது விசிகதான் அமைச்சரவையில் இடம் வேண்டும் என்பது பவர் ஷேர், கூட்டணியில் இடம் வேண்டும் என்பது சீட் ஷேர்,

ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு இதுதான் 1999ஆம் ஆண்டில் விசிக முன்வைத்த முழக்கம். முதன் முதலில், நெய்வேலியில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கும்போது கடைசி மனிதனுக்கும் ஜனநாயகம், எளிய மக்களுக்கும் அதிகாரம் என்ற முழக்கத்தை முன்வைத்தேன். அதிகாரத்தை மக்களுக்கு கொடுக்க வேண்டும். அதிகாரம் தனிமனிதனுக்கு இல்லை.” என்று திருமாவளவன் பேசியிருப்பார்.

அப்போதே வரவிருக்கும் 2026 தேர்தலில் விசிக இதை நோக்கி நகரும் என்று பேசப்பட்டது. இந்த வீடியோ வெளியானபோது வெளிநாட்டில் இருந்த அப்போதைய முதல்வர் ஸ்டாலின் சென்னை திரும்பியதும், திருமாவளவன் அவரை நேரில் சந்தித்துப் பேசினார். ஆனால் அது மது ஒழிப்பு மாநாட்டுக்கான அழைப்பு தொடர்பானது என்று முடிக்கப்பட்டது.

இப்போது ஆட்சி மாறியுள்ள நிலையில், காட்சிகளும் மாறியுள்ளது. தவெக அமைச்சரவையில் விசிக இடம்பெற்றுள்ளது. விசிகவின் நீண்டகால கனவு நனவாகியுள்ளது. இந்த நிலையில் ஆ.ராசாவின் நேற்றைய ட்வீட் அரசியல் முதிர்ச்சியற்றதாக இருப்பதாக கண்டனக் குரல்கள் எழுந்துள்ளன.

ஆ.ராசா
தவெக அமைச்சரவையில் இணைவதாக விசிக அறிவிப்பு - அமைச்சர் ஆகிறார் வன்னி அரசு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in