தவெக அமைச்சரவையில் இணைவதாக விசிக அறிவிப்பு - அமைச்சர் ஆகிறார் வன்னி அரசு

திருமாவளவன் கூறியது என்ன?
தவெக அமைச்சரவையில் இணைவதாக விசிக அறிவிப்பு - அமைச்சர் ஆகிறார் வன்னி அரசு
Updated on
2 min read

சென்னை: “தவெக அமைச்சரவையில் இடம்பெறுவது என்ற முடிவை எடுத்துள்ளோம். எங்கள் கட்சியின் சார்பில் வெற்றிபெற்ற இரு சட்டப்பேரவை உறுப்பினர்களில் வன்னியரசுவின் பெயரை அமைச்சராக்க பரிந்துரைத்துள்ளோம்” என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக தலைவர் திருமாவளவன், “தவெக அமைச்சரவையில் பங்கேற்க அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வெளிப்படையாக அழைப்பு விடுத்தார். அதன்பின்னர் கட்சியின் முன்னணி பொறுப்பாளர்களுடன் ஆலோசனை செய்தோம். அதில் பெரும்பாலானோரின் கருத்தின் அடிப்படையில் தவெக அமைச்சரவையில் இடம்பெறுவது என்ற முடிவை எடுத்துள்ளோம்.

எங்கள் கட்சியின் சார்பில் வெற்றி பெற்ற இரு சட்டப்பேரவை உறுப்பினர்களில் வன்னியரசுவின் பெயரை அமைச்சராக்க பரிந்துரைத்துள்ளோம். இப்போது அமைச்சரவையில் நாங்கள் இடம்பெறுகிறோம் என்ற அறிவிப்பை மட்டும் நாங்கள் வெளியிடுகிறோம். திமுக கூட்டணி உள்ளிட்ட மற்ற விஷயங்கள் குறித்து பின்னர் விரிவாக பேசுவோம்.

கடந்த மே 8-ஆம் தேதி நடந்த விசிக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், ஒரு சிலரை தவிர அனைவரும் தவெக அமைச்சரவையில் பங்கேற்குமாறு கேட்டுக்கொண்டனர். அதன்பின் பொதுச் செயலாளர்களுடன் கலந்துப் பேசி தவெகவுக்கு வெளியிலிருந்து ஆதரவளிப்பதாக தெரிவித்தோம். ஆனாலும் கட்சியின் முன்னணி பொறுப்பாளர்கள் அமைச்சரவையில் இடம்பெற வேண்டும் என மீண்டும் மீண்டும் வலியுறுத்தினர்.

இந்தச் சூழலில் தவெக தரப்பில் அமைச்சரவையில் பங்கேற்குமாறு வெளிப்படையாக வேண்டுகோள் விடுத்தோம்.

நாங்கள் 1999-ல் மூப்பனாரோடு தேர்தல் அரசியலில் நாங்கள் அடியெடுத்து வைத்தபோது ‘ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு’ என குரல் கொடுத்தோம். முதன்முறையாக கூட்டணி ஆட்சி குறித்து பேசியவர்கள் நாங்கள். இப்போது தவெக கூட்டணி ஆட்சிக்கு அழைப்பு விடுத்ததை கருத்தில் கொண்டு, கட்சியின் நீண்டகால கனவையும் கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்துள்ளோம்” என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

அமைச்சரவையில் ஐயூஎம்எல்

முன்னதாக, தமிழகத்தில் தவெக தலைமையிலான அமைச்சரவையில், ஐயூஎம்எல் கட்சி முறைப்படி இடம்பெற முடிவு செய்தது. அதன்படி, பாபநாசம் தொகுதி எம்.எல்.ஏ-வான ஷாஜகானுக்கு அமைச்சரவையில் இடம் ஒதுக்கக் கோரி தவெக தலைமையிடம் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தேசியத் தலைவர் காதர் மொகிதீன் அறிவித்தார்.

இது குறித்து காதர் மொகிதீன் கூறுகையில், “தமிழக அமைச்சரவையில் முஸ்லிம் லீக் எம்.எல்.ஏ-க்கள் இடம்பெற பெருந்தன்மையுடன் அழைப்பு விடுத்த தவெக தலைமைக்கு எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். அமைச்சரவையில் பங்கேற்பது தொடர்பாக கட்சியின் அரசியல் ஆலோசனைக் குழு மற்றும் அகில இந்திய அமைப்பின் ஒப்புதலைப் பெற்று, அவசர ஆலோசனைக் கூட்டத்தைக் கூட்டினோம். அதில், தவெக அமைச்சரவையில் முஸ்லிம் லீக் இடம்பெறுவதை ஏகமனதாக ஆதரிப்பது என்றும், அவர்கள் வழங்கும் அமைச்சர் பதவியை ஏற்றுக்கொள்வது என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எங்கள் கட்சிக்கு தற்போது 2 எம்.எல்.ஏ-க்கள் இருக்கும் நிலையில், முதற்கட்டமாக ஒருவரை அமைச்சரவைக்கு அனுப்ப முடிவு செய்துள்ளோம். அதன்படி, பாபநாசம் தொகுதி எம்.எல்.ஏ ஷாஜகான் பெயரை பரிந்துரைக்க ஒருமனதாகத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 2 அமைச்சர் பதவிகள் ஒதுக்கினால் நன்றாக இருக்கும். அதுகுறித்து தவெக தலைமையிடம் பின்னர் பேசுவோம். தவெக அமைச்சரவையில் பங்கேற்றாலும், திமுகவுடன் என்றும் உற்ற தோழனாக இருப்போம்; எங்களின் தேர்தல் கூட்டணி திமுகவுடன் தொடர்ந்து நீடிக்கும்” என்று தெரிவித்தார்.

தவெக அமைச்சரவையில் இணைவதாக விசிக அறிவிப்பு - அமைச்சர் ஆகிறார் வன்னி அரசு
கமலி முதல் மரிய வில்சன் வரை: 23 அமைச்சர்களின் பின்புலக் குறிப்புகள்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in